முன்னொரு காலத்தில் சிதம்பரம் பகுதி மக்கள் தங்களின் பொருட்கள் கானாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ முதலில் காவல் நிலையத்திற்கு செல்ல மாட்டார்கள்.சிதம்பரத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலான ஸ்ரீ பிரம்மராயர் சாமி கோயிலுக்கு சென்று அங்குள்ள குதிரையின் காலில் சீட்டு எழுதி கட்டிவிட்டு வருவார்களாம்,அடுத்த சில தினங்களில் திருடு போன பொருட்கள் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், ஆகாயத்தலமாக விளங்கும் தில்லை நடராஜர் கோயிலுக்கு நேர் மேற்கே பரமேஸ்வர நல்லூர் பகுதியில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது அருள்மிகு பிரம்மராயர் சாமி திருக்கோயில். இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது என்றும் எக்காலத்தில் தோன்றியது என்று அறிய இயலவில்லை எனக் கூறப்படுகிறது. தில்லையின் எட்டு திசைகளுக்கும் காவலாக இருந்து காத்து வரும் சாஸ்தாக்களில் முதன்மை சாஸ்தாவாக திகழ்ந்து வருபவர் ஸ்ரீ பிரம்மராயர் சாமி. இவர் உருவம் இல்லாமல் அரூபமாக உள்ளதால் அரூப சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார்.
மாணிக்கவாசகர் வழிபட்ட தலம்.
சிதம்பரம் தில்லை வனமாக இருந்தபோது மேற்குப் பகுதியில் குருந்த மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. இந்த குருந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ள பிரம்மராயர் கோயிலில் உள்ள நவலிங்கத்தை மாணிக்கவாசகர் வழிபட்டு தவம் புரிந்து வந்துள்ளார். பிரம்மராயருக்கு வாகனம் யானை என்பதால் கருவறையின் முன் யானையும் பலிபீடமும் உள்ளது. பிரம்மராயர் சுவாமியின் தளபதியாக இக்கோயிலில் ஸ்ரீ வீரனார் அருள்பாலித்து வருகின்றார். வீரனாரின் சிப்பாய்கள் 2 குதிரைகள் தான் இந்த கோயிலின் சிறப்பு. மேலும் இக்கோயிலில் சீட்டு கட்டும் பிரார்த்தனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. நம் வீட்டிலோ, கடையிலோ ஏதேனும் பொருட்கள் திருட்டு போனால் அதை ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி ஸ்ரீ பிரம்மராயர் சாமி முன் வைத்து பூஜித்து அதை அங்குள்ள குதிரைகள் காலில் கட்டி விடுவார்கள். இந்த சீட்டு கட்டிய ஒரு சில நாட்களில் தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைத்து விடும் என கூறப்படுகிறது இதே போன்று குழந்தைபேறு,கணவன்,மனைவி பிரிந்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இக்கோயிலில் பக்தர்கள் சீட்டு கட்டி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
திங்கட்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு.
ஸ்ரீ பிரம்மராயர் கோயிலில் நடுநாட்டு பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த அவரையானந்த சாமி என்பவர் இத்திருத்தலத்தில் உள்ள புற்றினை வழிபட்டு வந்துள்ளார். இவர் வடலூர் ராமலிங்க அடிகளார் சீடர் ஆவார்.அவரையானந்த சாமி சோமவார தினத்தில் மோட்சம் அடைந்ததால் திங்கட்கிழமை தோறும் இக்கோயிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து வழிபட்டு வருகின்றனர்.பிரம்மராயருக்கு நாட்டு சர்க்கரை வைத்து படைத்து அதனை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குகின்றனர். பழமை வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இத்திருத்தலத்தின் வலப்புறம் விநாயகர், நவலிங்கம், இடப்புறம் பாலசுப்ரமணியர், சப்தமாதர்கள், ரேணுகாதேவி,வீரனார்,அனுமன் போன்ற தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர்.