திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில்.


உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் விஷ்ணுவையும், சிவபெருமானையும் ஒரே இடத்தில் நின்று வழிபடலாம். வேறு எந்த கோயிலிலும் இந்த அதிசயத்தைக் காண முடியாது. அம்பலத்தில் ஆடும் தில்லைக் கூத்தனையும், யோகசயனத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாளையும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நின்று வழிபடலாம் தில்லை திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகளில் 23வது திருப்பதியாக உள்ளது. பிராட்டியைத் திருமார்பில் கொண்ட பெருமானை சிந்தையில் வைப்பதற்காக காயையும், கனிகளையும் உண்டு, காற்றை சுவாசித்து, ஐந்து விதமான தீயினை வளர்த்து, கடுமையான தவத்தைச் செய்ய வேண்டாம். வேதங்களை உணர்ந்து ஓதும் மறையோர்கள் தினமும் முறைப்படி வளர்த்த வேள்வித்தீ ஓங்குமளவுக்குப் புகழோங்கி நிற்கும் திருச்சித்திரக்கூடம் போய்ச் சேருவீர்களாக என இக்கோயில் குறித்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் கனகசபையின் முன்பு கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் தனி கொடி கம்பத்துடன் கூடிய தனிக் கோயிலாக ஒரு சுற்றுடன் திருச்சித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் கோவிந்தராஜப் பெருமாள் சாத்வீக விமானத்தின் கீழ் யோகசயன நிலையில் உள்ளார்.உற்சவரான தேவாதிதேவன் அமர்ந்த நிலையிலும், திருச்சித்திரக்கூடத்தான் நின்ற நிலையிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் சுற்று பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர், வேணுகோபாலர், ஆழ்வார்கள்,ஆஞ்சநேயர் முதலான மூர்த்திகளுக்கு தனி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலின் அருகே நாச்சியார் தாயார் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றார். அதன் அருகே கண்ணாடி மாளிகை உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த மடப்பள்ளியில் தினமும் சாமிக்கு படைக்கப்பட்ட புளியோதரை, வெண்பொங்கல் ஆகியவை கிடைக்கும். இக்கோயிலில் திருமங்கையாழ்வார் 32 பாசுரங்களாலும், குலசேகர ஆழ்வார் 11 பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இரண்டாம் நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னர் காஞ்சியில் வைகுந்த பெருமாள் கோயிலை கட்டியப் போது தில்லை திருச்சித்திரக்கூடத்தை கி.பி.800ம் ஆண்டில் கட்டியுள்ளார். இக்கோயிலுக்கு தனி வாயில், தனி கொடிமரம்,கோபுரம் உண்டு. தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். இக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நவராத்திரி விழா போன்றவை சிறப்பாக நடைபெற்று வருகிறது. சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களின் சமத்துவ நெறியை இத்தலம் உணர்த்துகிறது பெருமாளை மனம் உருக வழிபட்டால் தீவினைகள் அகன்று வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.