தாயின் பெயரில் ஒரு மரக்கன்று! அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுளை நட்ட என்சிசி மாணவர்கள்!!


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுளை நட்ட என்சிசி மாணவர்கள்!

மிரட்டும் எல் நினோ, உலகம் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவைகளை கருத்தில் கொண்டு தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் திட்டத்தை தொடங்கி வைத்தனர்!  தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில் தேசிய அளவிலான
“ஏக் பெட் மா கே நாம்” (தாயின் பெயரில் ஒரு மரக்கன்று) என்றத் திட்டத்தின்
கீழ் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும், தாய்மார்களின் நினைவாக மரங்களை நட்டு
அவற்றைப் பராமரிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஊக்குவிப்பதையும்
நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.அறிவுடைநம்பி, பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் ஆர். சிங்காரவேலு, இணைப் பதிவாளர் ஜெகதீஸ்வரன், வேளாண்மைப் புல முதல்வர் டாக்டர் ஹரிப்ரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சி தமிழ்நாடு 6வது பட்டாலியன் என்சிசியின் கட்டளை அதிகாரி கர்னல் எஸ்.சக்ரபர்த்தி மற்றும் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல்
ராஜேஷ் சௌத்ரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. என்சிசி இணை அலுவலர்களான மேஜர் ஆர். கனகராஜன் மற்றும் லெப்டினன்ட் டி.
பாலமுரளி ஆகியோர் இம்முயற்சியை ஒருங்கிணைத்து, பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு இடங்களில் 400 மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். வேளாண்மைப் புலம் மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் புலத்தைச்
சேர்ந்த மாணவர்கள், என்சிசி இணை அலுவலர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர் படையினர் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பங்கேற்பாளர்கள் அனைவரும் அதிக அளவில் மரங்களை நட்டு, அவற்றைப்
பராமரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.