எல். நினோவால் பருவ மழை இயல்பை விட குறைவாக இருக்கும்! வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணன் தகவல்!!


சிதம்பரம் அருகே நடைபெற்ற விவசாயிகளின் பயிற்சி கூட்டத்தில் வானிலை ஆய்வு மையம் முன்னாள் இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் பேசினார்

எல்.நினோ தாக்கத்த்தால், தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை இயல்பை காட்டிலும் குறைவாக இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு சார்பில் காவிரி பாசன பகுதியின் கடைமடை பாகுதியான சிதம்பரம் அருகே உள்ள  பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள  கீழ்அனுவம்பட்டு கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில்  பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீள் தன்மை மேலாண்மை குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஓன்றிய வேளாண் துறை உதவி இயக்குநர் சா.நந்தினி தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட  உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பெ.ரவிந்திரன் முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் சென்னை மண்டல முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். அவர் பேசுகையில், பருவநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், எல்.நினோ என்றால் என்ன, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? புயல் எப்படி உருவாகிறது, புயல் உருவாகி பயணிக்கிற போது தமிழ்நாட்டிற்கு மழை எப்படி கிடைக்கிறது, மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவுவதற்கான காரணம் என்ன, எதிர் காலத்தில் மழை உருவாக நாம் முன்னெடுக்க வேண்டிய காரணிகள், மற்றும் நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை குறைவுக்கான காரணம் ஆகியவை குறித்து படவிளக்க காட்சிகளுடன் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், அதிகாரிகள்!

மேலும் அவர் பேசுகையில்,  வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் குறைவாக இருக்கும் என்றும், மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவானால் மட்டுமே தமிழகம் முழுவதும் முழுமையான மழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது என எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் அவர் பதில் தெரிவித்தார்.  கூட்டத்தில் விருத்தாசலம் வேளாண் அறிவியியல் நிலைய தலைவர் கே. நடராஜன்  பங்கேற்று பேசுகையில், மழை குறைவு, மற்றும் பாசன நீர் பற்றாக்குறை காலங்களில் சாகுபடி  செய்ய வேண்டிய பயிர்கள், ரகங்கள், குறுகிய வயதுடைய மாற்றுப்பயிர் சாகுபடி முறை மற்றும் பின் பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து படக்காட்சிகளுடன் விளக்கமளித்தார். கொள்ளிடம் வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் பி.கொளஞ்சிநாதன் பேசுகையில், மழைக்குறைவால் மேட்டுர் அணை நிரம்பாத நிலையில் கடலூர் மாவட்டத்தின் மேற்கு மாவட்டங்களில்  இருந்து கிடைக்கும் மழை நீரை முழுமையாக சேமித்து கடலூர் மாவட்ட காவிரி பாசனத்திற்குட்பட்ட  அனைத்து பகுதிகளுக்கும் முறை பாசன அடிப்படையில் சீரான பாசன நீர் வினியோகம் செய்வது குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதி விவசாயிகள், வேளாண் அலுவலர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்கத்தின் நிகழ்வுகளை சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சிவ. சரவணன் ஒருங்கிணைத்து நடத்தினார். நிறைவில்  உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பெ.ரவிந்திரன் நன்றி கூறினார்.