சிதம்பரம் நடராஜர் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா!


உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நவவீரர்கள் வீதிஉலா விமரிசையாக நடைபெற்றது.

சிதம்பரத்தில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு செங்குந்த மரபினர் நவவீரர்கள் வேடமணிந்து வீதியுலா வந்தனர்!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் மேலகோபுர வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளிதேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமரப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த நவ.10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் முருகன் பெருமைகள் குறித்து தொடர் ஆன்மீக சொற்பொழிவுகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நவ.15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சிதம்பரம் தெற்குரதவீதியில்  சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு முன்னதாக செங்குந்த மரபினர்கள் நவவீரர்கள் வேடமணிந்து பாவாமுதலியார் தெருவிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்றடைந்தனர். அங்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு சிதம்பரம் தெற்குரதவீதியில் சூரணை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் காட்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான பொதுமக்கள் பங்கேற்று மகாசூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர். சூரனை சம்ஹாரம் செய்தபிறகு வெள்ளிமயில் வாகனத்தில் ஸ்ரீமுத்துக்குமரப் பெருமான் செங்குந்த நவவீர்கள் புடைசூழ வீதியுலா வந்தார்.  விழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள்  மற்றும் செங்குந்த மரபினர் செய்திருந்தனர். நவ.16-ம் தேதி திங்கள்கிழமைமை இரவு தேவசபை எனும் பேரம்பலத்தில் வேடமங்கை வேழவேங்கை வேலவர் திருக்கல்யாண மஹோற்சவம் மற்றும் வீதியுலா நடைபெறுகிறது.