
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். இக்கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. இந்த திருவிழாவின் ஏழாவது நாள் பஞ்சரத மகா தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருக்கார்த்திகை திருவிழாவின் ஏழாவது நாளான இன்று (21.11.26) பஞ்சரத மகா தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிகளின்படி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் சமேத உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு வண்ண மலர்களால் மலர் மாலைகள் சூடப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விநாயகர் தேரில் எழுந்தருளி நான்கு மாட விதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அவரை தொடர்ந்து முருகர் வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பின்னர் 58.8 அடி உயரம் கொண்ட சுமார் 200 டன் எடையுள்ள மரதேரில் ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் தேரில் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேரோட்டம் மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேரோட்டம் ஆகியவை நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்!