வெறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறிருந்தால் சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு(Diploma) படிக்கலாம். இந்த படிப்பிற்கு மத்திய அரசு பணி உள்ளிட்ட ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
சுரங்கப் பொறியியல் என்றால் என்ன?
சுரங்கம் என்பது பூமியில் உள்ள கனிமங்களை ஆய்வு செய்து அகற்றுவதை உள்ளடக்கிய பொறியியல் துறை. சுரங்கம் மனித குலத்தின் பழமையான மற்றும் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும். ஏனெனில் அது நம்மைச் சுற்றியுள்ள உலகின் மூலப்பொருட்களை வழங்குகிறது மற்றும் விவசாயத்தை போலவே நாகரிகத்தின் உயிர் நாடியாகும். உங்களுக்கு ஆச்சரியமான விஷயமாக விவசாயப் பொருட்களை தவிர நமது நவீன வாழ்வில் மற்ற அனைத்திற்கும் மூலப் பொருட்கள் சுரங்கத்தில் இருந்து வருகிறது. நிலக்கரி முதல் உங்கள் பற்பசையில் உள்ள தாதுக்கள் வரை சுரங்கத்தில் இருந்து கிடைக்கிறது. இரும்பு,நிலக்கரி, தாமிரம், மைக்கா, அலுமினியம், ஈயம் மற்றும் துத்தநாகம், சுண்ணாம்பு போன்ற பெரிய கனிம இருப்புகளுடன் நமது நாடு உள்ளது. சுரங்கப் பொறியியலில் இரும்பு அல்லது நிலக்கரியைப் பிரித்தெடுப்பது மட்டுமல்லாமல் கனிமப் பிரித்தெடுத்தலும் இந்த வகையின் கீழ் வருகிறது. இதனால் சுரங்கப் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று கூறலாம்.
சுரங்கப் பொறியியல் படிப்பை பெண்களும் படிக்கலாம்.
இந்தியாவில் குறைவான அரசு கல்வி நிறுவனங்களில் தான் சுரங்கப் பொறியியல் படிப்பு உள்ளது.தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுரங்க பொறியியல் துறை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரே இளநிலை சுரங்கப் பொறியியல் துறை இதுதான்.இங்கு சுரங்கப் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கலாம். முதலில் இத்துறையில் பெண்கள் சேர்க்கப்படவில்லை.நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை புரிந்து வருவதால் தற்போது சுரங்கப் பொறியியல் படிப்பில் மாணவிகளும் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சுரங்க பொறியியல்(Mining Engineering) என்பது பலதரப்பட்ட பட்டதாரி வாழ்க்கை பாதைகளுக்கு ஒரு நுழைவாயிலாகும் இது நல்ல பதவி மற்றும் சம்பளத்தை வழங்குகிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு.
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் சுரங்கப் பொறியியல் பட்டயப் வகுப்புகள் தொடங்குவதற்கு நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் சுரங்கப் பொறியியல் பட்டயப் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு படிப்பதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த பட்டயப் படிப்பிற்கு ஆண்டு தோறும் 60 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதில் 30 பேர் பொது அனுமதி மூலம் சேர்க்கை செய்யப்படுகின்றனர். மீதியுள்ள 30 பேர் என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அனுமதி சேர்க்கை செய்யப்படுகிறது. இந்த 30 மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை என்எல்சி நிறுவனமே செலுத்துவது குறிப்பிடத்தக்கது. சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பின் காலம் மூன்றாண்டுகளாகும். படிப்பு முடித்த மாணவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் மாதம் ரூ.15ஆயிரம் உதவித்தொகையுடன் தொழில் பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கப்படுகிறது.
ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் உயர்திறன் உபகரணங்களை கொண்ட சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகம்.
சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக பொறியியல் புலத்தில் உள்ள சுரங்கவியல் துறையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ) வழிகாட்டுதலின்படி என்எல்சி சமுதாய பங்களிப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூபாய் 2.25 கோடி மதிப்பீட்டில் உயர்த்திறன் உபகரணங்கள் கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.அதனை என்எல்சி நிறுவனத் தலைவர் பிரசன்னகுமார் மோடுபள்ளி கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், சுரங்கவியல் படிப்பில் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மாணவர்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் சுரங்கப் பொறியியல் பட்டப் படிப்புகள் தொடங்க என்எல்சி உதவி புரியும் என்று கூறினார்.
சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு படித்த மாணவர்களுக்கு என்எல்சியில் வேலைவாய்ப்பு.
அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல சுரங்கவியல் துறையின் இயக்குனர் பேராசிரியர் சி.ஜி.சரவணன் கூறுகையில், சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பயின்று பட்டயப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழில் பயிற்சி 2 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு சர்வேயர்,சிர்தார், ஓவர்மேன் ஆகிய பணிகளுக்கு எழுத்து முறை தேர்வு நடந்தது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பில் பயின்ற மாணவர்களும் பங்கேற்றனர். இவர்களில் 90 மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு என்எல்சி நிறுவனம் பணி நியமன ஆணைகளை வழங்கி பணியில் சேர்த்துக் கொண்டனர். இந்த பணியில் சேர்ந்த 90 பேரில் சுமார் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்எல்சிக்கு தங்களது நிலத்தினை வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.