
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவக் கோலத்தில் அருள் பாலித்து வருகின்றார். நடராஜப் பெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆனந்த தாண்டவமாடி அருள்பாலித்ததால் திருவாதிரை நட்சத்திரம் நடராஜப் பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதனையொட்டி சிதம்பரம் ஸ்ரீசிதம்பரேச சத்சங்கம் சார்பில் ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்படுகிறது. சிதம்பரம் கீழவீதியில் உள்ள யக்ஞ மண்டலி அரங்கில் கார்த்திகை மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிதம்பரேச சத்சங்க அமைப்பாளர் கிருஷ்ணசாமி தீட்சிதர் தலைமை தாங்கினார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியும், சொற்பொழிவாளரான கீர்த்தனா நாராயணன் கலந்து கொண்டு “ஸ்ரீ ஆனந்த நடராஜரின் மகிமையும், கணம் புல்ல நாயனார் புராணமும்” என்றத் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

சொற்பொழிவு நிறைவில் ஸ்ரீ சிதம்பரேச சத்சங்கம் சார்பில் சொற்பொழிவாளர் கீர்த்தனா நாராயணனுக்கு சத்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, சுரேஷ் மற்றும் புலவர் சிவப்பிரகாசம், நடராஜன், லட்சுமி, ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியில் தீட்சிதர்கள், சிவனடியார்கள், ஆன்மீக அன்பர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சிவபுராணம் பாராயணத்தை ஏராளமான பக்தர்கள் கூட்டு பிராத்தனை செய்தனர். நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிதம்பரேச சத்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.