இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வமானது ‘ஆலிவ் ரிட்லி வகை’ ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். மிகவும் சிறிய உடல் அமைப்பை கொண்டுள்ளது ஆலிவ் ரிட்லி ஆமைகள். பங்குனி மாதத்தில் இவை முட்டையிடுவதால் பங்குனி ஆமைகள் என்று தமிழில் அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் olive Ridley sea turtle என்றும் தமிழில் ஒலிவ நிறச் சிற்றாமை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் zoological name Lepidochelys olivacea எனக் கூறப்படுகிறது. இந்த சிற்றாமைகளால் கடலின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது இதன் மூலம் மீன் வளம் அதிகரிக்கிறது. இந்திய பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காணப்படும் கடல் ஆமை வகையாகும் இந்த சிற்றாமைகள் இதயம் வடிவம் கொண்டு ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதால் ஆலிவ் ரிட்லி என ஆங்கிலத்தில் பெயர் பெற்றன.பெண் ஆமைகளை இடுலி என்கிறார்கள்.
தான் பிறந்த பகுதிக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் சிற்றாமைகள்.
உலகில் உள்ள ஏழு வகையான கடல் ஆமைகளில் மிகவும் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளது ஆலிவ் ரிட்லி ஆமைகள். அழியும் நிலையில் உள்ள உயிரினமாக சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ள இவை,இரண்டரை அடி நீளமும், அகலமும் கொண்டவையாகும். 12 முதல் 15 ஆண்டுகளில் பருவத்தை அடையும் இந்த ஆமைகள், தான் பிறந்த கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டதாகும்.தமிழகத்தின் கடற்கரைகளில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும்.ஒரு பெண் ஆமை 50 முதல் 190 வரை முட்டையிட்டு 45 நாள் முதல் 60 நாட்களுக்குள் குஞ்சு பொரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆமைகள் முட்டைகளை பெரும்பாலும் இரவிலேயே பொரிக்கின்றன. பல நூற்றாண்டுகளாக கடற்கரைகளில் பங்குனி திங்களின் போது ஆயிரக்கணக்கில் இவ்வாமைகள் முட்டையிடுகின்றன. இந்த ஆமைகள் இடப்படும் ஆயிரம் முட்டைகளில் ஒன்று மட்டும் வளர்ந்த ஆமைப் பருவத்தை அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆயிரம் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் பிறந்தால் அதில் ஒன்று மட்டும் தான் உயிர் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த ஆமைகளின் வாழ்க்கையை அச்சுறுத்தும் முக்கிய விஷயங்கள் என்னவென்றால் அவற்றில் முதலாவதாக இருப்பது மீன்பிடி கருவிகளாககும்.இவை மீன்பிடி வலைகளில் சிக்கி என்ற அல்லது மீன்பிடி படகுகளின் முன் சுழல் விசிறிகளில் சிக்கி காயமடைந்து இறக்கின்றன.இரண்டாவது கடற்கரை ஓரங்களில் எரியும் மின்விளக்குகள், கடற்கரையில் திரியும் நாய்கள், காகங்கள், முட்டைகளை திருடும் மனிதர்கள் ஆகியவற்றாலும் இந்த இனம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தட்பவெப்ப நிலையே கடல் ஆமைகளின் முட்டைகளில் பொரியும் ஆமைகளின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. இயல்பாக வெப்பமான சூழலில் பெண் ஆமைக் குஞ்சுகளும், வெப்பம் குறைந்த சுழலில் ஆண் ஆமைக் குஞ்சுகளும் உருவாகின்றன. புவி வெப்பமயமாவதால் ஆண் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து, இதனால் பாலினச் சமநிலை குலைந்தும் இந்த அரிய இனம் அழிந்து போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆமைகளை அழிவில் இருந்து காப்பதற்காக தமிழக வனத்துறை அலுவலர்கள் இந்த ஆமை முட்டைகளை ஆங்காங்கே சேகரித்து பொரிப்பகங்கள் அமைத்து அது பொரிந்தவுடன் கடலில் விடும் பணியை ஆண்டு தோறும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
கிள்ளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்.
ஆலிவ் ரிட்லி ஆமைகள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடலூர், மரக்காணம், பிச்சாவரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. குறிப்பாக மணற்பரப்பு அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளில் இந்த ஆமைகள் அதிகளவு முட்டைகள் இட்டு செல்வது வழக்கம்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் கடலோர பகுதிகளில் முட்டையிடும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகளை பிச்சாவரம் வனச்சரக அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதற்காக பிச்சாவரம் வனச்சரக பகுதியில் உள்ள பில்லுமேடு கிராமத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வனவிலங்கு வாழ்விடத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடல் ஆமை முட்டை பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொரிந்து வரும் ஆமைக்குஞ்சுகளை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்று கடலில் விடுகின்றனர். அப்போது ஆமைக் குஞ்சுகள் தத்தி தத்தி கடலில் நீந்தி செல்வது ரசிக்க தக்கது.