சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் பகற்பொழுது வேதிச்சிகிச்சை சேவைகள் தொடங்ப்பட்டுள்ளது.

இச்சிகிச்சை குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் என்.பாஸ்கர் தெரிவிக்கையில், புற்றுநோய் சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். மேலும், நோயாளிகள் தேவையான மருத்துவக் கண்காணிப்புடன் சிகிச்சை பெற்று, அதே நாளில் வீடு திரும்பும் வகையில் பகற்பொழுது வேதிச்சிகிச்சை சேவைகளும் வழங்கப்படுகின்றன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திட்டத்தின் தகுதி நிபந்தனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைத் தொகுப்புகளுக்கு உட்பட்டு, தகுதியுடைய பயனாளிகள் காப்பீட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சைகளை கட்டணமின்றிப் பெறலாம்.
கடலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு எளிதில் அணுகக்கூடிய, தரமான புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதே இம்முயற்சியின் நோக்கமாகும். இம்மருத்துவமனையில் கீமோதெரபி சேவைகள் கிடைப்பதால், நோயாளிகள் சிகிச்சைக்காகத் தொலைதூர மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் குறையும். இதன் மூலம் பயணச் செலவுகள் குறைவதுடன், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பொருளாதார மற்றும் மனச் சுமையும் குறையும். நிறுவப்பட்ட மருத்துவ நடைமுறைகள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, தகுதியான மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் கீமோதெரபி சிகிச்சை வழங்கப்படும் என்றார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஜூனியர்சுந்தரேஷ் தெரிவிக்கையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆலோசனை, மருத்துவப் பரிசோதனை மற்றும் கீமோதெரபி சிகிச்சை பெறுவதற்கான தகுதி விவரங்களை அறிய, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை, அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் துறை மற்றும் அறுவைச் சிகிச்சைத் துறை ஆகிய துறைகளை அணுகி மருத்துவ ஆலோசனை பெறலாம் என்றார்.