பக்தர்களை காண ஆண்டுக்கு இருமுறை கோயிலில் இருந்து வெளியே வரும் நடராஜர்.


அலங்கார மின் விளக்குகளால் ஒளிரும் சிதம்பரம் நடராஜர் கோயில்.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர்.இதுவே மருவி ஆருத்ரா எனப்படுகிறது. ஆகாய ஸ்தலமான உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்கூறையின் கீழ் ஆனந்த தாண்டவக்கோலத்தில் நடராஜபெருமான் சிவகாமசுந்தரி அம்பிகையுடன் அருள் பாலித்து வருகின்றார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜர் கோயிலில் ஆண்டு தோறும் இரு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.பெரும்பாலான கோயில்களில் உற்சவர் தான் தேரில் வீதி உலா செல்வது வழக்கம். ஆனால் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மூலவரான சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ பெருமான் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பது வழக்கம். நடராஜர் கோயிலுக்கு சென்று நடராஜரை பக்தர்கள் தரிசித்து வந்த நிலையில் ஆண்டுக்கு இருமுறை கோயிலில் இருந்து வெளியே வரும் நடராஜர் தேரில் இருந்து பக்தர்களை பார்த்து நலம் விசாரிப்பது போல் காணப்படும் காட்சியை கண்டு அனைவரும் பரவசமடைவார்கள்.

ஆருத்ரா திருவிழாவை முன்னிட்டு தேரில் பவனி வரும் ஸ்ரீ நடராஜர்.

தேரில் பவனி வந்த நடராஜர்

இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா திருவிழா கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 தினங்கள் நடக்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  ஜனவரி 5ம் தேதி நடைபெற்றது. அதிகாலையில் கோயில் சித்சபையில் இருந்து மேளதாளம்,தாரை தப்பட்டைகள் முழங்க ஆனந்த தாண்டவக்கோலத்தில் அம்பிகையுடன் புறப்பட்டு கோயிலை வலம் வந்து தேரில் எழுந்தருளிய காட்சி பக்தர்களை ஆனந்த நிலைக்கு கொண்டு சென்றது. 5 தேர்களில் விநாயகர், முருகன், நடராஜர்,சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித் தனி தேர்களில் எழுந்தருளி வீதி வலம் வந்தனர். தேரில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. சிவனடியார்களும், பக்தர்களும், சிறுவர்களும், பெண்களும் போட்டி போட்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். வா வா நடராஜா,சிவ சிவ முழக்கங்களுடன்,மேளதாளம் முழங்க பல்வேறு இசைக்கருவிகள் இசைக்க பக்தர்கள் கூட்டத்தினிரிடையே நடராஜர் தேர் அசைந்தாடிய படியே கீழவீதி தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. இதன் பின்னால் சிவகாமசுந்தரி அம்பாள் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் பின் தொடர்ந்தது.

விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேர்கள்

வீதிகளில் திருமுறை இன்னிசை

தேருக்கு முன்பு வீதிகளில் சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் நீரினால் கழுவி வண்ணக் கோலங்களை இட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஒதுவாமூர்த்திகள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்ச்சியை நடத்தியவாறு சென்றனர். இளைஞர்கள் கோலாட்டம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தி சென்றனர். ஏராளமான பெண்கள் தாங்கள் கற்ற பரதநாட்டியத்தை நடராஜருக்கு முன்பு நாட்டியம் ஆடி மகிழ்ந்தனர். 50க்கும் மேற்பட்ட வித்வான்கள் பங்கேற்று மேள தாளம் முழங்க நாதஸ்வரம் வாசித்தார்கள். இந்நிலையில் மதியம் விநாயகர், முருகன் தேர்கள் கீழவீதியில் உள்ள தேர் நிலையை அடைந்தது. அதே நேரத்தில் நடராஜர்,அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் தெற்குவீதி வழியாக மதியம் மேலவீதி கஞ்சி தொட்டி அருகே ஓய்வுக்காக நிறுத்தப்பட்டது. தேரோட்டம் நடந்த வீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்கள்.

தேருக்கு முன்பு ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று நாதஸ்வரம் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி:

மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர்த்திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது.இதனை முன்னிட்டு மாலையில் மேலவிதி கஞ்சி தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கும், அம்பாளுக்கும் சீர் அளித்து,பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடராஜர்,அம்பாள் தேர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தினரிடையே மெல்ல அசைந்தாடியவாறு வடக்கு வீதி வழியாக கீழ வீதியில் உள்ள தேர் நிலையை அடைந்தது. இரவில் அங்கு நடராஜ பெருமான் தேரின் முன்பு மாணிக்கவாசகர் எழுந்தருள செய்யப்பட்டு திருவெம்பாவை 21 பாடல்கள் பாடப்பட்டு ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு தீபாராதனை என 21 தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க அம்பாள் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் தேரில் இருந்து நடனமாடியவாரே ராஜ்யசபை என்று அழைக்கப்படும் ஆயிரக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு லட்சார்ச்சனையும்,மறுநாள் விடியற்காலை மகா அபிஷேகம் நடத்தப்பட்டு நண்பகலில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்பட்டு நடனமாடும் நடராஜர் பெருமானாய் திருக்கூத்து ஆடும் கூத்த பெருமானாய் அடியார்களுக்கு திருவருட்காட்சி நல்கி ஆனந்த தாண்டவராய் கிழக்கு வாசல் வழியாக சிற்றம்பலத்தினில் சென்று புகுந்தருள்வார். பத்தாம் திருநாளில் நிகழும் இந்த திரு நடனக்காட்சியே ஆருத்ரா தரிசனம் என கூறப்படுகிறது.