சிதம்பரம் அருகே கிள்ளையில் மாசி மகம் கோலாகலம்!


சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையில் மாசி மகம் தீர்த்தவாரி

மாசி மாதத்தில் மிகவும் புண்ணியமான முக்கியமான நாளாக போற்றப்படுவது மாசி மகம். புனித நீராடுவதற்கும், பாவங்கள் தீரவும்,முன்னோர்கள் சாபம் விலகவும் வழிபடுவதற்கான மிக உன்னதமான நாள் மாசி மகத்திருநாளாகும். ஒவ்வொரு மாதங்களிலும் வரும் பௌர்ணமியை ஒவ்வொரு தெய்வத்திற்குரிய விரத நாளாக கொண்டாடுகிறோம். அதே போல் மாசி மாத பௌர்ணமியை பாவங்களைப் போக்கி புண்ணிய பலன்களை பெறுவதற்கான நாளாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை மாசி மகம் விழாவாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தை “கடலாடும் மாதம்” என்றும் “தீர்த்தமாடும்” மாதம் என்றும் கூறப்படுகிறது.

புனித நதிகளில் நீராடுதல் சிறப்பு!

மாசி மகத்தன்று கிள்ளை முழுக்குத்துறையில் திரண்ட மக்கள்.

மாசி மகத்தன்று அனைத்து நீர் நிலைகளிலும் கங்கை நீர் கலந்திருப்பதாக ஐதீகம். இதனால் கடல் மற்றும் புனித நதிகள் ஆகியவற்றில் இந்த நாளில் நீராடுவது மிகவும் சிறப்பானது. இந்த நாளில் புனித நீரில் நீராடினால் தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்த பாவங்கள் விலகும் என கருதப்படுகிறது. வருண பகவான் சிவபெருமானை வேண்டி தன்னுடைய தோஷங்களில் இருந்து விடுபட்ட நாள் என்பதால் மாசி மகத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாகும். மேலும் மாசி மகம் மகாவிஷ்ணு அவதரித்த நாளாகவும் கருதப்படுகிறது.இதனால் இந்த நாளில் மகாவிஷ்ணுவை வணங்கினால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆகையால் இந்நன்னாளில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரே இடத்தில் இருந்து சிவனையும், கோவிந்தராஜப் பெருமாளையும்  வழிபடலாம். உமாதேவி மாசி மாதம் மக நட்சத்திரத்தில் தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாசி மக தினத்தில் அம்பாள் வழிபாடும் சிறந்தது. இந்த நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். ஆகையால் முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

கிள்ளை முழுக்குத்துறையில் தீர்த்தவாரி.

சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி தீர்த்தவாரி.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் மாசி மகம் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுவாமிகள் கிள்ளை முழுக்குத்துறை உப்பனாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி அளிப்பது வழக்கம். இந்த தீர்த்தவாரியில் சிதம்பரம் நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள்,சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள், பெருமாத்தூர் சீனிவாச பெருமாள்,ஸ்ரீமுஷ்ணம் பூவராகவப் பெருமாள், பின்னத்தூர் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு சாமிகள் கிள்ளை உப்பனாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி அளித்தனர். கிள்ளை  முழுக்குத்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நீராடி தீர்த்தவாரியை தரிசித்தனர். ஏராளமானோர் கிள்ளை கடற்கரையில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். பல்வேறு கிராமங்களில் இருந்து டிராக்டர்களில் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான சாமிகள் கிள்ளை முழுக்குத் துறையில் அணிவகுத்தன. அப்போது ஒவ்வொரு சாமியுடன் அப்பகுதி இளைஞர்கள் மேளதாளம் முழங்க ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

மாசி மகத்தன்று தானம் செய்தால் புண்ணியம் கிட்டும்.

மாசி மகம் நன்னாளில் நம்மால் முடிந்த அன்னதானம் அல்லது பொருள் தானம் செய்து இறைவனை பிரார்த்தித்துக் கொண்டால் மங்கள காரியங்கள் இனிதே நடைபெறும் என்றும் வாழ்வில் வளம் பெறுவதோடு முன் ஜென்ம வினைகள் தீரும் என கருதப்படுகிறது. பொதுவாக புண்ணிய காலங்களில் தானம் செய்வது கணக்கில் அடங்கா பலன்களை தரும் என கருதப்படுகிறது. மாசி மகத்தன்று புனித நீராடி, விரதம் இருந்து இறைவனை வழிபடுவதோடு நம்மால் முடிந்த தானங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்.

கிள்ளை முழுக்குத்துறையில் நீராடி தீர்த்தவாரியை தரிசிக்கும் மக்கள்.

குலதெய்வ வழிபாடு

மாசி மகத்தன்று குலதெய்வத்தை வழிபடுவதும் தரிசிப்பதும் மகத்தான பலன்களை அள்ளித் தரும் எனக் கருதப்படுகிறது. குலதெய்வ வழிபாடு குலத்தை தளைக்க செய்யும். மாசி மகத்தன்று நேரில் சென்று குலதெய்வத்தை தரிசிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.