திருவண்ணாமலையில் தீபத் திருவிழா! பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்!!


கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில்  நவம்பர் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வந்தது. தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில்!

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் ஆகிய இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை 4.00 மணிக்கு சுவாமி சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றப்பட்டது. இதற்கு பரணி தீபம் எனக் கூறப்படுகிறது. மாலையில் திருவண்ணாமலை மலையின் மீது மகாதீபம் ஏற்றபடுவதையொட்டி தீப மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் சிவபெருமான் எழுந்தருளச் செய்யப்பட்டார். அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம்!

மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட போது திருவண்ணாமலையில் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என விண்ணதிற முழுக்கமிட்டனர். திருவண்ணாமலையில் வசிக்கும் மக்கள் மகா தீப தரிசனம் கண்ட பிறகு தங்களின் வீடுகளுக்கு சென்று வீடு முழுவதும் தீபம் ஏற்றியும், மா விளக்கு ஏற்றியும் பூஜை செய்து வழிபட்டு தங்களின் விரதத்தை நிறைவு செய்தனர்!