விஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தகச் சோழன் “மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ்பெற்றவன். ‘சோழசிகாமணி’ ‘சூரசிகாமணி’முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.
‘வீரநாராயணன் ஏரி’
பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக்கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே தனது முதற்புதல்வனாகிய இளவரசன் ராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் ராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகரமான ஒரு பெரும் பணியை அவர்களைக்கொண்டு செய்விக்க எண்ணினான்.’வடக்காவேரி’ என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணி தன் வசமிருந்த வீரர்களைக்கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் ‘வீரநாராயணன் ஏரி‘என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயணபுரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். ‘விஷ்ணுக்கிருஹம்’என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று.ஸ்ரீமந் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே,ஏரிகளைக் காத்தருள்வதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீமந் நாராயணமூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுரம் விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளை கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான் என புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் வீர நாராயணப் பெருமாள் கோயில் உருவானது குறித்து அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.
வீரநாராயணபுரம் என்ற சரித்திர பெயர் நாளடைவில் காட்டுமன்னார்கோவில் என மாறியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காட்டுமன்னார்கோயில். கல்வெட்டுகளில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ள வீரநாராயணபுரம் என்ற சரித்திர பெயர் நாளடைவில் காட்டுமன்னார்கோயில் என மாறியது. வைஷ்ணவ ஆழ்வார்களில் புகழ்பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகள் அவதரித்த ஊர் காட்டுமன்னார்கோயில். நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தமிழிலேயே தொகுத்தளித்தவர் ஸ்ரீமந் நாதமுனிகள். காட்டுமன்னார்கோயில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது வீரநாராயணப் பெருமாள் கோயில். இக்கோயில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் என கூறப்படுகிறது. இக்கோயிலின் சிறப்பை பற்றி பார்ப்போம். அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய பெருமாள் அருள்பாலிக்கும் இக்கோயில் பாஞ்சராத்ர ஆகம தென்கலை சம்பிரதாயத் திருக்கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் வீரநாராயணப் பெருமாள், தாயார் பெயர் மரகதவல்லி. உற்சவருக்கு ராஜகோபாலன் என்றும் தாயாருக்கு மகாலட்சுமி என்றும் திருநாமம் உள்ளது. இக்கோயிலின் எதிரே உள்ள தீர்த்தத்தின் பெயர் வேத புஷ்கரணி என்பதாகும். தீர்த்த குளம் கோயிலின் எதிரே எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தலவிருட்சம் அடுக்கு நந்தியாவட்டை பூவாகும். இக்கோயிலில் நரசிம்மரையும் வராகரையும் நாம் தரிசிக்கலாம்.
திருமணத்தடை, குழந்தையின்மை ஆகியவற்றுக்கு பரிகாரத் தலம்.
வீரநாராயண பெருமாள் கோவிலில் மதங்க மாமுனிவருக்கு பெருமாள் சேவை சாதித்து அருளிய இடமாதலால் மதங்காசரமம் என்றும் பெயர் உள்ளது. திருமணத்தடை, குழந்தையின்மை ஆகியவற்றுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது இக்கோயில். ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கோயில் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00மணி முதல் 9.00மணி வரையிலும் திறந்திருக்கும். வீரநாராயணப் பெருமாள் கோயிலை தரிசிப்பதை பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.