தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே அமைந்துள்ளது சிவபுரி கிராமம். இக்கிராமத்தில் வேதநாயகி சமேத ஸ்ரீ பால்வண்ணநாதர் கோவில் உள்ளது. இந்த ஊரின் புராண பெயர் திருக்கழிப்பாலை என கூறப்படுகிறது. கொள்ளிடக் கரையில் உள்ள இக்கோவிலின் தீர்த்தம் கொள்ளிடம் தான். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போனதால் வென்னிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும்,பார்வதியும் திருமண கோலத்தில் அருள் பாலிக்கின்றனர்.இக் கோயில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. கோயிலின் உள்பிரகார நுழைவு வாசலில் இருபுறமும் அதிகார நந்திகள் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர்,வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி,விஷ்ணு, பிரம்மா, அகோரமூர்த்தி,முயலகன் மாறிய நிலையில் தட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
இக்கோவில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பால்வண்ணநாதர் கோவில் முந்தைய காலத்தில் கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னும் இடத்தில் இருந்ததால் இத்தலத்திற்கு கழிப்பாலை என்று பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோவில் முழுவதும் சிதலமடைந்துவிட்டது.இதனால் தற்போது உள்ள இடத்தில் கோவில் கட்டி அதில் வேதநாயகி சமேத பால்வண்ணநாதரை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். இக்கோயிலில் உள்ள லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும்,உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.மேலும் கோவிலில் உள்ள விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில் அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இக்கோவிலில் உள்ள பைரவர் காசி பைரவர் போல் உள்ளதால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைப்பதாக ஐதீகம்.
சிவபுரி பால்வண்ணநாதர் கோவிலில் காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இது மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல் நாய் வாகனம் இல்லாமல் 27 மண்டை ஓடடுகளுடன் பூணூல் அணிந்து சர்ப்பத்தை அரைஞானாக அணிந்து ஜடாமுடி சிங்கப்பல்லுடன் அருள்பாலித்து வருகிறார்.காசியில் பைரவர் வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இக்கோவில் பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். அஷ்டமி அன்று பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவருக்கு தீபம் ஏற்றி வணங்கி வழிபாடு நடத்துவார்கள். அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இக்கோயிலும் ஒன்று. வால்மீக முனிவர் இங்கு வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார் இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளி முடித்த கோலத்தில் உள்ளது.
பால்வண்ணநாதர் கோவில் தல வரலாறு.
கபில முனிவர் ஒவ்வொரு சிவ தலங்களாக தரிசித்து வரும்போது வில்வ வனமாக இருந்த இந்த பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால் சொரிந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது.முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னரின் குதிரையின் கால் குளம்பு மணல் லிங்கத்தின் மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. இதனால் மனம் வருந்திய முனிவர் பிளவு பட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது, இறைவன் பார்வதி சமேதராக காட்சியளித்து முனிவரே பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசு வடிவில் இங்கு வந்து பால் சொறிந்துள்ளது.எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்று கூறியதாக புராணங்கள் கூறுகிறது. இக்கோவிலில் இன்றும் குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் அருள்பாலித்து வருகின்றனர்.
சிதம்பரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோவில்.
சிவபுரி பால்வண்ணநாதர் கோவில் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரே ஒரு மினி பேருந்து உள்ளது. ஆட்டோ அல்லது காரில் எளிதாக சென்று வரலாம். இக்கோவில் காலை 6:00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். அஷ்டமி நாட்களில் இரவு 9.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.