ஐம்பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில். இக்கோயிலானது மிகவும் தொன்மை வாய்ந்ததும் வரலாற்று சிறப்பு மிக்கதுவமாகும். சிவ தலங்களில் முதன்மையானது என்ற பெருமையை சிதம்பரம் நடராஜர் ஆலயம் பெற்றுள்ளது. சிவ வழிபாட்டை தொடங்குபவர்கள் சிதம்பரத்திலிருந்து தொடங்குவது நல்லது என்பார்கள். இது மட்டுமல்ல கோயில் என்றாலே அது சிதம்பரம் தலத்தை தான் குறிக்கும் என்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்கூறையின் கீழ் ஆனந்த தாண்டவ கோலத்தில் அம்பிகையுடன் அருள்பாளித்து வருகின்றார். ஒரு காலை தூக்கி நாட்டியமாடும் நடராஜரின் உருவமேனி வித்தியாசமானது. இதனை காண உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்கள் தினமும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு படையெடுக்கின்றனர். நடராஜர் கோயிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் கோயிலில் உள்ள சிற்பக் கலையை பார்த்து வியந்து ரசிக்கின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து வரும் வெளிநாட்டு பக்தர்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தற்போது வெளிநாட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த சிவ பக்தர்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் பஞ்சபூத தலங்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அன்மையில் ஆகாயத்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் தங்களுடைய பாரம்பரிய உடைகளை கைவிட்டு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தனர். வெளிநாட்டு பெண்கள் தமிழக பெண்கள் போன்று தலைவாரி பின்னலிட்டு பூக்கள் சூடி வந்தனர். நடராஜர் கோயிலில் நடந்த ருத்ர பூஜையில் வெளிநாட்டு பக்தர்கள் நமது பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் பட்டு சேலை அணிந்து பங்கேற்றனர். இதனைக் கண்ட உள்ளூர் பக்தர்கள் வியப்பின் எல்லைக்கு சென்று அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
மன அமைதி கிடைப்பதாக கூறும் வெளிநாட்டு பக்தர்கள்.
பல்வேறு நாடுகளில் இருந்து சிதம்பரம் வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து விடுகிறது சிதம்பரம் நடராஜர் கோயில். இக்கோயிலில் மன அமைதி கிடைப்பதாலும் எண்ணிய எண்ணம் ஈடேறுவதாலும் வெளிநாட்டு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதாக கூறுகின்றனர். மன அமைதி தேடி வரும் வெளிநாட்டு பக்தர்கள் இக் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மிகவும் லயித்ததோடு தியானங்களிலும் ஈடுபட்டனர். மேலும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ள கலைப் பண்பாட்டு சிறப்புமிக்க சிற்பங்களை கண்டு ரசித்தனர்.கோயில் முழுவதையும் சுற்றி பார்த்து தீட்சிதர்களிடம் தல வரலாறு குறித்து கேட்டறிந்து மகிழ்வுற்றனர்.