தமிழ் சினிமாவில் சரித்திர படங்கள் வந்து வெகு காலமாகிவிட்டது.தெலுங்கில் இருந்து பாகுபலி திரைப்படம் வந்தபின் தமிழ் ரசிகர்களுக்கும் அதைப் போல அதைவிடச் சிறந்த ஒரு படம் தமிழிலும் வராதா? என்ற ஏக்கம் இருந்தது. அதனை முற்றிலுமாக தீர்த்து வைத்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம். எவ்வளவோ பேர் முயற்சித்தும் முடியாத நிலையில் கல்கியின் புகழ்ப்பெற்ற சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார்,பார்த்திபன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிக்ஷா உள்ளிட்ட பலர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்துள்ளது.
சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் அந்த நாவலை திரைப்படமாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்து திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்கள்,தற்போது நாவலைத் தேடிப்பிடித்து வாங்கி படித்து வருகின்றனர். தற்போது பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்களும் ஒரே புத்தகமாகவும்,ஒவ்வொரு பாகமாக ஐந்து புத்தகங்களும் பல்வேறு பதிப்பகத்தார்களால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கின்றது. ரூபாய் 500 முதல் 550 வரை விற்கப்படும் இந்த புத்தகங்கள் தற்போது கடைகளில் பரபரப்பாக விற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 1950ம் ஆண்டில் கல்கி வார இதழில் தொடராக வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் நாவல் 70 ஆண்டுகளை கடந்த பின்னரும் இந்த கணினி யுகத்திலும் வேறு எந்த நாவலும் ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு விற்பனையில் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.