பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச!ஜபேந் நாமத்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்!!!
தையல் நாயகி உடனுறை வைத்தியநாதரின் இந்த அஷ்டகத்தை தினமும் மும்முறை உச்சரித்தால் எப்பேர்பட்ட நோய்களிலிருந்தும் விடுபடலாம் எனக் நம்பப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அமைந்துள்ளது புள்ளிருக்கு வேளூர் என கூறப்படும் வைத்தீஸ்வரன் கோயில். சீர்காழியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயில் நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய்க்குரிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஸ்தலத்தின் மூலவர் பெயர் வைத்தியநாதசுவாமி என்பதால் இத்தலமே வைத்தீஸ்வரன் கோயில் என பெயர் பெற்றது. முந்தைய காலத்தில் இந்த ஸ்தலம் ‘புள்ளிருக்கு வேளூர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. திருமுறைகளிலும் இந்த ஸ்தல பெயர் ‘புள்ளிருக்கு வேளூர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. புள் என்பது ஜடாயு என்ற பறவையையும், ‘இருக்கு’ என்பது ரிக் வேதத்தையும், ‘வேள்’என்பது முருகனையும், ‘ஊர், என்பது சூரியனையும் குறிக்கிறது. பறவை, வேதம், முருகன், சூரியன் ஆகிய நால்வரும் வழிபட்ட தலம் என்பதால் இது ‘புள்ளிருக்கு வேளூர்’ என்றானது. இங்கு வைத்தியநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ஐந்து கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோயில் திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றது.
வைத்தீஸ்வரன் கோயிலின் பிற பெயர்கள்.
சடாயு வழிபட்டதால் ‘சடாயபுரி’ எனவும் வேதம் வழிபட்டதால் ‘வேதபுரி’ எனவும் கந்தன் வழிபட்டதால் ‘கந்தபுரி’ எனவும் சூரியன் வழிபட்டதால் ‘பரிதிபுரி’ எனவும் அங்காரகன் வழிபட்டதால் ‘அங்காரகபுரம்’ எனவும் அம்பிகை வழிபட்டதால் ‘அம்பிகாபுரம்’ எனவும் இங்கு மந்திரமாயும் மருந்தாயும் இறைவன் இருந்து உயிர்களின் வினைகளைப் போக்குவதால் ‘வினை தீர்த்தான் கோவில், எனவும் இத்தலப் பெயர்கள் உள்ளன.
திருக்கோயில் அமைப்பு
இக்கோயில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது. நான்கு வீதிகள் சூழ இருக்க அதனுள் மடவளாகங்கட்கு நடுவில் 10.70 ஏக்கர் பரப்பளவில் கோயிலில் வெளிச்சுற்று, உள்சுற்று ஆகிய இரண்டு விளங்க நாற்புறமும் உயர்வான மதில்கள் உள்ளன. கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் வாயில்கள் உள்ளன. ஆனால் கிழக்கு,மேற்கு ஆகிய இரு திசைகளில் மட்டும் உயரமான ராஜகோபரங்களும், கட்டை கோபுரங்களும் உள்ளன. மூலவர் வைத்தியநாதர் மேற்கு நோக்கி உள்ளதால் மேற்குக் கோபுரம் வழியே பிரதான வழியாக உள்ளது.
காவல் தெய்வங்கள்
வைத்தீஸ்வரன் கோவிலில் மேற்கு பகுதியில் வீரபத்திரரும்,தெற்கு பகுதியில் கற்பக விநாயகரும், வடக்கு பகுதியில் காளியும், கிழக்கு பகுதியில் பைரவரும் காவல் புரிகின்றனர். இதனைத் தனிப் பாடல் ஒன்று “தெற்கில் கணேசன்” எனத் தொடங்கி விளக்குகிறது. பிரதான வாயிலான மேற்கு வாயில் பகுதியில் கடைகள் அதிகமாக உள்ளது. அவைகளைக் கடந்தால் நெடிய கருங்கல் மண்டபம், அதனையொட்டி கட்டைக் கோபுரம் உள்ளது. அதனைக் கடந்து தென் சுற்றிடையே சித்தாமிர்தத் தீர்த்தக்குளம் மிக அழகான நீராழி மண்டபத்துடன் தூய நீண்ட படிகளுடன் நான்கு புறமும் சூழ அமைந்துள்ளது. அதில் நீராடி கற்பக விநாயகரை வழிபட்டு மேற்குத் திருச்சுற்றின் வழியாகச் சென்று அங்குள்ள கிழக்கு நோக்கிய ஆறுமுகர் சந்நதியை அடையலாம். ஆறுமுகர் பன்னிரு கர்த்தராய் மயில் மீது அமர்ந்த நிலையில் தேவியர் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்து வருகிறார். இவரை வழிபட்டு கிழக்கு நோக்கி சென்றால் வடக்கு முகமாக உள்ள ஐவேலி விநாயகரை வழிபடலாம். அடுத்து காவல் தெய்வமான காளியை வழிபடலாம். இத்தலம் செவ்வாய் வழிபட்டதால் அங்காரகன் எனும் செவ்வாய் மூலவர் தெற்கு நோக்கி தனி ஆலயத்தில் உள்ளார். உற்சவ மூர்த்தியான அங்காரகன் உள்ளே மூலவரின் தென் சுற்றில் வடக்கு நோக்கி உள்ளார். இது அங்காரகத் தலம். இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் கோயிலுள் அங்காரகன் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் வலம் வருதல் நடைபெறுகிறது.இங்கு செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டு தோஷம் நீங்க வேண்டிக்கொள்வார்கள்.
வைத்தியநாதர்
இக்கோயில் விளக்கழகு மிக்கது. வினைதீர்த்தான் கோயில் விளக்கழகு என்பது பழமொழி. இக்கோயில் மூலவரான வைத்தியநாதர் முன்பு நந்தியெம்பெருமானும், பித்தளையினாலன கண்ணாடியும் பலி பீடமும் உள்ளன. மூலவர் சிறிய திருமேனி உடையவர். சக்தியின் குறியீடான கோமுகம் வடக்கு நோக்கி உள்ளது.மூலவரான வைத்தியநாதரை “செடியாய (குணமிலாத) உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்தாவான்”எனச் சம்பந்தரும்”பிரிவிலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் (வீடு பேறு) வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராத நோய் தீர்த்திருளவல்லான்”என அப்பரும் பாடி யுள்ளார்கள்.
தையல்நாயகி அம்பிகை
அம்மை தையல்நாயகி மூலவருக்கு முன்னால் தெற்கு நோக்கி ஒரு திருச்சுற்றுடன் கூடிய தனி சந்நதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். கயிலைநாதனும், பார்வதியும் கயிலையை விட்டு இத்தலத்தில் எழுந்தருளியதாக புராண வரலாறு கூறுகிறது. பார்வதி தைலம்மைக் கோலத்தில் (தையல்நாயகி) தைலபாத்திரம், சஞ்சீவி, வில்வ மரத்தடி மண் மருந்து ஆகியவைகளை கைக் கொண்டு தம் தலைவருடன் வந்தமையால் அக்கோலத்திலேயே மூலவராக உள்ளார். அம்மை அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவாறு திகழ்ந்து வருகிறார். கரும்புருவச் சிலை, வரிக் கயல்விழி, வள்ளவார் காது,முல்லை இளநகை செங்கனிவாய், பிறைநுதல் எல்லாம் படைத்தவளாய்ப் புள்ளூர் மேவும் வாலாம்பிகையின் திருவருள் தான் என்னே! பெருமானின் திருஉள்ளத்தே அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம் போல நமக்கு அருள்பாலிக்கும் திருவடிவில் எழுந்தருளி காட்சி தருகிறார்.
சிறப்பு வாய்ந்த செல்வ முத்துக்குமாரசாமி சந்நதி.
இங்குள்ள இறைவியின் பெயர் தையல்நாயகி. உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு, உமையவள் தையல்நாயகியாய்த் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சிவியும், வில்வமரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய ஸ்தலம். இன்றும் நோய் தீர்க்கும் ஸ்தலமாக இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் கார்த்திகை தோறும் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். இங்கு செவ்வாய்க்கு அதிபதியான முருகன் இந்த கோயிலில் அம்பாள் சந்நிதிக்கு அருகாமையில் செல்வ முத்துக்குமாரசாமி என்ற பெயரில் தனி சந்நதியில் அருள்பாலித்து வருகிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இவருக்கு கார்த்திகை தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது.கோயில் வெளிப்புறத்தில் ஆறுமுகர் சந்நதியின் பக்கத்தில் உள்ள தெற்கு நோக்கிய மண்டபத்தில் உற்சவர் கார்த்திகையில் எழுந்தருள செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இந்த அபிஷேகத்தில் சந்தன அபிஷேகம் மிகச்சிறந்தது. அந்த சந்தன குழம்பு நோய் தீர்க்க வல்ல அருமருந்தாகும். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் செல்வ முத்துக்குமாரசாமி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். செல்வ முத்துக்குமாரசாமி சந்நதியில் தினமும் நடக்கும் அர்த்த சாம பூஜையின் போது புனுகு,பச்சை கற்பூரம், எலுமிச்சை,பன்னீர்,சந்தனம், புஷ்பம்,பால் மற்றும் பால் சாதம் ஆகியவற்றுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என கூறப்படுகிறது.முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலம் என்பதால் இங்கு அனைத்து விழாக்களும் செல்வ முத்துக்குமாரசாமிக்குதான் நடக்கிறது.
செவ்வாய் தோஷ பரிகாரத்தலம்.
முன்னொரு காலத்தில் அங்காரகன், வெண் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு சிவபெருமானை வேண்டி நின்றதாகவும், அதனை கண்ட சிவபெருமான் அவரை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபடுமாறு கூறியதாகவும், அங்காரகனும் அவ்வாறு செய்யவே அவருடைய நோய் குணமானதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இத்தலத்தில் அங்காகரனுக்கு தனி சந்நதியும், உற்சவ விக்ரகத்திற்கு தனி சந்நதியும் உள்ளது. அங்காகரன் சந்நதியில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரம் செய்யப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோயிலில் இறைவன் சந்ததிக்கு பின்புறம் உள்ள நவகிரகங்களுக்கு அடுத்ததாக 63 நாயன்மார்கள் மற்றும் சப்த கன்னியர்கள் உள்ளனர்.மேலும் மருத்துவ கடவுள் என்று அழைக்கப்படும் தன்வந்திரி பகவான் இங்கு விஷ்ணு பகவானின் உருவத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அரிதிலும் அரியது. இங்குள்ள துர்க்கை மற்றும் சகஸ்ரலிங்கமும் விசேஷமானவை இக்கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் செய்யப்படுகின்றன.இங்கு நடைபெறும் விழாக்களில் பங்குனி உற்சவம் சிறப்பு வாய்ந்ததாகும்.
தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து தரிசித்தாலே தோஷங்கள் அனைத்து விலகிவிடும் என்பது ஐதீகம். இங்கே அமைந்துள்ள அரச மரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதர் ஆகியோரை முதலில் வழிபட்டு ஆலமரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்பு மூலவர் வைத்தியநாதர் சந்நதியை நோக்கி சென்று மூலவரை வணங்க வேண்டும். இங்கே அங்காரகன் சந்நதி தனியாக அமைந்துள்ளது.அங்காரகனுக்கு சிறப்பு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரம் பருப்பில் அன்னம் செய்து அதனை அங்காரகனுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவது இன்னும் வளமும், பலமும் தந்தருளும். இதனால் தோஷம் நீங்குவதோடு குறிப்பாக செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணத் தடைகள் அகலும். கல்யாண வரம் கைகூடி வரும் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள்.
வரம் தரும் அங்காரக ஸ்தோத்திரம்.
பூமிபுத்ரோ மஹாதேஜா ஜகதாம்
பயக்ருத்ஸதா
வ்ருஷ்டிக்ருத் வ்ருஷ்டி ஹாதாச பீடாம்
ஹரதுமே குஜ;
இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால் தோஷங்கள் விலகி விடும் செவ்வாய் பகவானின் பலத்தையும் அருளையும் பெற்றுவிடலாம் முக்கியமாக செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகன் மற்றும் முருகப்பெருமானை மனதார வழிபட்டு வாருங்கள். விரைவில் கல்யாண வரன் தேடி வரும்.
தன்வந்தரி பகவான்
எந்த சிவன் ஆலயத்திலும் தன்வந்தரி பகவானுக்கு சந்நதி இருக்காது. ஆனால் வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்தரி பகவானுக்கு தனி சந்நதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலில் உள் சுற்று பிரகாரத்தில் கிழக்கே உள்ள மண்டபத்தின் இறுதி பகுதியில் தன்வந்தரி சந்நதி உள்ளது. தன்வந்தரி திருமாலின் அம்சமானவர். திருப்பாற்கடலில் தோன்றிய தேவ வைத்தியர். இவர் நோய் தீர்க்கும் வல்லமை பெற்றவர் என்பதால் வைத்தியநாதர் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்புக்குரிய சித்தாமிர்த தீர்த்தம்
வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் சிறப்புக்குரியது. நான்கு புறங்களிலும் மண்டபத்தோடும், படிக்கட்டுகளுடன் நடுவில் நீராழி மண்டபத்தோடும் இந்த தீர்த்தக் குளம் அழகாக அமைந்திருக்கிறது. இக்கோயில் குளக்கரையில் ஒரு முறை சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்றால் துரத்தி வரப்பட்ட தவளை ஒன்று இந்த தீர்த்த குளத்தில் குதித்தது. அப்போது தெளித்த தண்ணீர் முனிவரின் முகத்தில் பட்டு அவரது தவம் கலைந்தது. இதனையடுத்து இந்த குளத்தில் பாம்பும், தவளையும் வசிக்க கூடாது என்று முனிவர் சபித்ததாகவும், இதன் காரணமாக இந்த குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள்.இந்த தீர்த்தத்தில் நீராடினால் சகல நோய்களும் தீரும் என நம்பப்படுகிறது. நோய் தீர குளத்தில் வெள்ளம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கமாக உள்ளது. சித்தாமிர்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்குசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு சில தீர்த்தங்களும் இங்கு உள்ளன. இந்த தீர்த்தங்கள் கோவிலுக்கு வெளியே பல இடங்களில் உள்ளன.
சிறப்பு வாய்ந்த ஜடாயு குண்டம்
ராவணன், சீதையை சிறைபிடித்துச் சென்ற போது அதனைப் பார்த்த ஜடாயு என்ற பறவை, ராவணனோடு சண்டையிட்டது. இதில் ஜடாயுவின் சிறகை வெட்டி வீழ்த்தினார் ராவணன். ராமன், லட்சுமணன் ஆகிய இருவரும் சீதையை தேடி வந்த போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜடாயுவை பார்த்தனர். அந்தப் பறவை, ராவணன் சீதையை தூக்கிச் சென்றதையும், தான் அவனோடு போரிட்டதையும் சொல்லியபடி உயிர்விட்டது. இதையடுத்து ராமபிரான், ஜடாயுவின் உடலுக்கு தீமூட்டி இறுதிச் சடங்கு செய்தார். ஜடாயுவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடம் வைத்தீஸ்வரன் கோயிலில் ‘ஜடாயு குண்டம்’என்ற பெயரில் உள்ளது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள சாம்பலை அணிந்தால் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தை சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இங்கு வீற்றிருக்கிறார்.
நோய் தீர்க்கும் திருச்சாந்து:
வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வில்வ மரத்து மண், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டம்)இருந்து விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தின் நீரையும் சேர்த்துக் குழைப்பார்கள்.அதனை ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’என்ற வார்த்தையை உச்சரித்தபடியே, செல்வமுத்துக்குமாரசாமி சந்நதியில் இருக்கும் குழி அம்மியில் அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடிப்பார்கள். பின்னர் அதனை அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்வார்கள். அதன்பிறகு, இத்தல இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இறைவனின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை திருச்சாந்து உருண்டை என்பார்கள். இதனை உண்பவர்களுக்கு எப்பேர்பட்ட வியாதியாக இருந்தாலும் விரைவாக நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வைத்தியநாதர் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு சாதாரண வியாதிகளை மட்டுமின்றி பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர். இவரை வணங்கினால் மன அமைதி, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியன உண்டாகும் என கூறப்படுகிறது. இக்கோயில் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். வாழ்வில் ஒரு முறையேனும் வைத்தீஸ்வரரை தரிசித்து நோய்கள் நீங்கி, வாழ்வில் வளம் பெறவும்.
பூஜைகளும் விழாக்களும்:
வைத்தீஸ்வரன் கோவிலில் நாள்தோறும் காமிக ஆகம விதிப்படி ஆறு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திரத்தை முன்னிட்டுக் கொடியேற்றத்துடன் பெருவிழா நடைபெறுகிறது. தை மாதத்தில் செல்வ முத்துக்குமாரசுவாமிக்குச் திருவிழா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் கோயில் உள்ளே வலம் வருகிறார். மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்திலும், சஷ்டியிலும் செல்வ முத்துக்குமாரசாமிக்குச் சிறப்பான அபிஷேகம் நடைபெறுகிறது.கார்த்திகை தினத்தில் எண்ணிலடங்கா பக்தர்கள் வழிபாடு ஆற்றுகிறார்கள். அம்பிகைக்கு ஆடிப்பூரம் நவராத்திரி நாட்களை ஒட்டி திருவிழாக்கள் நடைபெறுகின்றன சிவகாமி உடனாகிய நடராஜப்பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் நடைபெறுகிறது. செல்வமுத்துக்குமாரசாமிக்கு இரவில் நடைபெறும் புனுகு காப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இந்த புனுகு காப்பு பூசைக்கு பிறகு மூலவருக்கு அர்த்த சாம பூஜை நடைபெற்று வருகிறது. திருவிழாவில் சோமஸ்கந்தர் வடிவம் போல சாமிக்கும்,அம்மைக்கும் நடுவில் செல்வ முத்துக்குமாரர் வலம் வருவார்.
வைத்தீஸ்வரன் கோவிலின் கலைச் சிறப்புகள்:
வைத்தீஸ்வரன் கோவிலில் ஆசான மண்டபம், சித்திர மண்டபம், வசந்த மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், களஞ்சிய மண்டபம், சுவாமி சன்னதியை சுற்றிய மண்டபம், சண்முக விலாசம்(பிரச்சார மண்டபம்)முதலிய மண்டபங்கள் கலைச் சிறப்புகளுடன் திகழ்கின்றன. மண்டபத் தூண்களில் பல சிற்பங்கள் உள்ளன. அம்மன் கோவில் சுற்று மண்டபத்தில் கீழ் பக்கத்துத் தூண்களில் பிராதப சிம்ம மகாராஜா படிவமும், தருமையாதீனம் சந்நிதானம் சிவஞான தேசிகரின் திருவுருவமும் மேற்குப் பக்கத் தூண்களில் ஸ்ரீ மல்லர்,ஸ்ரீகாடேராவ், முத்துக்குமாரசாமி தம்பிரான் திருஉருவங்களும் உள்ளன. கோபுரங்களில் எழிலான சுதை சிற்பங்களும் துவாரபாலகர் சுதைச் சிற்பங்களும் மண்டபத்தின் மேல் 25வது குரு மகா சந்நிதானத்தின் சுதை வடிவமும் தற்காலப் படைப்புகளாயினும் மிக நேர்த்தியாக உள்ளன. தீர்த்த வாயிலின் இருபுறமும் இரு சித்திரங்கள் உள்ளன. ஆடிப்பூர அம்மன் இடதுபுறத்தில் உள்வலத்தில் சுவர்களில் அஷ்டலட்சுமி ஓவியங்களை கண்டு மகிழலாம்.
பல மாநில பக்தர்கள் வருகை
தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகிய நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர்.தன்வந்தரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகை குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர். தென்னிந்தியாவின் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தாங்களும் ஒரு முறையேனும் வந்து வழிபட்டு நோய் நொடிகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுங்கள்.