சிதம்பரம் அருகே நள்ளிரவில் விவசாயியை முதலை தாக்கியதால் பரபரப்பு!


சிதம்பரம் அருகே விவசாயியை கடித்த முதலை  பிடிக்கப்பட்டது!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழைக்காலம் வந்துவிட்டாலே நீர் நிலைகளிலிருந்து முதலைகள் அவ்வபோது வெளியே வந்து மக்களை அச்சுறுத்துவது வழக்கம். சிதம்பரம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு குடியிருப்பு பகுதியில் புகுந்து வீட்டிற்கு வெளியே இருந்த விவசாயி ஒருவரை தாக்கி கடித்ததால் அவர் காயமடைந்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே குமராட்சி கோப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (42). விவசாயியான இவர் சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் வெளியே நாய் ஒன்று தொடர்ந்து குரைக்கும் சத்தத்தைக் கேட்டு கண் விழித்த அவர், என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அப்போது, வீட்டின் வெளியே இருந்த முதலை ஒன்று திடீரென அவரைத் தாக்கியது. அது அவரது இடது தொடையைக் கடித்து இழுத்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக உதவி கேட்டு அலறினார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிடிக்கப்பட்ட முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று வக்காரமாரி நீர்த்தேக்கத்தில்  விடுகின்றனர்!

தகவலின் பேரில், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உள்ளூர் மக்களின் உதவியுடன், சுமார் 9 அடி நீளமும், 300 கிலோவிற்கும் அதிகமான எடையும் கொண்ட அந்த முதலை (Mugger Crocodile) பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. முதலை கடித்து காயமடைந்த இளவரசன் சிதம்பரம்  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெளிநோயாளி பிரிவில் (OP) சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிடிக்கப்பட்ட அந்த முதலையை சிதம்பரத்திற்கு அருகிலுள்ள வக்கரமாரி நீர்த்தேக்கத்தில் வனத்துறையினரால் பாதுகாப்பாக விடப்பட்டது!