மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த கட்டுரை போட்டி!


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வி முத்துக்குமரன் பேசினார்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது மிகப்பெரிய நூலகமான
டாக்டர் சி.பி.இராமசாமி அய்யர் நூலகம். இந்த  நூலகமும் சிதம்பரம் வாசிப்பு மேம்பாட்டு இயக்கமும் இணைந்து கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்தும் வகையிலும் மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையில் “இன்றைய இளைஞர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை எவ்வாறு உருவாக்கலாம்” என்றத் தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழக கலைப்புலத்தை சார்ந்த பல்வேறு துறை மாணவர்கள் இந்தக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்றார்கள். இந்த போட்டியில் தமிழ் துறையை சேர்ந்த மாணவி ஏ. ஆன் மேரி தனேசிகா, விலங்கியல் துறையை சார்ந்த சா. ஜெனிபர், இர. அபிராமி, ந. ஜெயஸ்ரீ, நுண் உயிரியல் துறை பூ. புனிதவள்ளி, நூலக அறிவியல் துறையை சார்ந்த
இரா. திரிஷா ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா பல்கலைக்கழக நூலக அரங்கில்  நடைபெற்றது.

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது!

பல்கலைக்கழக கலைப்புல முதல்வர் மு. அருள் தலைமை தாங்கி பேசுகையில், மாணவ, மாணவிகள் தினமும் புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.  முன்னதாக பல்கலைக்கழக நூலகர் பேராசிரியர் கு. விஜயகுமார் வரவேற்றார். வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வி. முத்துக்குமரன்  இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எழுதிய புத்தகங்கள் அவரது சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. உதவி நூலகர் ச. பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவில் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.