வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என தாவரங்களையும் சக உயிர்களாக நினைத்து உருகியவர் வள்ளலார்.


ராமலிங்க அடிகளார்.

“வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன்” என தாவரங்களையும் சக உயிர்களாக நினைத்து உருகியவர் ராமலிங்க அடிகளார்.வள்ளலார் என அடியார்களால் அன்புடன் அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் இறைவனை ஜோதி வடிவமாக கண்டு வழிபட்டு ஜோதியில் ஐக்கியமானவர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பதே வள்ளலார் உலக மக்களுக்காக அளித்த மிக சிறந்த மந்திரமாகும்.இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்கு அகத்திலும், புறத்திலும் இருக்கின்ற தீவினைகள் அகலும். ஜீவகாருண்யம் பெருகும். நோய்,நொடிகள் ஏதும் நம்மை அன்டாது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்று கூறப்படுகிறது.

மருதூரில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் ராமையா பிள்ளைக்கும்,சின்ன அம்மையாருக்கும் மகனாக தோன்றியவர் ராமலிங்க அடிகளார். அவர் 1823ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். வாழையடி வாழையாக வந்த அருள் திருக்கூட்ட மரபில் உதித்த ராமலிங்க அடிகளாருக்கு செந்தமிழ் கடவுள் ஆகிய முருகப்பெருமானது திருக்காட்சி இளமையிலே கிடைத்துள்ளது. இதனால் அவர் செந்தமிழும், வடமொழியும் ஆகிய இருபெரும் மொழிகளையும் ஓதி உணரும் பெரும் ஞானம் கைவரப் பெற்றார்.கடவுள் அனைவரது உள்ளங்களிலும் ஜோதி வடிவமாக திகழ்கின்றார். அத்தகைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையே உலக உயிர்களை எல்லாம் வாழ வைக்கிறது என்பதை கண்டறிந்தார் வள்ளலார். உண்மையை மனதில் கொண்டு சாதி, மத வேறுபாடின்றி எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் உடையவராய் வாழும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டினை நல்கும் ஜீவகாருண்ய ஒழுக்கமே உலகில் உயர்ந்தது என அறிந்து தெரிந்ததால் வள்ளலார சமரச சன்மார்க்க நெறியை கைக்கொண்டார். பயிர்கள் வாடுவதை பார்க்கப் பொறுக்காத இராமலிங்கர், பசியால் வாடும் மக்களின் துயர் துடைக்க முன் வந்தார். தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், வடலூரில் சன்மார்க்க சங்கம்,சத்திய தர்மசாலை, சத்திய ஞானசபை என்னும் மூன்று அருள்நெறி காக்கும் அமைப்புகளை நிறுவினார் வள்ளல் பெருமான். தனிக் கொள்கையை, தனிக்கொடியை, தனி சபையை, தனி மார்க்கத்தை,தனி மந்திரத்தை, தனி வழிபாட்டை கண்டார்.முடிவில் அருட்பெருஞ்ஜோதி அடியவராக திகழ்ந்தார்.

வடலூரில் உள்ள சத்திய ஞானசபை

வள்ளலார் கையால் மூட்டப்பட்ட அணையா அடுப்பு.

பசியை ஒரு பிணி என்று சொன்னவர் வள்ளலார். சாதி, மதம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாக்கும் பிணி பசி. அதைப் போக்குவதே மாபெரும் தர்மம் என்று போதனை செய்தார் வள்ளலார். அதற்கு தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக 1867 ம் ஆண்டு வைகாசி மாதம் 11ம் தேதி கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய தர்மசாலையை நிறுவினர். அப்போது அவர் கையால் மூடப்பட்டது தான் அங்குள்ள அணையா அடுப்பு.

வள்ளலார் மூட்டிய அணையா அடுப்பு.

தினமும் மூன்று வேளை அன்னதானம்.

வடலூரில் உள்ள சத்திய ஞானசபையில் உள்ள அணையா அடுப்பினால் இன்றுவரை பலரின் பசியை போக்கி வருகிறது. எந்த சூழலிலும் இந்த நெருப்பு அணைந்ததே இல்லை என கூறப்படுகிறது. இங்கு தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு ஒவ்வொரு வேளைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கொரோனா போன்ற கொடிய நோய் தொற்று காலத்தில் உலகத்தின் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடியிருந்த நிலையிலும் வடலூரில் உள்ள சத்திய தர்மசாலை தனது சேவையை செவ்வனே செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வடலூரில் சத்திய தர்மசாலையில் நடைபெறும் அன்னதானம்.

வள்ளல் பெருமான் அருளிய திருவருட்பா.

வள்ளல் பெருமான் பாடிய திருவருட்பா ஆறு திருமுறை பகுதிகள் கொண்டு விளங்குகின்றது.399 பதிகங்களையும், 5818 பாடல்களையும் கொண்டது. இறை நெறியை ஆன்ம நேய பெருநெறியாக்கிய வள்ளல் பெருமான் தைப்பூச நன்னாளில் வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் ஒரு அறைக்குள் சென்று கதவினை மூடிக் கொண்டு இறைவனோடு இரண்டறக் கலந்து ஜோதி வடிவானார் அவர் சித்தி அடைந்த நாள் 1874ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி ஆகும்.

தைப்பூச திருநாளில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம்.

இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் ராமலிங்க அடிகளார்.கடலூர் மாவட்டம், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். மனிதனின் அகத்தில் உள்ள காமம், கோபம், லோகம், மோகம், மதம், மாச்சரியம் உள்ளிட்ட 7வகை தீய குணங்கள் விலகினால் அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவனை காணலாம் என்பதே வள்ளலாரின் உபதேசம். இதனை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் சத்திய ஞானசபையின் மையப் பகுதியில் நிலைக்கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை மறைத்து 7 வண்ணத் திரைகள் போடப்பட்டுள்ளன. மாதம்தோறும் பூசம் நட்சத்திரத்தன்று ஆறு திரைகள் மட்டும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.ஆனால் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். தை பூசத்தன்று சத்திய ஞான சபையில் காலை 6.00 மணி, பகல் 10.00 மணி, பகல் 1.00 மணி, இரவு 7.00 மணி,இரவு 10.00மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகின்றது. இதனையடுத்து அடுத்த நாள் அதிகாலை 5.30 மணிக்கு மொத்தம் ஆறு காலம் ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனை தமிழகம் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதோடு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும் போது பக்தி பரவசத்துடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற முழக்கங்களை எழுப்புவார்கள்.இதனை தொடர்ந்து தை பூசத்திற்கு அடுத்த 2 தினங்களில் வள்ளலார் இறைவனோடு கலந்த சித்தி வளாக தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தைப்பூச ஜோதி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.

வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகம்

வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது சித்தி வளாகம்.வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. வள்ளலார் சித்தி பெற்ற அறையின் கதவு பூட்டப்பட்டு இருக்கும்.கதவுக்கு வெளியே அமர்ந்து தியானம் செய்யலாம். தினமும் இங்கே திருவருட்பா பாடல்களை அன்பர்கள் பாடி பிரார்த்தனை செய்கின்றனர்.மாதம் பூச நாட்களில் அன்னதானம், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தைப்பூசத்திற்கு மூன்றாவது நாள் வள்ளலார் சித்தியடைந்த அறையை ஜன்னல் வழியாக பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.