
இளம் பெண்களிடம் மாதவிடாய் சீர்கேடுகள், உடல் எடை அதிகரிப்பு, முகப்பரு தேவையற்ற முடி வளர்ச்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவில் பிசிஓஎஸ் சொசைட்டி என்பது பெண்களின் ஹார்மோன் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான மருத்துவ அமைப்பாகும். இந்த அமைப்பும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து இளம் பெண்களிடையே பரவலாக காணப்படும் கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, பெண்களின் உடல்நலம் குறித்த அறிவியல் பூர்வமான புரிதலை இளம் தலைமுறையினரிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சி சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், எம்.பி.பி.எஸ். மாணவர்கள், பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் என சுமார் 215 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியைச் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் என்.பாஸ்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஷ், நிர்வாகத் துணை முதல்வர் டாக்டர் பாலாஜி சுவாமிநாதன், கல்வித் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் சசிகலா, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ். மிருணாளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.நித்யா, பேராசிரியரும் அமைப்பின் உறுப்பினருமான டாக்டர் லோபமுத்ரா பி. ஜான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள்.

பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் மாதவிடாய் சீர்கேடுகள், உடல் எடை அதிகரிப்பு, முகப்பரு, தேவையற்ற முடி வளர்ச்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற அறிகுறிகளைப் புரிந்துகொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இத்தகைய அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், தயக்கமின்றி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும், இணையதளங்களில் கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி சுயமாகச் சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.