பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றிருந்த கடம்பூர் மாளிகை.


இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையன் வந்தியத்தேவனுடைய குதிரை இப்பொழுது நல்ல சுறுசுறுப்பை பெற்றிருந்தது. ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்து விட்டது. அந்தக் காலத்து சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையரும் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இரு புறத்திலும் எழுந்த நெடுஞ்சவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன. என புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் கடம்பூர் மாளிகை பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதையில் திடீர் திருப்பங்கள் நிகழும் இடம்தான் கடம்பூர் செங்கண்ணர் சம்புவரையர் மாளிகை. ஆதித்ய கரிகால சோழனை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்ட இடமாகவும், அவர் கொல்லப்பட்ட இடமாகவும் பொன்னியின் செல்வன் நாவலில் கூறப்பட்டுள்ளது. தனது பயணத்தில் வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோயில் ஆகியவற்றை கடந்து வந்தியத்தேவன் வந்து சேரும் இடம் தான் இந்த கடம்பூர் மாளிகை.

கீழக்கடம்பூரில் செங்கண்ணர் சம்புவரையர் மாளிகை.

தமிழகத்தில் கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோயிலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழக்கடம்பூர் என்கின்ற இடத்தில் தான் செங்கண்ணர் சம்புவரையர் மாளிகை அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் இருந்து செட்டித்தாங்கல் வழியாக எய்யலூர், ஆயங்குடி,முட்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த வரலாற்று சிறப்புமிக்க கீழக்கடம்பூர் கிராமம். இதன் அருகே மேலக்கடம்பூர் உள்ளது. சோழர்களின் வரலாற்றில் மேலக்கடம்பூர் மற்றும் கீழக்கடம்பூர் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். மேலக்கடம்பூரில் பாடல் பெற்ற ஸ்தலமான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. கீழக்கடம்பூர் கிராமத்தில் கடம்பூர் இளங்கோயில் என்று அப்பர் பாடிய வைப்புத்தலம் சிதைந்த நிலையில் உள்ளது. இக்கோயில் உத்திராபதீஸ்வரர் கோயில் என்றும் ஸ்ரீ ருத்ர கோடிஷ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள ஸ்ரீ ருத்ர கோடிஸ்வரர் கோயில்.

தற்போது தொல்லியல் துறையின் சிறந்த பராமரிப்பில் ஸ்ரீ ருத்ர கோடிஸ்வரர் கோயில் உள்ளது.இக்கோயிலில் மூலவர் உத்ராபதி லிங்க வடிவில் அருள் பாலித்து வருகிறார்.மேலும் இக்கோயில் பிரகாரத்தில் உள்ள சிற்பங்கள் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகாமையில் தான் வரலாற்று சிறப்புமிக்க கடம்பூர் மாளிகை இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. தற்போது அப்பகுதி நந்தவனமாக காட்சியளிக்கிறது. இக்கோயிலின் அருகே உள்ள நந்தவனப் பகுதியில் சில தெய்வ சிலைகள் உள்ளன. இத்தெய்வச்சிலைகள் அனைத்தும் எளிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கோயில் கோட்டச்சுவற்றில் வைப்பதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் இக்கோயிலில் கோட்டச்சுவற்றில் காலியாக விடப்பட்டுள்ள வெற்றிடப்பகுதி அளவுகளும், இச்சிலைகளின் அளவுகளும் மிகச் சரியாகப் பொருந்துவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கி.பி 12ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இக்கோயில் இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கோயில் தற்போது கூரை பகுதி வரை மட்டுமே காட்சியளிக்கிறது. தளங்கள் இடம்பெறவில்லை.எனவே எந்த பாணியில் கட்டப்பட்டது என்பதும் அறியப்படவில்லை. இக்கோயில் தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளது. இக்கோயிலின் தனிச்சிறப்பானது 63 நாயன்மார்களின் வரலாற்றினை சிற்ப வடிவமாக பெற்று திகழ்வதாகும். ஆனால் நாயன்மார் சிற்பம் தற்போது காணப்படவில்லை. காலப்போக்கில் அழிந்த்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் சிற்பங்கள் இருந்தமைக்கான சிறு சிறு கோட்டங்கள் கருவறை விமானச்சுவர் பகுதியில் காணப்படுகிறது. இக்கோட்டத்தின் கீழே 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடன் நாயன்மார்களின் பெயர்கள் காணப்படுகின்றது. முகப்பு மண்டபத்தில் நந்தி உள்ளது. இக்கோயிலை பொறுத்தவரை நாயன்மார்களின் வரலாறுகள் சிற்ப வடிவமாக பெற்று திகழும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.மேலும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ள காரைக்கால் அம்மையார் தலைகீழாகக் கயிலைக்குச் செல்லும் சிற்பமும்,கண்ணப்ப நாயனார் சிற்பமும், சண்டிகேஸ்வரர் சிற்பமும்,தாடகை என்ற பெண்ணடியார் சிவனை வழிபடும் சிற்பமும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.

அரிய கலைப் பொக்கிஷமாக கருதப்படும் கோயில்.

வரலாற்று புகழ்பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர கோடிஸ்வரர் கோயில் இடைக்கால வழிபாட்டுக்காக இக்கோயில் முழுமையாக புணரமைக்கப்பட்டு வழிபாட்டுக்குரிய கோயிலாக உள்ளது.இக்கிராம மக்களால் இக்கோயில் உத்திராபதி கோயில் என அழைக்கப்படுகின்றது. இக்கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் கும்பகோணம் தாராசுரம் கோயிலை ஒத்ததாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு அரிய கலைப் பொக்கிஷமாக இக்கோயில் கருதப்படுவதால் அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.