சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றி தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தங்களாக போற்றப்படும் தச தீர்த்தங்கள் உள்ளன. இந்த தச தீர்த்தங்களில் தை அமாவாசை அன்று தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தச தீர்த்தங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
சிவகங்கை:
தீர்த்தம் என்பது சிவகங்கையே என குமரகுருபர சுவாமிகளால் போற்றப்பட்ட தீர்த்தம். தென்புறத்தில் ஆதிமூலநாதர் கோவிலையும், மேற்புறத்தில் நூற்றுக்கால் மண்டபத்தையும்,சிவகாமி அம்மை திருக்கோவிலையும்,வடபுறத்தில் நவலிங்கம் திருக்கோவிலையும், கீழ்ப்புறத்தில் ஆயிரம் கால் மண்டபத்தையும் எல்லையாக கொண்டு அவற்றின் இடையே அமைந்துள்ளது சிவகங்கை தீர்த்தம்.உடற்பிணியால் வருந்திய சிங்கவர்மன் என்ற வேந்தன் இச் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி உடற்பிணி நீங்கி பொன்னிறம் பெற்றதாக புராண வரலாற்றில் கூறப்படுகிறது.
குய்ய தீர்த்தம்:
குய்ய தீர்த்தம் சிதம்பரத்திற்கு வடகிழக்கே கிள்ளையில் வெள்ளாறு கடலோடும் கலக்கும் இடத்தில் அமைந்த கடற்றுறையாகும். ஓர் அசுரனை போரில் வெல்லும் உபாயத்தினை கற்பிக்க வந்த தேவ குருவை வருணன் அவரை தவறாக பகைவன் என்று நினைத்து அவர் மேல் அம்பு விடுத்ததால் அந்த குரு இறந்தார். கொலை பாவம் காரணமாக ஒரு பிசாசு வடிவம் தோன்றி பாசக்கட்டு கட்டிக் அவனைக் கடலில் வீழ்த்தியது. நெடுநாள் கடலிடையே வருந்தி கிடந்த வர்ணனுக்கு சிவபெருமான் மாசி மகத்தில் வெளிப்பட்டு அவனது பாசக்கட்டு அற்று போகும் படி அருள் புரிந்தார்.அக்கடற்றுறை பாசமறுத்த துறை எனப் பெயர் பெற்றது.
புலிமடு தீர்த்தம்:
புலிமடு தீர்த்தம் சிதம்பரம் கோவிலின் தென் திசையில் அமைந்துள்ள நீர் நிலையாகும். மத்தியந்தன முனிவர் வழிபட்ட மத்தியந்தனேசுரம் என்னும் திருக்கோவில் இந்த தீர்த்தக்குளத்தின் மேற்கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் கல்வெட்டுகளில் சுடலையமர்ந்தார் கோயில் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
வியாக்கிரபாதத் தீர்த்தம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலின் மேற்கு திசையில் வியாக்க்ரபாத முனிவர் ஆன்மார்த்தமாக வழிபாடு செய்த திருப்புலீச்சுரம் திருக்கோவிலுக்கு எதிரே அமைந்த தீர்த்தக்குளமாகும். திருநீலகண்ட நாயனார் மற்றும் அவர் துணைவியார் ரத்தின சலை அம்மையாரும் இக்குளத்தில் மூழ்கி இளமை பெற்ற குளமாகும்.
அனந்த தீர்த்தம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மேற்கு திசையில் பதஞ்சலி முனிவர் ஆன்மார்த்தமாக வழிபாடு செய்த அனந்தீஸ்வரன் கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள தீர்த்தக்குளமாகும்.
நாகசேரி தீர்த்தம்:
பதஞ்சலி முனிவர் நாக உருவம் கொண்டு பிலத்துவாரம் வழியாக தில்லைக்கு வந்துள்ளார்.அவர் வந்து சேர்ந்த இடத்திற்கு நாகசேரி தீர்த்தக்குளம் எனப்பெயர் பெற்றது.
பிரம தீர்த்தம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வடமேற்கு மூலையில் சிங்காரத்தோப்பு என வழங்கும் திருகளாஞ்சேரியில் உள்ளது. இக்குளத்தின் மேற்கே வசிஷ்ட முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட திருக்களாஞ்செடியுடையார் திருக்கோவில் அமைந்துள்ளது.இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்குப் பிரம்மபுரீஸ்வரர் என்னும் திருப்பெயருண்டு. பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இந்த தீர்த்தம் அமைந்திருப்பதால் இது பிரம்ம தீர்த்தம் என பெயர் பெற்றது.
சிவப்பிரியை தீர்த்தம்:
தில்லை நடராஜர் கோவிலுக்கு வட திசையில் தில்லைக் காளியம்மன் கோயிலுக்கு எதிர் புறத்தில் உள்ளது சிவப்பிரியை தீர்த்தக் குளம்.
திருப்பாற்கடல் தீர்த்தம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வட கிழக்கு திசையில் அமைந்துள்ளது திருப்பாற்கடல் தீர்த்தம். வியாக்ரபாத முனிவரின் குழந்தை உபமன்யு பாலுக்கு ஏங்கி அழுத பொழுது சிவபெருமான் திருப்பாற்கடலையே தில்லைக்கு வரவழைத்தருளினார் என்பது புராண வரலாறு. “பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்” என தில்லை இறைவனை போற்றி பாடியுள்ளார் சேந்தனார். அப்படிப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்தக்குளம் ஆத்மநாதர் கோயில் அருகே உள்ளது.
பரமானந்த கூபம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சித்சபையின் அருகே சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகே அமைந்துள்ளது திருமஞ்சன கிணறு ஆகும். தினமும் சாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் இந்த கிணறு பரமானந்த கூபம் என கூறப்படுகிறது.
தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி:
சிவ வடிவமாகிய சிவகங்கை முதல் பேரின்ப வடிவமாகிய பரமானந்த கூபம் வரை உள்ள இந்த தச தீர்த்தங்களிலும் நடராஜப்பெருமான் தை அமாவாசை தோறும் தீர்த்தம் கொடுத்தருள்வார். இந்த தச தீர்த்தங்களிலும் சிவபெருமானை வழிபட்டு உடன் சென்று நீராடி அவர்கள் இம்மை, மறுமை நலங்கள் ஒழுங்கு பெற்று இன்புறுவார்கள் என கூறப்படுகிறது.