
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு புதிய துணைவேந்தர் (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளாக புதிய துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படாமல் துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் பல்கலைக்கழக நிர்வாகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்குப் பின் புதிய துணைவேந்தர் (பொறுப்பு) பதவிக்கு பேராசிரியர் வி. செல்வநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று அண்ணாமலை பல்கலைகழக பதிவாளர் (பொறுப்பு) பதவிக்கு பேராசிரியர் ஜி.குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்களை ஐஏஎஸ் அதிகாரியும், பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ரத்தினசாமி செய்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் பூச்சியியல் துறைத் தலைவராக பணியாற்றி வந்த பேராசிரியர் வி.செல்வநாராயணன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பொறுப்பு) ஆகவும், பல்கலைக்கழக பொறியியல் புல கட்டிடம் மற்றும் கட்டமைப்பு துறைத்தலைவராக பணியாற்றி வந்த பேராசிரியர் ஜி. குமரன், பதிவாளர் (பொறுப்பு) ஆகவும் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பொறுப்பு) ஆகப்பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் வி. செல்வநாராயணன்,
கற்பித்தல், வேளாண்ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துறைகளில் 33ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இவர்அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு துணை அலுவலர், இணைத்தேர்வுக்கட்டுப்பாட்டுஅலுவலர்,
உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார். புதிய பதிவாளராக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் ஜி குமரன், பொறியியல் கல்வி மற்றும் கட்டமைப்பு துறையில் அனுபவம் பெற்றவர். கற்பித்தல்,
ஆராய்ச்சி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டுத்துறைகளில் 32 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் வி. செல்வநாராயணன், பதிவாளராக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் ஜி.குமரன் ஆகியோரை பல்கலைக்கழக இணைப்பதிவாளர் பி.ஜெகதீஸ்வரன், துணைவேந்தரின் செயலாளர் ஜெ. பாக்யராஜ், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி என்.சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.