பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்ற சிதம்பரம் பொற்கூரை.


சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பலத்தில் வேயப்பட்டுள்ள பொற்கூரை.

சோழ நாட்டை அரசு புரிந்த சோழ மன்னர் பரம்பரையில் சுந்தர சோழனின் பாட்டனாரான கோப்பரகேசரி பராந்தகர் வீரப்புகழில் சிறந்து விளங்கினார். சுமார் 46 ஆண்டுகள் இவர் ஆட்சி நடத்தினார்.அவருடைய காலத்தில் சோழ சாம்ராஜ்யம் விரிந்து பரவியது. ஈழ நாட்டிலிருந்து துங்கபத்திரை நதி வரையில் அவருடைய ஆணை சென்றது. பல போர்கள் நடந்தன; மகத்தான வெற்றி கிடைத்தது. ‘மதுரையும் ஈழமுங்கொண்ட கோப் பரகேசரி வர்மர்’ என்ற பட்டம் பெற்றார்.தில்லைச் சிதம்பரத்தில் சிற்றம்பலத்துக்குப் பொன்வேய்ந்து புகழ்பெற்றார் என புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்கூரை குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது.

பொற்கூறையின் கீழ் அருள் பாலிக்கும் நடராஜர்.

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்கூரையின் கீழ் ஆனந்த தாண்டவ கோலத்தில் அம்பிகையுடன் நடராஜ பெருமான் அருள் பாலித்து வருகின்றார். இறைவன் வீற்றிருக்கும் இந்த இடத்தை சிற்றம்பலம் என்று அழைக்கப்படுகிறது. சிற்றம்பலத்தை  முதலில் தேவர்கள் தொழுதும், போற்றியும் தூய செம்பொன்னினால் செய்தனர் என சம்பந்தர் பாடியுள்ளார். பின்பு  வீரப்புகழில் சிறந்து விளங்கிய சோழ மன்னன் பராந்தக சோழன்  மற்றும் இரணியவர்மன் மணவிற்கூத்தன்  ஆகியோர் பொன் வேய்ந்ததாக வரலாறு கூறுகிறது. நாளடைவில் சிற்றம்பலம் சித்சபை என அழைக்கப்பட்டது. சித்சபையில் உள்ள 5 வெள்ளி படிகள் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்துக்களாகவும், பிரம்மன், மால், உருத்திரன்,மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய 5 மூர்த்திகளும் ஐந்து பீடங்களாகவும், அங்குள்ள தங்கத் தூண்கள் 10 ஆறு ஆகமங்களாகவும், நான்கு வேதங்களாகவும், வெள்ளித்தூண்கள் ஐந்தும் ஐம்பூதங்களாகவும் கருதி அமைக்கப்பட்டுள்ளது. சபையில் உள்ள 96 துளைகள் 96 தத்துவங்களாகவும், 18 தூண்கள் 18 புராணங்களாகவும், கூரையின் மீதுள்ள 64 கைமரங்கள் 64 கலைகளாகவும் கருதப்படுகின்றன. சித்சபையில் வேயப்பட்டுள்ள பொற்கூறையில் 21,600 பொன் ஓடுகளும், அவை 72,000 ஆணிகளால் அறையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனிதன் நாள்தோறும் 21,600 முறை மூச்சு விடுவதாகவும், மனித உடலில் 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதாகவும் இவற்றை குறிக்கவே ஓடுகளும், ஆணிகளும் அதே எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. நமது இருதயத்தில் இருக்கின்ற ஈஸ்வரனே எங்கும் இருக்கின்றார் என்பது அறியவே நமது உடல் போலவே அமைந்துள்ளது சித்சபை. இச்சபையில் உள்ள ஒவ்வொரு பொன் ஓட்டிலும் சிவாயநம என்ற பஞ்சாட்சரம் எழுதப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. சூரிய ஒளியில் தக தகவென மின்னும் பொற்கூறையின் கீழ் ஆனந்த தாண்டவ கோலத்தில் அருள் பாலித்து வரும் நடராஜ பெருமானையும், அம்பிகையையும், மந்திர உருவமாக காட்சியளிக்கும் சிதம்பர ரகசியத்தையும் கண்டு தரிசித்து பேரின்பம் காண்போம்.