ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோயில் என்பது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதார கோலத்தில் மூலவர் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தை தரிசிப்பது மிகவும் அரிதாகும்.ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகப் பெருமாள் திருக்கோயில் வெள்ளாற்றின் தென்கரையில் விருத்தாசலத்திற்கு தென்கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. விருத்தாசலம்,சிதம்பரத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன.ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாச்ரமம் ஆகிய ஷேத்திரங்களுடன் இணைந்து ஸ்ரீமுஷ்ணமும் சுயம்பு ஷேத்திரமாக விளங்குகிறது.
கோயில் வரலாறு!
ஒருசமயம், இரண்யாட்சன் என்ற அசுரன் பூலோகத்தை கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனால் தேவர்கள் மிகவும் அச்சமுற்று பிரம்மாவை நாடினார்கள். பூலோகத்தை மீட்பதற்காக தியானம் செய்தார். அப்போது அவருடைய வலது நாசியில் இருந்து பன்றி ரூபம் வெளிப்பட்டது. அந்த திவ்யமான பன்றி ரூபம் தன் உருவத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது. பகவான் விஷ்ணு பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என்று அனைவரும் உணர்ந்தனர்.
கடலுக்குள் சென்ற வராகபகவான் ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எந்த சிறு இடரும் ஏற்படாவண்ணம் சாதுர்யமாக தூக்கியபடி நீரிலிருந்து வெளிப்பட்டார். இதைக்கண்ட இரண்யாட்சன் கோபம் கொண்டு வராகமூர்த்தியைத் தாக்க, இருவருக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. இறுதியில் அசுரனை வீழ்த்தி பூமியைக் காத்தருளினார். பிரம்மாவும் தேவர்களும் வராக மூர்த்தியை வாழ்த்தித் துதித்தனர்.மீண்டும் வைகுண்டம் திரும்பிச் செல்ல வராகர் எண்ணியபோது பூமிதேவி தன்னுடன் தங்கியிருக்கும்படி பகவானை வேண்டிக் கொண்டதாக நாரதர் புராணம் கூறுகிறது. பூமிதேவியின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீ முஷ்ணம் திருத்தலத்திலேயே பகவான் கோயில் கொண்டதாக ஐதீகம்.
ஸ்ரீமுஷ்ணம் திருக்கோயில் ஏழுநிலை கொண்ட கம்பீரமான ராஜகோபுரமாகும். திருக்கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரைத் தரிசிக்கும் முன்பாக, தனி சந்நிதியில் அமைந்தருளும் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். கோயிலின் தென் கிழக்குத் திசையில் நித்ய புஷ்கரணி அமைந்துள்ளது. இதில் ஸ்நானம் செய்து அருகிலேயே சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணரின் தரிசனம் பெறுவது சிறப்பு.
நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் மூலவர்!
இக்கோயிலில் பூவராக சுவாமி மூலவராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தம் இடுப்பில் இருக்கும் சங்கு, சக்கரத்தைத் தன் இரு திருக்கரங்களால் மறைத்த வண்ணம் திருமேனி மேற்கு திசையை நோக்கியும் திருமுகம் தெற்கு திசையை நோக்கியும் அமையப்பெற்று அருள்காட்சி அருள்கிறார். உற்சவ மூர்த்தி யக்ஞ வராகர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயாருக்கு அம்புஜவல்லி என்பது திருநாமம்! பெரும்பாலான பெருமாள் கோயில்களில் மூலவருக்கு தைலக்காப்பு மற்றும் சாத்தப்பட்டு உற்சவருக்கே தினமும் திருமஞ்சனம் நடக்கும். ஆனால் இக்கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பூவராக ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் பத்து நாள் உற்சவமாக இது நடைபெறுகிறது.சித்ரா பவுர்ணமி அன்று தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இக்கோயிலில் பகவான் பன்றி ரூபத்தில் வீற்றிருப்பதால் பெருமாளுக்கு இங்கு கோரைக்கிழங்கு விசேஷ நைவேத்தியமாக செய்யப்படுகிறது. பகவானை நேரிடையாக தரிசிக்க மிகுந்த விருப்பம் கொண்டுள்ள பக்தர்கள் இங்கு வந்து பூவராக சுவாமியை தரிசித்து பிரார்த்தனை செய்தால் அவர்களது விருப்பங்கள் நிறைவேறும். ஆனந்தமான வாழ்வும் கிட்டும் என கூறப்படுகிறது. இக்கோயில் காலை 6:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும் மாலை 4.00மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.