சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் களைகட்டும் ஐப்பசிப் பூரவிழா.


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயில்.

பூலோக கயிலாயம் எனவும் கோயில் எனவும் போற்றப்படுவது பெரும்பற்றபுலியூர் என்னும் சிதம்பரமாகும். ஆகாய ஸ்தலமான சிதம்பரத்தில் திருச்சிற்றம்பலத்தில் சிவபெருமான் ஆனந்தத் திருக்கூத்தினை எக்காலத்திலும் நிகழ்த்தியருள்கின்றார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு தனித்த பெரிய கோயில் உள்ளது. இக்கோயில் வடக்கு கோபுரம் செல்லும் வழியில் நூற்றுக்கால் மண்டபத்தையடுத்து சிவகங்கை தீர்த்தத்தின் மேல் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் இரண்டு பிரகாரங்களை உடைய பெரிய கோயிலாக அமைந்துள்ளது. இது கி.பி.1118-1136ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த விக்கிரம சோழன் காலத்தில் கருங்கற்றளியாக அமைக்கப்பட்டு பின் இவனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதன் திருச்சுற்றுமதிலை காளிங்கர்கோனே கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோயில் தலைவாய் மண்டபம் தனி அழகு படைத்தது. இக்கோயிலின் முன்புற மண்டபத்தில் இரட்டைத் தூண்களும், கல் சங்கிலித் தொடரும், தூண் சிற்பங்களும் மிகச்சிறப்பானவை.கோயிலின் வெளிப்பிரகாரத்தில் கீழ் வரிசை முழுவதும் இசைக்கலை, ஆடற்கலை பற்றிய அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அம்மை சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அழகுற அமைந்துள்ள சிற்பங்கள்.

ஸ்ரீ சித்ரகுப்தருக்கு தனி சந்நிதி.

இக்கோயிலின் வெளிச்சுற்று பிரகாரத்தில் ஸ்ரீ சித்திரகுப்தருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. மேலும் பிரகாரத்தில் நடுக்கம் தீர்த்த விநாயகர்,ஆதிசங்கரர்,ஸ்ரீ சக்கரம் ஆகிய சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் உள் சுற்று பிரகாரத்தில் சப்த மாதாக்கள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், ஆகிய சந்நிதிகள் உள்ளன. இக்கோயில் நம் முன்னோர்களின் சிவபக்திக்கும்,சோழ மன்னர்கள் காலத்தின் கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக்கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இக்கோயிலின் திருச்சுற்றிலே இரண்டடுக்கு அறைகளுடையதாய் அமைந்துள்ள  திருமாளிகையில் பரதநாட்டியம் நுட்பங்களையும்,அக்கால இசைக் கருவிகளையும் புலப்படுத்தும் நிலையில் கருங்கல் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் நடராஜர் கோயிலில் நடைபெறுவது போல் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

சிதம்பரம் சிவகாமி அம்மன் கோயிலின் வெளி பிரகாரத்தில் உள்ளே அமைந்துள்ள சித்திரகுப்தர் சன்னதி.

பத்து தினங்கள் நடைபெறும் ஐப்பசிப் பூர விழா.

சிவகாமி அம்மன் கோவிலில் நடராஜர் கோயிலில் உள்ளது போலவே தனி கொடிமரம் உள்ளது.  இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசிப் பூர விழா சோழ மன்னர் கால முதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.ஐப்பசிப் பூர விழா 10 தினங்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஐப்பசிப் பூர விழாவை முன்னிட்டு சிவகாமியமமை கோயிலில் கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டு தினமும் சாமி வீதி உலா செல்லுதல் நடக்கும். விழாவின் முக்கிய அம்சமாக தேரோட்டம் மற்றும் சலங்கை உற்சவமும்,தபசு உற்சவமும் அதன் பின்னர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.இந்த ஆண்டுக்கான ஐப்பசிப் பூர விழா கடந்த 12ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசிப் பூர விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.