சைவ சமயப் பேருலகின் இரண்டு ராஜாக்களான தில்லை நடராஜருக்கும், திருவாரூர் தியாகராஜருக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம்.
தில்லை நடராஜர்,
திருவாரூர் தியாகராஜர் ஆகிய
இருவரும் ஆதிரை நாளில் விழா காண்பவர்கள்.
திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரை விழாவின் சிறப்பை அப்பர் அடிகள் பதிகமாகவே பாடியுள்ளார்.
தில்லை நடராஜர் திருவாதிரைக்கு முன்பு,
தேர் ஏறி வலம் வந்து ராஜசபையில் அபிஷேகம் கண்டு சித்சபைக்கு எழுந்தருள்கிறார்.
தில்லை நடராஜர்
திருவாரூர் தியாகராஜர் இருவருமே தேரில் மட்டும்
வலம் வருபவர்கள்.அதன் பிறகு இருவருக்கும் பெரிய மகாபிஷேகம் நடைபெறுகிறது.
தில்லை நடராஜரின் நடனம்: ஆனந்தத் தாண்டவம்.
திருவாரூர் தியாகராஜரின் நடனம்: அஜபா நடனம்.
தில்லை நடராஜர்,
திருவாரூர் தியாகராஜர் ஆகிய
இருவருக்கும் ஆண்டுக்கு
ஆறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
தில்லைக் கூத்தரின் வலப்புறம் தனியாக ஒரு சுவரில் ஆகாச யந்திரம் அமைந்துள்ளது.இது ‘சிதம்பர ரகசியம்’ என்று போற்றப்படுகிறது.
திருவாரூரில்,தியாகராஜப்
பெருமானின் திருமேனியே ரகசியமாகப் போற்றப்படுகிறது.இது ‘சோமகுல ரகசியம்’ எனப்படுகிறது.
திருவாரூர் தியாகராஜருக்கு உரியது பூங்கோயில் என்றால், தில்லைக் கூத்தனுக்கு உரியது பொற்கோயில்.
தில்லையில் 96 கண்களைக் கொண்ட வெள்ளியால் போர்த்தப் பெற்ற ஜன்னல் உள்ளது.
திருவாரூரில், ‘திருச்சாலகம்’ எனும் தென்றல் தவழும் ஜன்னல் உள்ளது.
தில்லை மற்றும் திருவாரூர் இரு இடங்களிலும் ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ளன.
தில்லைக்கோயில் ஆகாய ஸ்தலம். திருவாரூர் பூமி ஸ்தலம்.இந்த இருவருமே மண்ணாகி, விண்ணாகி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
தில்லையிலும், திருவாரூரிலும் மூல லிங்கத்துக்கு மூலட்டானேஸ்வரர் என்றே பெயர். இந்த இரு இடங்களிலுமே பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய இருவரும் பாத தரிசனம் கண்டுள்ளனர்.தில்லையிலே பெருமானின் ‘அதிர வீசி ஆடத் தூக்கிய’ இடப் பாத தரிசனம் கண்டு மகிழ்ந்து, மார்கழித் திருவாதிரை நாளில் பேறு பெற்றனர்.
பின்னர் இருவரும் திருவாரூர் வந்து, இறைவனின் ‘இருந்தாடும்-கூத்து’ கண்டு பங்குனி உத்திர நாளில் வலப் பாத தரிசனம் பெற்றனர்.
திருவாரூரில் கமலாம்பிகை, நீலோற்பலாம்பிகை என இரு பெருந்தேவியர்.தில்லையில் சிவகாமி, உமயப்பார்வதி என இரு தேவியர்.
தில்லை நடராஜர்,
திருவாரூர் தியாகராஜர் ஆகிய
இரு ராஜாக்களுமே அடியார்கள் பாட அடியெடுத்துக் கொடுத்தவர்கள்.
திருவாரூர் பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு, ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று அடி யெடுத்துக் கொடுத்தார்.
பெரிய புராணம் பாட, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் தில்லைப் பெருமான்.
திருவாரூர் பெருமான், ‘ தில்லை ’ என்ற முதலடியைக் கொடுத்து சிதம்பரத்தை நினைவு படுத்துகிறார்.
தில்லைக் கூத்தனோ, உலகம் என்று அடியெடுத்து ‘ மண் தத்துவமான’ திருவாரூரை நினைவுபடுத்துகிறார்.