மகான்களை கவர்ந்திழுக்கும் காந்த மலை திருவண்ணாமலை


திருவண்ணாமலை ரயில் நிலையம்

திருவண்ணாமலை திருத்தலம் அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகிறது. “அருணம்” என்றால் நெருப்பு, “அசலம்”என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது.அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பார்கள் பெரியவர்கள்.இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாச்சலமாகக் காட்சி அளிக்கிறது. இம்மலையின் பெயரை அடிக்கடி சொல்லி வருவது ஓம் நமசிவாய கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம்.திருவண்ணாமலை என்றாலே மலை தான் ஞாபகத்திற்கு வரும்‌. அதுவும் ஈசனே மலையாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு போக்குவரத்து வசதி உண்டு. சென்னையில் இருந்து 185 கிலோமீட்டர் தொலைவிலும் ,பெங்களூரில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும், அமைந்துள்ளது திருவண்ணாமலை. இருப்புப் பாதை வழியாக செல்வதானால் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இறங்கி செல்லலாம். கூர்மப்பாறை, மயிலாடும்பாறை, வழுக்குப்பாறை ஆகிய பாறைகளுடனும், அல்லிச்சுனை, அரளிச்சுனை, ஆலமர, அத்திமரச் சுனைகளுடனும் அமைந்துள்ளது திருவண்ணாமலை. பல மகான்களைக் கவர்ந்திருக்கும் காந்த மலையாய் காட்சியளிக்கிறது திருவண்ணாமலை. புவியியல் கூற்றுப்படி கடல் மட்டத்திற்கு மேல் 2,668 அடி உயரத்தில் இதன் சிகரம் இருக்கிறது. இதன் கிழக்கு முகப்புப் பகுதி 718 ஏக்கர் பரப்பளவு உடையது. மலையை சுற்றி எட்டு சிவலிங்க கோயில்கள் உள்ளன. ஒரே மலையில் ஏராளமான சிகரங்கள் அடங்கிய சுயம்புவன மலை.கிழக்கு பாகத்திலிருந்து பார்த்தால் மலை ஏகலிங்கமாக தெரியும். சற்று தள்ளி நின்று பார்த்தால் சிவசக்தி சொரூபமாக இரண்டாகத் தோற்றமளிக்கும். மேற்கு திக்கில் இருந்து பார்த்தால் மூன்று சிகரங்களை பார்க்கலாம் சற்று தூரம் நடந்து திரும்பி பார்த்தால் ஈசனின் பஞ்ச முகங்கள் போல் தெரியும்.

திருவண்ணாமலை கோவிலின் பின்புறத்தில் காட்சி தரும் காந்த மலை.

ஒன்பது கோபுரங்களை கொண்ட பிரமாண்டமான கோவில்.

திருவண்ணாமலையில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் 217 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுரம்.

நடுநாட்டு தலங்களில் முதன்மையானது திருவண்ணாமலை தலம். இக்கோவில் ஒன்பது கோபுரங்கள், ஏழு பிரகாரங்கள் கொண்ட பிரமாண்டமான கோவில். இக்கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் 11 அடுக்கு உடையது. 217 அடி உயரம் கொண்டதாய் உள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலை தலவிருட்சமான மகிழ மரத்தின் கிழக்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் திருக்கோவிலின் ஒன்பது கோபுரங்களையும் ஒரு சேர தரிசிக்க முடியும். இதில் தெற்கு கோபுரம் திருமஞ்சன கோபுரம் என்றும்,மேலக்கோபுரம் பேய்க் கோபுரம் என்றும் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றும் அழைக்கப்படுகின்றன. திருமஞ்சன கோபுரம் 157 அடி உயரமும், மேற்கு கோபுரம் 144 அடி உயரமும், அம்மணி அம்மன் கோபுரம் 171 அடி உயரமும் கொண்டுள்ளது.இக்கோவிலில் ஒன்பது கோபுரங்களில் கணக்கில் சேராத கோபுரம் ஒன்றும் உண்டு. அதுதான் ரிஷி கோபுரம்.கொடி மரத்தை அடுத்து வருவது தான் ரிஷி கோபுரம்.நினைத்தாலே முக்தி தரும் தலமாக திருவண்ணாமலை உள்ளது. திருவாரூரில் பிறந்தால் முக்தி; தில்லையை தரிசித்தால் முக்தி;காசியில் இறந்தால் முக்தி; ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் தலமாகும். இக்கோவிலில் அண்ணாமலையார் அருள் பாலித்து வருகின்றார். திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் நடந்த கர்வப்போரே திருவண்ணாமலை தோன்றக் காரணம்.சினந்த சிவன் வெகுண்டு ஜோதியாகி குளிர்ந்ததே இம்மலையில் தான்.

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

ஜோதி வடிவம் கண்டு ஓங்கி உயர்ந்து நின்ற சிவபெருமான்.

ஒரு முறை பிரம்மாவிற்கும், மகாவிஷ்ணுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது‌. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் ஜோதியின் அடி முடியை காண இயலவில்லை. சிவபெருமானே முழு முதற்கடவுள் என்பதை புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமான் அவர்களுக்கு ஜோதி வடிவில் இருந்து ஒரு மலையாக மாறி காட்சி கொடுத்தார்.அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளியதாக புராண வரலாறு கூறுகிறது.

உண்ணாமலை அம்மனுக்கு தனி சந்நதி

திருவண்ணாமலை கோவிலில் தனி கொடி மரத்துடன் உண்ணாமலை அம்மன் சந்நதி.

திருவண்ணாமலை திருக்கோவிலில் இறைவனுடன் சரிபாதியாக அம்பிகை உண்ணாமலை அம்மன் என்றும் அபித குஜாம்பாள் என்ற பெயரிலும் காட்சியளிக்கின்றார்.திருவண்ணாமலை கோவிலில் உண்ணாமலை அம்மனுக்கு தனி சந்நதி உள்ளது. அம்பாள் சன்னதி முன்பு பெரிய மண்டபம் உள்ளது. அங்கு சிலை வடிவில் சித்திரகுப்தரும், கொடி கம்பம், நந்தி நவகிரக சன்னதி ஆகியவையும் உள்ளன. உண்ணாமலை அம்மன் நின்ற திருக்கோல நாயகியாய் அருள்பாலிக்கின்றார். அழகுக்கெல்லாம் அழகாக காட்சி தருகின்றார்.அங்கு முன் மண்டப தூண்களில் அஷ்டலட்சுமிகளை தரிசிக்கலாம். அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடமாக திகழ்கிறது. ஈசனும் ஈஸ்வரியும் வேறு இல்லை என்று இறைவன் இங்கு உணர்த்துகிறார்.இறைவனின் இடப்பாகம் பெற அம்பிகை கிரிவலம் வந்து தவம் செய்ததால் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.ஆடி பூரத்தன்று மாலை கோவிலின் உள்ளேயே உண்ணாமலை அம்மன் சந்நதி முன்பு தீமிதி விழா நடைபெறுவது சிறப்பு.

142 சந்நதிகள் உள்ள கோவில்.

திருவண்ணாமலை கோவிலில் உள்ள அழகிய ஆயிரம் தூண்கள் மண்டபம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் 142 சந்நதிகள் உள்ளன. 22 விநாயகர்கள், 306 மண்டபங்கள், ஆயிரம் தூண்கள் கொண்ட ஆயிரம் கால் மண்டபமும் அதனடியில் பாதாளலிங்கம் உள்ளது. அங்கு தான் ரமண மகரிஷி தவம் செய்த இடம். 43 செப்பு சிலைகள், கல்யாண மண்டபம் அண்ணாமலையார் பாத மண்டபம் என மிக பிரம்மாண்டமான கோவிலாக அமைந்துள்ளது. கோவில் கொடி கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மண்டமாக காட்சி தருகிறார். பஞ்சலிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவருக்கு தனி சந்நதியும் உள்ளது.

மரண பயம் போக்கும் பாதாளலிங்கம்.

பாதாளலிங்கம் சந்நதி நுழைவு வாயில்.

சித்தர்களின் சரணாலயம் என போற்றப்படும் திருவண்ணாமலை தலத்திற்கு கடந்த 1896ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி பகவான் ரமண மகரிஷி வந்தடைந்ததாக கூறப்படுகிறது. புகழ் பெற்ற திருவண்ணாமலை கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ளது பாதாளலிங்கம் சந்நதி. இங்கு இறைவன் பாதாள லிங்கேஸ்வரர் என்ற பெயரில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய சில படிகள் பாதாளத்தில் இறங்கி சென்று வழிபட வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி சிலையும் இருக்கிறது. ஆன்மீக மற்றும் ஞானத்திற்கான தேடலுடன் மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்தவர் ரமண மகரிஷி. அவருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இங்குள்ள பாதாளலிங்கத்தின் சந்நதிக்கு சென்று வழிபட்டார். அங்கு ஒரு புற்று இருந்துள்ளது. அதற்குள் சிவயோகி ஒருவர் இருப்பது உணர்ந்தவர் அங்கேயே தவத்தில் அமர்ந்து ஞானம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பாதாள லிங்கத்திற்கு செல்லும் முகப்பு பகுதியில் ஸ்ரீ ரமண மகரிஷியின் புகைப்படமும், அவருடைய வாழ்க்கை குறிப்பும் அங்கு இடம் பெற்றுள்ளதை காணலாம்.பாதாளலிங்கம் சுற்று மண்டபத்தில் ஏராளமானோர் தியானத்தில் ஈடுபட்டுள்ளதை காணலாம்.மரண பயத்தை போக்கும் இந்த பாதாளலிங்கமும், கிரிவலப்பாதையின் மலைக்குப் பின்புறம் அடி அண்ணாமலை என்ற பெயரில் அமைந்த தனி ஆலயத்தில் உள்ள சிவலிங்கமும் விசேஷமானது. இந்த இரண்டு லிங்கங்களையும் மனமுருக வழிபட்டால் மரண பயம் விலகி மனநிறைவு உண்டாகும் என கூறப்படுகிறது.

பாதாளலிங்கத்தை வழிபடும் பக்தர்கள்.

மூன்று இளையானார்.

திருவண்ணாமலை கோவிலில் கிழக்கு ராஜகோபுரத்தை கடந்த உடன் முருகன் அருணகிரிக்கு காட்சியளித்த சந்நதி உள்ளது.

திருவண்ணாமலை கோவிலில் இளையனார் என்னும் பெயரில் முருகன் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார்‌.இவர் தான் கம்பத்திலையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத்தில் காட்சி தருகிறார். அருணகிரி தனது தமக்கை ஏதோ கூறியமையால் கோவிலில் உள்ள வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிரைவிட முயன்ற போது முருகன் தடுத்தார்கொண்டு அருள் புரிந்து திருப்புகழ் பாட வைத்துள்ளார். அவர் கோபுரத்து அய்யனார் என்ற பெயரில் கோபுரம் அருகிலேயே உள்ளார். பிச்சை இளையனார் சந்நதி கிளி கோபுரம் அருகே உள்ளது.

சித்தர்கள் உலாவரும் திருவண்ணாமலை

கலைநயத்துடன் பிரமாண்டமாக காட்சி தரும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோபுரம்.

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக காட்சியளிப்பதால் பக்தர்கள் இம்மலையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர். இங்கு பல சித்தர்கள் உருவமாகவும், அரூபவமாகவும் கிரிவலம் வந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இம்மலையை சுற்றி அஷ்ட லிங்கங்கள் இருக்கிறது.கயிலை சென்றால் மோட்சம் அண்ணாமலையை நினைத்தாலே மோட்சம் என்றும் சொல்லுக்கு ஏற்ப அண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் தலமாக உள்ளது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலை அம்பிகையையும் தரிசிப்பது எவ்வளவு சிறப்பானதோ, ஆனந்தத்தை தரவல்லதோ அதே அளவு இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மலையை கிரிவலம் வருவதால் உள்ளமும், உடலும் நலம் பெறும். கிரிவலம் செல்ல அனைத்து நாட்களும் உகந்த தினம் என்றாலும் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினம் அன்று கிரிவலம் மேற்கொள்வது அனைத்தையும் விட சிறப்பானதாக கருதப்படுகிறது.

கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள்:

எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த எந்த லிங்கங்களை வழிபட வேண்டும் என்ற விபரம்.

திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள கம்பீரமாக காட்சி தரும் மலையை சுற்றி எண் கோண வடிவில் 8 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. கிரிவலம் செல்லும் போது அஷ்ட லிங்கங்களை நாம் தரிசனம் செய்ய வேண்டும். அங்கு இந்திரலிங்கம், அக்னி லிங்கம்,எம லிங்கம், நிறுதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம்,ஈசானிய லிங்கம் ஆகிய அஷ்ட லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. அது மட்டுமல்லாமல் வழியில் ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், 16 விநாயகர் கோவில்கள், ஏழு முருகன் கோவில்கள், ஆதி காமாட்சி அம்மன் என மொத்தம் 99 கோவில்கள் உள்ளன.

அண்ணாமலையின் அழகிய தோற்றம்.

கிரிவலப்பாதையில் ஏராளமான ஆசிரமங்கள்:

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேஷாத்ரி சுவாமிகள்,ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் உள்ளிட்ட ஏராளமான ஆசிரமங்கள் இருக்கின்றன. ஏராளமான மடங்களும் உள்ளன. அங்கு பக்தர்கள் அவரவர்கள் தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கொண்டு அறைகள் எடுத்து தங்கலாம். கிரிவலம் செல்லும் போது நாம் சிவபெருமானை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு அவரின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு பக்தியுடன் நடந்து செல்ல வேண்டும். எறும்பு புற்றுக்களுக்கு அன்னமிட்டாலோ அல்லது இனிப்பு வாங்கி வைத்தாலோ பெரும் புண்ணியம் வந்து சேரும். திருவண்ணாமலை கிரிவலம் தொடங்குவதற்கு முன்பு அண்ணாமலையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் பூத நாராயணரை தரிசித்து அவரின் அனுமதி பெற வேண்டும்.பூத நாராயணர் தான் திருவண்ணாமலையின் காவல் தெய்வம் ஆவார். அவரை வணங்கி பின் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன் பின் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும்,உண்ணாமலை அம்பிகையையும் தரிசனம் செய்ய வேண்டும்.அதன் பின்பு கோவில் ராஜகோபுரத்தை வணங்கி மலையை வலம் வர தொடங்க வேண்டும். இப்படித்தான் கிரிவலம் தொடங்க வேண்டும் என்பது நியதி.

கிரிவலம் சென்றால் நோய்கள் நீங்கும்:

மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருப்பாச்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்து குகை, சடை சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்து குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன. இந்த மலையில் ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளதால் அந்த காற்றினை நாம் சுவாசிப்பதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும் அங்கு சித்தர்கள் உலா வருவதாலும் மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சனைகளும் நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

குழந்தை வரம் அருளும் இறைவன்:

உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணிகளை செய்தவர்களில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அவருடைய வேண்டுகோளின் படி அவருக்கு மகனாக இருந்து தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாச்சலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு கூறுகிறது. வல்லாள மகாராஜா மரணமடைந்த போது இறைவனே அவருக்கு இறுதிச்சடங்கு நடத்தியதாக தலபுராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாச்சலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி கோவிலை சுற்றி வலம் வந்து வழிபட்டு வருகின்றனர்.

ஒளியின் மகத்துவம்:

கிரிவலம் செல்வதற்கு சரியான பொழுது இரவு நேரம்தான் பௌர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும் இரவு நெருங்கியதும் பௌர்ணமி நிலவு பிரகாசிக்க தொடங்கும் வேளையில் கிரிவலம் தொடங்க வேண்டும்.அந்த நிலவு ஒளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார். அந்த நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். நிலவு ஒளியால் மனதெளிவு உண்டாகும். கிரிவலம் வருபவர்கள் நமசிவாய இறை நாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வழிபட்டு வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

நோய் தீர்க்கும் தீர்த்தங்கள்:

திருவண்ணாமலை கோவில் உள்ளே உள்ள பிரம்ம தீர்த்தம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மலைப்பகுதியில் சங்கட தீர்த்தம் அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமலை தீர்த்தம், வருண தீர்த்தம்’ கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக திகழ்கிறது. இவற்றில் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமும் பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன.துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம் அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

திருவண்ணாமலை கோவில் உள்ளே உள்ள சிவகங்கை தீர்த்தம்

திருவண்ணாமலையில் ஒளிரும் கார்த்திகை தீபம்:

திருவண்ணாமலையில் ஒளிரும் கார்த்திகை தீபம்.

கார்த்திகை தீபம் என்றால் நம் நினைவுக்கு வருவது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலையும், மலையின் உச்சியில் ஏற்றி வழிபடும் திருக்கார்த்திகை தீபமும் தான் நினைவுக்கு வரும். கார்த்திகை தீபத்தன்று மலையில் ஏற்றப்படும் தீபத்தால் திருவண்ணாமலை ஒளிர்கின்றது. திருவண்ணாமலை தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தி அடைவார்கள் என்று அருணாச்சல புராணம் கூறுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனி போல் விலகும். ஜோதி தரிசனத்தை காணும் பக்தர்களுக்கு 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா:

பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் பத்து நாட்கள் விமர்சையான திருவிழாவாக நடைபெறும். சிவபெருமான் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இன்னாளிலேயே கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. பரணியன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள் பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் கருவறையில் வைத்து விடுவார்கள் பரம்பொருளாக ஒருவரான சிவபெருமான் எல்லா உயிர்கள் பொருட்களிலும் நீக்கமற நிற்கிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும் பின்பு இந்த தீபத்தை மழைக்கு கொண்டு சென்று விடுவார்கள் மாலையில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வார்கள் அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதிகம். மகாதீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சந்நதியை விட்டு வெளியே வருவதில்லை. மலை மேல் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் எரியும் என கூறப்படுகிறது. 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக ஆயிரம் கிலோ காடா துணி, 3000 கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

காந்த மலை:

திருவண்ணாமலை மண்ணை மிதித்த மகான்கள் தமது இறுதி காலம் வரையிலும் எல்லை தாண்ட விரும்பவில்லை‌ சேஷாத்திரி சுவாமிகளும் சரி,பகவான் ரமணரும் சரி அப்படித்தான் இருந்துள்ளனர். அவர்கள் திருவண்ணாமலையிலே சமாதியுற்றனர். திருவண்ணாமலை ஒரு காந்தமலை என்று தான் சொல்ல வேண்டும்.காந்தம் இரும்பு துகள்களை தன்வசம் ஈர்க்கின்ற மாதிரி உலகத்து மகான்களை எல்லாம் தன்னிடம் இழுத்துக் கொண்ட புண்ணிய பூமி அல்லவா இது.