வசிஷ்ட முனிவர் வழிபட்ட ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்!


சிதம்பரத்தில் வசிஷ்டர் வழிபட்ட
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில்!

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை சுற்றி ஏராளமான பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன. அப்படி  ஒரு கோயில் தான் சிதம்பரம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பிரசன்னநாயகி சமேத திருக்களாஞ் செடியுடையார் கோயில். இந்த கோயிலை பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைப்பார்கள். அடிமுடி காண சிவனை, முடி கண்டதாக பிரம்மா பொய் கூற, அதனால் படைப்பு தொழிலில் களங்கம் ஏற்பட, சிவனை பூஜித்து,பேறு பெற்ற இடம் திருக்களாஞ் செடியுடையார் கோயில். ‘களா’ என்பது புதர் வகைச் செடி. சிலர் இதைக் ‘கிளா’ என்றும் கூறுவர். தோற்றத்தில் காரைச்செடியை ஒத்திருக்கும் இச்செடி, மலைப்பிரதேசங்களில் 5 முதல் 6 அடி உயரத்திற்கு தன்னிச்சையாக வளரக்கூடியவை. வசிஷ்ட முனிவர், களா செடியின் கீழ் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், இத்தல இறைவன் ‘திருக்களாஞ் செடியுடையார்’ என்று பெயர் பெற்றார்.

மன்னன் சிங்கவர்மன் நோய் நீங்கி பொன்னிறம் பெற்றான்!

மன்னன் சிங்கவர்மன் நீராடி தோல் நோய் நீங்கப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை குளம்!

கவுட தேசத்து மன்னனான சிங்கவர்மன் என்ற மன்னன் தோல் நோயால் அவதிப்பட்டான். அதனால் தன்னுடைய அரச பதவியை, தனது சகோதரர்களான வேதவர்மன், சுதமதி ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு இறை தரிசனம் செய்ய புறப்பட்டான். தில்லை நடராஜரை வணங்க வேண்டும் என்று நினைத்த சிங்கவர்மன், தில்லை வனத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு மூலநாதரை வணங்கும் போது, வியாக்ரபாத முனிவரைக் கண்டான். அவரைப் பணிந்து பஞ்சாட்சர மந்திர உபதேசம் பெற்றான். பிறகு முனிவர் பணித்தபடி சிவகங்கையில் நீராட அவனது உடல் நோய் நீங்கியது. அவனது உடன் பொன்னிறமாக மின்னியது. இதனால் அவனுக்கு இரண்யவர்மன் என்ற பெயர் வந்தது. இதற்கிடையில் அரச பதவிக்காக இரண்யவர்மனின் இரு சகோதரர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். இதைக் கண்டு வெறுப்படைந்த அவர்களுடைய தந்தை தன்னுடைய மூத்த மகன் இரண்யவர்மன் தில்லையில்  இருக்கும் தகவல் அறிந்த அவர் அவரை அழைத்து வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள செய்யும்படி குல குருவான வசிஷ்டரிடம் சொல்லிவிட்டு உயிர் நீத்தார். இதையடுத்து இரண்யவர்மனை அழைத்து வருவதற்காக, தில்லை வனம் புறப்பட்டார் வசிஷ்டர்.

ஆதிகாலத்தில் தில்லை வனத்தில் இருந்த தில்லை செடிகள்!

வசிஷ்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம்!

வசிஷ்டர் தில்லையின் வட எல்லைக்குள் நுழைந்தவர், ஒரு சிவலிங்க திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இந்த நிலையில் இரண்யவர்மனை அழைத்துச் செல்வதற்காக, வசிஷ்ட முனிவர் வந்திருப்பதை அறிந்த வியாக்ரபாதர், இரண்யவர்மனை முன் சென்று வசிஷ்டரை சந்திக்கும்படி கூறினார். இரண்யவர்மனும் வசிஷ்டர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். அங்கு வசிஷ்ட முனிவரைச் சந்தித்தவன், தன் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு துயருற்றான். சிறிது நேரத்தில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் அங்கு வந்தனர். வசிஷ்டர் அவர்கள் இருவரையும் வரவேற்று, திருகளாஞ் செடியின் கீழ் வீற்றிருந்த பெருமானை தரிசிக்கச் செய்தார். பின்னர் இரண்யவர்மனை அழைத்துக் கொண்டு வசிஷ்டர் கவுடதேசம் சென்றார். அவருக்குப் பின், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்களாஞ் செடியுடையாருக்கு, வியாக்ரபாதர் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார்.

வசிஷ்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் கோயில்!

வசிஷ்டரால் ஸ்தாபனம் செய்யப்பட்டு, வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட அந்த சிவலிங்கத்தை வழிபடும் ஆவல் திருமாலுக்கு ஏற்பட்டது. அவர் தன்னுடைய ஆவலை திருமகளான லட்சுமிதேவியிடம் கூறினார். திருமகள் தானும் வருவதாக கூற, இருவருமாக பூலோகம் வந்து திருகளாஞ் செடியுடையாரை வழிபட்டனர்.
திருக்களாஞ் செடியுடையார், பிரசன்ன நாயகி மேற்கண்ட வரலாறானது, கோவிலின் கருவறை தென் சுற்றில், தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு அருகே அழகான சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரம்ம ஞானம் பெறுவதற்காகவே வசிஷ்டர், இத்தல இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கிழக்கு நோக்கியபடி அமைந்துள்ளது இந்த கோயில். இக்கோயிலின் உள்ளே நுழையும் போது இடது புறம் அரச மரத்தின் கீழ் ஒரு சிவலிங்கமும், வலது புறம் ஆலய கிணறும் இருப்பதைக் காணலாம். வாசலுக்கு நேர் எதிரில் திருகளாஞ் செடியுடையார்(பிரம்மபுரீஸ்வரர்) கருவறை உள்ளது. கருவறை அர்த்த மண்டபம், முன்மண்டபங்களுடன் அழகிய சிற்பங்கள் நிறைந்த கருங்கல் கற்றளியாக காட்சி தருகிறது.

லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்!

கோயில் சன்னிதி சுற்றில் எண்ணற்ற கல்வெட்டுகள் காணப்படுகின்றன. துவார பாலகர்கள், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மற்றும் சிதம்பரம் புராண காட்சிகள் என காணும் சிற்பங்கள் யாவும் மிகுந்த கலை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டு, காண்போரை கவர்ந்திழுக்கின்றது.  சன்னிதியின் உள்ளே திருக்களாஞ் செடியுடையார்(பிரம்மபுரீஸ்வரர்) சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அம்பாள் ஸ்ரீ பிரசன்ன நாயகி!

அர்த்த மண்டபத்தில் பெருமானுக்கு இடதுபுறத்தில் கிழக்கு நோக்கியபடி அம்பாள் சன்னதி உள்ளது. அங்கு பாதுகாப்பு கருதி கொண்டு வந்து வைக்கப்பட்ட பிரம்மதேவர் வடதிசை நோக்கியவாறும், யோக குரு தென் திசை பார்த்தபடியும் அருள்பாலிக்கின்றனர். முற்காலத்தில் பல சிவாலயங்களில் அம்பாள் சன்னதி ஏற்படுத்தப்படாமல் இருந்துள்ளது. அம்பாள் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டதும், பின்னர் அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டதும் காலப்போக்கில் நிகழ்ந்தவைகள் என்று கூறுகிறார்கள். அதுபோல இவ்வாலயத்திலும் பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாரச் சுற்றில் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், தென்முகம் நோக்கிய பிரசன்னநாயகி சன்னதி உள்ளன.

சிங்கார வள்ளி சன்னதி

மடப்பள்ளிக்கு அருகில் வடக்கு நோக்கிய சிங்கார வள்ளி சன்னதி காணப்படுகின்றது. இங்குள்ள சிங்கார வள்ளி என்பவர், இத்தல பெருமானை வழிபட வந்த பக்தை ஆவார். அவர் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு இவ்வாலயத்தின் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் என்கிறார்கள் தல புராணம் அறிந்தவர்கள். கோயிலின் வடகிழக்கு திசையில் ஆலய தீர்த்தமான பிரம்மதீர்த்தம் அமைந்துள்ளது.

பிரம்ம தீர்த்தம்!

இது இந்த ஆலயத்துக்கு மட்டுமின்றி, தில்லை ஆடவல்லான் ஆலயத்தின் தச தீர்த்தங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு வருடம் பங்குனி அமாவாசைக்கு அடுத்த நாள் (தெலுங்கு வருடபிறப்பு), சிதம்பரம் நடராஜபெருமான் இந்தத் தீர்த்தத்திற்கு வந்து தீர்த்தவாரி கொடுப்பது என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தமிழுடன் தெலுங்கு மொழியையும் தாய்மொழியாகக் கொண்டிருந்த பல்லவ மன்னர்கள், தெலுங்கு புத்தாண்டு தினத்தன்று நடராஜரை தரிசிப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இந்த கோயில் பழம்பெரும் கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் இறைவனை தரிசிக்க உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் தற்போது தினசரி ஒருகால பூஜை மட்டும் நடைபெறுகிறது.பிரம்மா, வசிஷ்டர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, திருமால், திருமகள், மறைஞானசம்பந்தர் ஆகியோர் வழிபட்ட இக்கோயில் இறைவனைப் பற்றி அதிவீரராம பாண்டியர் அழகாக பாடியுள்ளார்.

மறைஞான சம்பந்தர் அதிஷ்டானம்!

மறைஞான சம்பந்தர் அதிஷ்டானம்!

மறைஞான சம்பந்தர்!

சந்தானசாரியர்களில் ஒருவரும், உமாபதி சிவத்தின் குருவானவருமான மறைஞான சம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலின் அருகே  தவமிருந்து முக்தியடைந்துள்ளார். பிரம்மபுரீஸ்வரர் கோயில் வெளியே மறைஞான சம்பந்தரின் அதிஷ்டானம் தனியாக உள்ளது. அதிஷ்டானத்தில் வியாழக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது!

சிதம்பரம் சிங்காரத்தோப்பு  ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில்!

நடராஜர் அரசாட்சி புரியும் சிதம்பரத்திற்கு வடமேற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்காரத்தோப்பு பிரம்மபுரீஸ்வரர் கோயில்.  இக்கோயிலுக்கு செல்ல நேரிடையாக பேருந்து வசதி கிடையாது. சென்னை, புதுச்சேரி, கடலூர், சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் சிதம்பரம் அண்ணா குளம் அருகே இறங்கி புறவழிச்சாலையில் சென்று  அங்கிருந்து கொஞ்சம் தூரம் நடக்க வேண்டும். இல்லை என்றால் அண்ணா குளம் அருகில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். சிதம்பரம் ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.