சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழா என்றதும் எல்லோருக்கும் திருவாதிரை ஆருத்ரா திருவிழாவும், ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நினைவுக்கு வரும். ஆனால் நடராஜர் சிதம்பரத்தில் திரு நடனம் புரிய தொடங்கிய நாள் தைப்பூச நன்னாளாகும். கயிலை மலைச்சாரலில் வெவ்வேறு இடங்களில் இருந்து பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி ஆகிய முனிவர்கள் தவம் செய்து வந்தனர். பல இடங்களில் இருந்தாலும் அவர்களுக்கு நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருந்தது. அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அன்பர்களே உங்களுக்கு தென்னாடு தில்லைவனத்தில் நமது நடனக் கோலத்தை காட்டுவோம். நீங்கள் அங்கே சென்று தவம் புரியுங்கள் என்றார். மூவரும் தில்லை வனமாக இருந்த சிதம்பரத்தை அடைந்து அங்கு ஒரு ஆலமரத்தடியில் லிங்க வடிவில் இருந்த ஆதிமூலநாதரை கண்டு வணங்கி தவமிருந்தனர். இதனால் இறைவன் மகிழ்ந்து அவர்களுக்கு நடனம் புரிந்து காட்டினார். அந்த நாள் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடிய நன்னாளாகும். நடராஜரின் அற்புத அந்த ஆனந்த நடனம் இன்றும் நடக்கிறது. அதே ஆனந்த தாண்டவ கோலத்தில் தான் இன்று நடராஜர் பொற்கூறையின் கீழ் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.
சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி
தைப்பூசத் திருநாளில் இறைவன் நடனம் புரிந்ததால் இன்றும் சிதம்பரத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.10 தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒரே பீடத்தில் உள்ள பதஞ்சலி, வியாக்ரபாதர்,ஜைமினி ஆகியோர் சிலைகளை ஆதிமூலநாதருக்கு முன்பாக எழுந்தருள செய்து தீபாராதனை நடத்துகின்றனர். 10ம் நாளான தைப்பூசத் தினத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா சென்று பகல் நேரத்தில் சிவகங்கை குளத்தின் மேற்கு வாசலில் எழுந்தருள, பதஞ்சலி வியாக்ரபாதர், ஜைமினி ஆகியோரின் திருவுருவ சிலைகள் அருகில் இருக்க சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி ஸ்ரீ நடராஜருக்கு நிவேதனம் செய்து அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும். தைப்பூசத் அன்னதான நிகழ்ச்சி சோழர் காலத்தில் இருந்தே நடந்து வருவதாக கூறப்படுகிறது.சிவபாதசேகரன் என்று போற்றப்படும் எதிரிலிசோழன் குலோத்துங்கன் தைப்பூசத் அன்னதான பாவாடையை நிகழ்த்தினார் என்று பழங்கால செப்பேடுகள் தெரிவிக்கின்றது.தைப்பூச நாளில் சிவகங்கையில் தீர்த்தவாரி கண்டு ஆனந்த நடனத்திற்கு காரணமாகிய ஸ்ரீ ஆதிமூலநாதரையும், பொன்னம்பலத்தில் அம்பிகை சிவகாமசுந்தரியுடன் வீற்றிருக்கும் நடராஜரையும் தரிசித்து பேரின்பம் காண்போம்.