சிதம்பரம் அருகே  பொங்கலை முன்னிட்டு கரும்புகள் அறுவடை தீவிரம்


சிதம்பரம் அருகே பழையநல்லூர்  கிராமத்தில் செழித்து வளர்ந்துள்ள கரும்புகள்.

பொங்கல் பண்டிகை என்றாலே இயற்கையாகவே இனிப்பு சுவையுள்ள  கரும்புகள் தான் ஞாபகத்திற்கு வரும்.. தமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பன்னீர் கரும்புகள் என கூறப்படும் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிதம்பரம் அருகே கடவாச்சேரி, பெராம்பட்டு, வேளக்குடி, அகரநல்லூர், பழையநல்லூர், எருக்கன் காட்டுபடுகை, மற்றும் வீராணம் ஏரிக்கரையில் உள்ள வாழக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகள் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் கரும்புகள் மண்ணின் தன்மையால் இயற்கை சுவை அதிகம் இருப்பதாலும், உயரம் கூடுதலாக இருப்பதாலும் குஜராத், ஆந்திரா, கர்நாடகா, புதுவை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கரும்புகளை மொத்த விலைக்கு வாங்கி சென்று விற்பனை செய்வது வழக்கம். நல்ல வளர்ச்சி அடைந்துள்ள கரும்புகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு மொத்த விற்பனைக்காக லாரிகள் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு செல்கின்றன.

சிதம்பரம் அருகே கரும்புகள் விற்பனை தீவிரம்.

சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி அகரநல்லூர், பழையநல்லூர் பகுதிகளில் பயிரிடப்பட்ட கரும்புகளை மொத்த வியாபாரிகள் வாங்கிச் சென்று ஆங்காங்கே முக்கிய இடங்களில் வைத்து கரும்புகளை விற்பனை செய்கின்றனர். மொத்த விலையில்  20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் 300 வரை விற்கப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூபாய் 20 முதல் 25 வரை விற்கப்படுகிறது. சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் கரும்பு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கரும்புகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வெளியூரில் இருந்து கார்கள், மற்றும் வேன்களில் செல்பவர்கள் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் வேளக்குடி அருகே விற்க்கப்படும் கரும்புகளை மொத்த விலையில் வாங்கி செல்கின்றனர்.

உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் கரும்பு.

கரும்பில் சுக்ரோஸ் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுவே கரும்புக்கு இனிப்புச் சுவையை தருகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரை கரும்பில் இருந்து பெறப்படுவதுதான். கரும்பில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. கரும்பில் அதிகளவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், தையாமின், ரிபோபிளவின், புரதம், இரும்பு சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்புச்சாறு உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடியது. கரும்பில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலிமை தருகிறது. கரும்பில் அதிகளவில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.மேலும் கரும்பில் அதிகளவில் ஆன்டி -ஆக்சிடென்டுகள்நிறைந்துள்ளதால் புற்றுநோய் நோய் வராமல் தடுக்கிறது. கரும்பில் உள்ள எண்ணற்ற சத்துக்களால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் கரும்பில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. ஆகையால் சீசன் நேரத்தில் கரும்புகளை கண்டால் விடாதீர்கள்.