திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம் சீர்காழி.


சீர்காழி சட்டைநாதர் கோயிலின் பிரதான வாயிலான கீழ் கோபுரம் வாயில்.

பிரம்மபுரம்,வேணுபுரம் முதலிய பன்னிரு திருப்பெயர்களைப் பெற்றதும், திருஞானசம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய்து உமையம்மை அளித்த சிவஞானப்பாலமுதுண்டு உலகமுய்ய தேவாரம் அருளிச் செய்யத் தொடங்கியதுமாகிய திருத்தலம் சீர்காழி.சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தாலுகாக்களில் ஒன்றாய் விளங்குவது சீர்காழி. தருமபரம் ஆதினத்திற்கு சொந்தமான 27 தேவஸ்தானங்களில் ஒன்றாய் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது இத்திருக்கோயில். பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரம் எனவும், இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றி சூரபத்மனுக்கு அருள் செய்தமையால் வேணுபுரம் எனவும், அசுரர்கட்குப் பயந்த தேவர்களின் புகலிடமாயிருந்தமையால் புகலி எனவும் அசுரகுரு, தேவகுரு ஆகியோர் பூசித்தமையால் வெங்குரு எனவும், ஊழிக் காலத்தில் இத்தலமே இறைவனுக்கு தோனியாக விளங்கியதால் தோனிபுரம் எனவும், தரையைப் பிளந்து இரனியாக்கனைக் கொண்ற வராக மூர்த்தி பூசித்ததால் பூந்தராய் எனவும், தலைவடிவான ராகு பூசித்ததால் சிரபுரம் எனவும், புறாவினால் சோதிக்கப்பெற்ற சிபிச்சோழன் வழிபட்டதால் புறம்பயம் எனவும், சண்பைப் புல்லால் விளைந்த பழி போகக் கண்ணன் பூசித்ததால் சண்பை எனவும், காளி வழிபட்டதால் காழி எனவும் பெயர் பெற்றது. இக்கோயிலில் லிங்க வடிவில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அம்பாளுடன் அருள் பாலித்து வருகின்றார்.

மூன்று நிலைகளில் அருள்பாலிக்கும் இறைவன்.

சீர்காழி கோயிலில் பிரம்மபுரீஸ்வரர் சந்நதியின் நுழைவு வாயில்.

திருஞானசம்பந்தர் அவதரித்த புண்ணியத்தலமான இக்கோயிலில் குரு மார்க்கமாக தோணியப்பரும், சிவமூர்த்தமாக சட்டநாதரும் எழுந்தருளியிருக்கும் ஒரு ஒப்பற்ற சைவ திருக்கோவில். இக்கோயிலில் கிழக்கே ராஜகோபுரம் பிரதான வாயிலாக விளங்குகிறது. இக்கோயிலில் மூலவர்களாக சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர் ஆகிய ஒவ்வொரு மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்த திருக்கோயில் சட்டைநாதர் கோயில் தேவஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

குன்றின் மேல் உள்ள தோனியப்பர் மற்றும் சட்டைநாதர் சந்நதிகள்.

திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம்.

சீர்காழி கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளம்.

திருஞானசம்பந்தர் சைவமும் தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழியில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர். சம்பந்தர் தான் 3 வயது சிறுவனாக இருந்த போது சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை சிவபாத இருதயர் அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி கொண்டிருந்த போது கரையில் இருந்த சம்பந்தர் பசியால் அழத் தொடங்கினார். குழந்தையின் அழுகுரலை குளத்தில் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால் குழந்தையின் அழுகுரல் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோனியப்பர் பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறியுள்ளார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் சம்பந்தருக்கு ஞானப்பாலூட்டி அவரது கண்ணீரை துடைத்து விட்டு அவருக்கு சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார். சிறிது நேரத்தில் குளித்துவிட்டு வந்த சிவபாத இருதயர் சம்மந்தரின் வாயில் பால் எச்சிலை கண்டு யார் தந்த எச்சில் பாலை உண்டாய் சொல் என கேட்டு சம்மந்தரை அடிக்க கையை ஓங்கினார்.அப்போது சம்பந்தர் சிவனும், பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையை காட்டி “தோடுடைய செவியன் விடையேறி”என்ற பதிகத்தை பாடலானார்.ஆம்!அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சொக்கி நின்றனர்.தந்தை சிவபாத இருதயர் தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியதை அறிந்து பரவசப்பட்டார்.

திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய பார்வதி தேவியின் ஓவியம் பிரம்ம தீர்த்த குளக்கரையில் ஓவியம் வைக்கப்பட்டுள்ளது.
சிவபாத இருதயர் சம்பந்தரை குச்சியால் அடிக்க கை ஓங்கிய போது சம்பந்தர் சிவனும், பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையை காட்டிய ஓவியம் குளக்கரையில் வைக்கப்பட்டுள்ளது.

சட்டை நாதர் தேவஸ்தானம்.

இக்கோயிலில் பிரம்ம தேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு பார்த்த வண்ணம் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரர் சந்நதியின் வலது புறம் தனி சந்நதியில் திருஞானசம்பந்தர் உற்சவர் ஆக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரர் கருவறைக்கு மேல் தளத்தில் தோனியப்பர் மற்றும் பெரிய நாயகி அம்மன் குருமூர்த்த வடிவில் அருள் பாலிக்கிறார்கள். பின்புறம் பிரம்மதேவர் விஷ்ணு,சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலை காட்சி பெறுகிறார்கள். இதற்கு அடுத்து சில படிகள் ஏறி சென்றால் மலை உச்சியில் சட்டைநாதர் சங்கம வடிவினராக உள்ளார். இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் குறையவில்லை. இதனையடுத்து சிவபெருமான் நரசிம்மருடன் போரிட்டு, அவரது தோலை உரித்து சட்டையாக போர்த்திக் கொண்டார். இதனால் இந்த இறைவனுக்கு சட்டைநாதர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இத்திருக்கோயில் சட்டைநாதர் தேவஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின் நிறைவில் சட்டைநாதர் உலா நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால் நம் மனதில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை‌.சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவாதிரை நன்னாளில் சம்பந்தருக்கு பாலூட்டிய ஐதீக விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தர் பிறந்ததும் திருவாதிரை நாளில், அவர் ஞானப்பால் உண்டதும் ஒரு திருவாதிரை நாளில், அவர் முக்தி பெற்று இறைவனிடம் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கும் அம்பாள்கள்.

திருநிலை நாயகி அம்பாள் சந்நதி.

இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள், பெரியநாயகி அம்பாள் ஆகிய இருவருக்கும் தனி தனி சந்நதிகள் உள்ளன. திருநிலைநாயகி சந்நதி வடக்கு கோபுர வாயில் அருகே உள்ளது. பெரியநாயகி அம்பாள் குன்றின் மேல் அருள்பாளித்து வருகிறார். அவருக்கு நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருநிலை நாயகி ஆடிப்பூரம் நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடப்பதுண்டு. 18 சித்தர்களின் ஒருவரான சட்டைமுனி சித்தரின் ஜீவசமாதி இங்கு உள்ளது. சிவன் கோவில் பிரகாரத்தில் இவரது ஜீவசமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. அங்கிருந்தபடியே உச்சியில் இருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.00 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12.00 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சார்த்தி, வடை மாலை அணிவித்து பாசிப்பருப்பு பாயாசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

32 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மகா கும்பாபிஷேகம்.

கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளில் பங்கேற்க செல்லும் தர்மபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.

பல சிறப்புகளைக் கொண்ட சீர்காழி சட்டை நாதர் கோவிலில் கடந்த 1991ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பின் 32 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின் படி கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்க மண் எடுப்பதற்காக கோயிலுக்குள் மேற்கு கோபுர வாசல் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது இரண்டரை அடி ஆழம் தோண்டிய நிலையில் சில சிலைகள் தட்டுப்பட்டுள்ளன.இதையடுத்து மிக கவனமாக பணிகள் நடைபெற்றன. அப்போது அந்த பள்ளத்திலிருந்து விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சிவகாமி உள்ளிட்ட 23 செட்புச் சிலைகள் கிடைத்தன. இந்த சிலைகள் அரை அடி முதல் இரண்டு அடி வரை உயரம் கொண்டவையாக இருந்தன. இது தவிர 493 செப்பேடுகளும், 16 பூஜை பொருட்களும், 15 பீடங்களும், 50 வேறு சில உலோகப் பொருட்களும் கிடைத்தது. இங்கு கிடைத்த செப்பேடுகளை திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட சீர்காழி தேவாரப் பதிகமும் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அனைத்து செப்பேடுகளையும் முழுமையாகப் படித்த பிறகு அதில் என்னென்ன பாடல்கள் அல்லது தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெரியவரும். கிடைக்கப்பெற்ற பொருட்கள் அனைத்தும் சீர்காழி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் கிடைக்கப்பெற்ற சிலைகள் மற்றும் செப்பேடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 32 ஆண்டுகளுக்கு பிறகு 2023ம் ஆண்டு மே 24ம் தேதி சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடன் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

சட்டை நாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது ஹெலிகாப்டர் மூலம் பூ தூவப்பட்டது.