இறை வழிபாட்டோடு இணைந்த மாதங்களில் சிறப்பு பெற்றது மாசி மாதமாகும். மாசி மகம் என்பது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளாகும். இந்த மாசி மகம் இந்துக்களால் விரதம் இருந்து கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்னாளில் கடல், குளம்,ஆறு ஆகிய நீர் நிலைகளில் புண்ணிய நதியான கங்கையும் கலந்திருப்பதாக மக்களிடையே நம்பிக்கை உள்ளது. இதனால் மாசி மகத்தன்று நீர் நிலைகளில் புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். மேலும் மகம் நட்சத்திரம் இன்னும் சிறப்பு வாய்ந்தது. மாசி மக நட்சத்திரத்தில் அம்பிகை அவதரித்ததால் மாசி மகம் மேலும் பெருமை பெறுகின்றது.இம்மாதத்தில் செய்யப்படும் அம்பிகை வழிபாட்டால் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் குடும்பத்தில் அமைதி நிலவும். மகம் நட்சத்திரம் இப்படி பல சிறப்புகள் பெற்ற நட்சத்திரமாகும். பௌர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாக திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக்கூடிய நாளாகும். மகமும்,பௌர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இதனால் இந்நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. இதனை ‘கடலாடும் நாள்’ என்றும் ‘தீர்த்தமாடும்’ நாள் என்றும் சொல்லப்படுகிறது. மாசி மகம் நட்சத்திரம் பித்ருக்களுக்கான நட்சத்திரமாக கருதப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு அருமையான பரிகார தினம் மாசி மகம் ஆகும். இந்நாளில் நீர் நிலைகளில் நீராடி பிதுர் தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என கருதப்படுகிறது. மேலும் மாசி மகம் நன்னாளில் புனித நீர்நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது.
கிள்ளையில் மாசி மகம் விழா கோலாகலம்.
தமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளையில் மாசி மக திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மாசி மகத்தன்று அதிகாலையில் இருந்து தீர்த்தவாரிக்கு சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாமிகள் டிராக்டர்களில் மேளதாளம் முழங்க கிள்ளை கடற்கரை முழுக்குத்துறை பகுதியில் அணிவகுக்கும். பின்னர் ஒவ்வொரு சாமியாக தீர்த்தவாரி அளிப்பது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். இதில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர், ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் ஆகியோரும் கிள்ளையில் தீர்த்தவாரி அளிப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. கிள்ளை கடற்கரை மற்றும் முழுக்குத்துறை பகுதியில் ஏராளமானோர் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
பூவராக பெருமாளுக்கு இஸ்லாமியர் அளிக்கும் வரவேற்பு.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கிள்ளை முழுக்குத்துறையில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து மாசி மகத்திற்கு முன்னதாகவே டிராக்டரில் எழுந்தருள செய்யப்பட்டு சாமி புறப்பாடு நடைபெறும்.மாசி மகத்தன்று கிள்ளை தைக்கால் தர்கா வழியாக பூவராகவர் தீர்த்தவாரிக்கு செல்வார். அப்போது தைக்கால் தர்காவில் இஸ்லாமியர்கள் இந்து முறைப்படி தாம்பூல தட்டில் பழங்களுடன் ஐந்து மரக்கால் அரிசி வைத்து படைத்து சாமிக்கு பட்டு சாத்தி பூவராக பெருமாளுக்கு வரவேற்பு அளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். தொடர்ந்து பூவராகசாமி கோயில் ஆச்சாரியார்கள் தர்காவிற்கு எனசென்று மாலை, நாட்டு சர்க்கரை, வத்தி ஆகியவற்றை தர்கா டிரஸ்டியிடம் வழங்கி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்வார்கள். இது பல தலைமுறைகளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதனைக் காண ஏராளமான இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் கலந்து கொள்வார்கள். இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெறுகின்றது.