மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள்!சிதம்பரத்தில் பிரபலம்!!


வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம், பூவுக்கு வாசம் உண்டு,பூமிக்கும் வாசம் உண்டு, வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே, வெட்டி வேரு வாசம் என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் வெட்டி வேரை பார்த்தாலே நினைவுக்கு வருகிறது.

நறுமணம் வீசும் வெட்டிவேர்

மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள் நடராஜருக்கு சூட்டப்படுவதால் சிதம்பரத்தில் பிரபலமாக உள்ளது.பூக்கள் மட்டும் தான் வாசனை வீசும் என நாம் நினைக்கிறோம். ஆனால் செடி மட்டுமல்ல. அதன் வேர் கூட வாசனை தருகிறது என்றால் அது வெட்டிவேர் தான். மாலையாக தொடுப்பது முதல் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்வது வரை வெட்டிவேருக்கு என்று தனி மவுசு உண்டு. வெட்டிவேரினை விலாமிச்சை வேர் எனவும் கூறப்படுகிறது. புல் இனத்தை சேர்ந்த வெட்டிவேர் பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். இது 4 முதல் 5 அடி உயரம் வரை வளரும். இதன் வேரை வெட்டி எடுத்தபின், புல்லையும், வேரையும் வெட்டியபின், நடுப்பகுதியான தண்டை மட்டும் மண்ணில் ஊன்றினாலே போதும். மீண்டும் வெட்டிவேர் செடி தானாவே வளர ஆரம்பித்து விடும்.இப்படி வெட்டி எடுத்து விளைவிப்பதாலும் வெட்டிவேர் என பெயர் வந்தது. இதன் வேர் மிகுந்த நறுமணத்துடன் இருக்கும். எட்டிநிற்பவரையும் சுட்டி இழுக்கும் வாசமுள்ளது வெட்டிவேர். பழுப்பு நிறமும்,பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது, கோடைக்காலத்தில் மண் பானையில் சிறிது வெட்டிவேரை போட்டு வைத்தால் தண்ணீர் குளுமையாகவும், நறுமணத்துடன் இருக்கும். வெட்டிவேரை மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வெட்டிவேரில் இருந்து தயார் செய்யப்படும் அழகு சாதனப் பொருட்கள்.

10மாத பயிராக உள்ள வெட்டிவேரை நெல் வயலில் நாற்று விடுவதைப் போல் நட்டு விவசாயிகள் பயிரிடுகின்றனர். நெற்பயிர் வளர தேவைப்படும் உரங்களைப் போல வெட்டிவேருக்கு உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் வைத்து பராமரித்தால் நன்கு வளரும். ஒரு ஏக்கருக்கு சராசரியாக குறைந்த பட்சம் ஒரு டன் முதல் அதிகபட்ச 3 டன்களுக்கு மேல் வெட்டிவேர் விளைகிறது.வெட்டிவேர் கேரள மாநிலம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பயிரிடப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் தான் வெட்டிவேர் விளைகிறது. சிதம்பரம் அருகே உள்ள சின்னாண்டிகுழி, பெரியாண்டிக்குழி, அத்தியாநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும், கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு போன்ற இடங்களிலும் வெட்டி வேர் பயிரிடப்படுகிறது.வெட்டிவேர் பெரும்பாலும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. இதனால் வெட்டிவேர் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.குறிப்பாக காஸ்மெட்டிக், சென்ட் போன்ற தயாரிப்பில் வெட்டிவேர் முக்கிய பங்கு வகிக்கிறது. சராசரியாக ஒரு கிலோ வெட்டிவேரின் விலை ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.150 க்கும் விற்கப்படுகிறது. இவற்றில் இரண்டு, மூன்று ரகங்கள் இருப்பதால் ரகங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றைவிட வெட்டிவேரிலிருந்து எண்ணெய் எடுப்பதால் விவசாயிகளுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கிறது.ஒரு டன் வெட்டிவேரில் இருந்து 12 கிலோ வரை எண்ணெய் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.ஒரு கிலோ எண்ணெயின் விலை பல ஆயிரம் ரூபாய் விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. விவசாயிகளிடமிருந்து வெட்டிவேரை கொள்முதல் செய்யும் நிறுவனங்களை பொறுத்து விவசாயிகளுக்கு நல்ல விலையும், லாபமும் கிடைக்கிறது.

வெட்டிவேர் மாலையில் சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜர்

ஒரே ஆண்டில் குறைந்த செலவில் அதிகம் லாபம் கிடைக்கும் என்பதால் வெட்டிவேர் விவசாயம் செழிக்க துவங்கியுள்ளது.தற்போது விவசாயிகள் அதிகளவில் வெட்டிவேர் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.நறுமணம் வீசும் வெட்டிவேரை பயிரிட்டு தொழில் செய்தால் நம் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதில் சந்தேகமில்லை.கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வெட்டிவேரில் மாலை செய்வது என்பது மிகவும் பிரபலம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு வெற்றிவேல் மாலை சூட்டப்படுவதால் சிதம்பரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதனால் சிதம்பரத்தில் வெட்டிவேர் மாலைகள் செய்வதற்கான கடைகள் பல உள்ளன.ரூ.250 ல் துவங்கி சில ஆயிரம் ரூபாய் வரையில் வெட்டிவேர் மாலைகள் அழகான வடிவங்களில் தேவையான உயரங்களில் கிடைக்கிறது. வெட்டிவேரில் விசிறி,பாய், குல்லா மற்றும் பல்வேறு கைவினைப் பொருட்களும் செய்யப்படுகிறது.