கடலூர் மாவட்டம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி வட்டங்களில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் சம்பா நெற்பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில்
குமராட்சி வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 27,000 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வட்டாரத்தில் முக்கிய நீர்பாசன ஆதாரமாக விளங்கும் வடக்கு ராஜன் வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் மூலம் 19,835 ஏக்கர் நீர் பாசனம் நடைபெறுவது வழக்கம். மீதமுள்ள 7165 ஏக்கர் ஆழ்துளை கிணறுகள் மூலம் பாசனம் நடைபெறுகிறது. தற்போது பயிர் நிலை 55-65 நாட்கள் கடந்த நிலையில் போதிய மழையின்றி கீழனையிலிருந்து வடக்கு ராஜன் வாய்க்காலில் முற்றிலும் பாசனத்திக்காக திறக்கப்படவில்லை, மற்றும் போதிய மழையின்றி ஈரப்பதம் இல்லாமல் இதேநிலை ஒரு வார காலம் தொடர்ந்தால் பயிர் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட வாய்புள்ளதால் வேளாண்மைத்துறை மற்றும் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் ஒருங்கிணைந்து குமராட்சி அருகே உள்ள எடையார் கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் ஈரப்பதம் இல்லாத பயிர்களுக்கு திரவ நுண்ணுயிர் மெத்தைலோ பாக்டீரியம் (methylo bacterium) தெளிப்பது குறித்து செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தினார்கள். ட்ரோன் மூலம் மெத்தைலோ பாக்டீரியம்1 சதவீதம் ( ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி) இலைவழி தெளிப்பு செய்து விவசாயிகள் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதன் மூலம் நெற்பயிர் வறட்சியால் வாடும் நிலையில் உள்ள பயிர்கள் 10-15 நாட்கள் பச்சையம் விடாமல் பயிரை பாதுகாத்து வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். இது குறித்து விருதாச்சலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமையேற்று பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் செயல்பாடு, முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்! குமராட்சி வேளாண் உதவி இயக்குநர் தமிழ்வேல் பிபிஎப்எம், தெளிக்கும் முறை, பயன்பாடு குறித்தும் விளக்கமளித்தார். இச்செயல் விளக்க நிகழ்ச்சியில் விஞ்ஞானி சத்தியநாராயணன் , உதவி விதை அலுவலர் ராமச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சண்முகசுந்தரம், சின்னசாமி, உதவி தொழில் நுட்ப அலுவலர் எட்வின் அனால்டு மற்றும் எடையார், நடுத்திட்டு, வௌவால்தோப்பு கிராம விவசாயிகள் பங்கேற்று கண்டுனர்ந்தனர்.