மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் கிராமம்!


பேருந்துகளில் கிராம பகுதிகளில் செல்லும் போது மண் சட்டியில் குழம்பு வைக்கும் வாசனை காற்றில் வரும் போது நம் மூக்கை துளைப்பதோடு நம் பசியை தூண்டும். மண்பாண்டங்களில் செய்யும் பொருட்களுக்கு வாசமும்,ருசியும் அதிகம். இன்றும் கிராமங்களில் நிறைய குடும்பங்கள் மண் பாண்டங்களை உபயோகப்படுத்தி சமைத்து வருகின்றனர். தமிழகத்தில் கிராமபுறங்களில் உள்ள உணவகங்களில் மண் அடுப்புகளில் மண்பாண்டங்களை கொண்டு சமைப்பதை காணலாம். தற்போது பேப்பர் தட்டுகள், பேப்பர் கப்புகள், அலுமினியம் மற்றும் சில்வர் பாத்திரங்களின் உபயோகம் அதிகரிப்பால் மண்பாண்ட தொழில்கள் அழியும் நிலையில் உள்ளது. இயற்கையோடு ஒட்டிய வாழ்வியல் முறை இங்கு அதிநவீன தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக அனைத்தும் செயற்கையானதாக மாறிவிட்டது. அதனால் மண்பாண்டம் தயாரிப்பது போன்ற பாரம்பரிய தொழில்கள் யாவும் இன்று உருக்குலைந்து போய்விட்டன.இதனால் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் வேறு திசையில் பயணிக்க தொடங்கி விட்டனர். இளைய தலைமுறையினரும் இதில் நாட்டம் கொள்வதில்லை.

மண்பாண்டங்களை குடிசைத் தொழிலாக செய்யும் மக்கள்.

இந்நிலையில் இந்த மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் ஒரு கிராமம் செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் மருத்துவ கல்லூரி சாலை வழியாக சென்றால் குமாரமங்கலம் கிராமத்தை அடையலாம்.

அங்கு குடிசைத் தொழில் போல் இந்த மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்த கிராமத்தில் உள்ள பல்வேறு குடும்பத்தினர் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலை குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் வெறுமனே பானை, சட்டி மட்டும் செய்யாமல் தற்கால வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் பல்வேறு பொருட்களையும் மண்ணால் தயாரித்து வருகின்றனர். இந்த நவநாகரீக யுகத்தில் மண் கலங்களின் பயன்பாடு மக்களிடத்தில் வெகுவாக குறைந்து விட்டதால் வருடத்தில் கார்த்திகை தீபத்திருநாள், மற்றும் பொங்கல் பண்டிகையை வைத்து தான் இவர்களுடைய வாழ்வாதாரமே உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளில் பொதுமக்கள் வீடுகள் மற்றும் கோயில்களில் மண்ணால் செய்யப்படும் அகல்விளக்குகளை ஏற்றி கடவுளை வழிபடுவது வழக்கம்‌.இதனால் கார்த்திகை மாதத்தில் வீடுகளில் அகல் விளக்குகளை வாங்க தொடங்கி விடுவார்கள். இதே போன்று பொங்கல் பண்டிகையின் போது மண் பானையில் பொங்கலிடுவது நம் வழக்கம். மேலும் இதற்காக மண்ணிலான அடுப்புகள்,சட்டிகள், பானைகள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இவர்கள் அதிகளவில் மண்பாண்டங்கள் செய்யும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் தொடர் மழையால் மண்பாண்டம் செய்யும் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. அப்படி செய்தாலும் உலரவைக்கவும்,சூளையிட முடியாமலும் அவதியுற்று வருகின்றனர். மண்பானை தொழிலுக்கு முக்கிய பிரச்சினை மண் எளிதாக கிடைப்பதில்லை.

களிமண் மற்றும் மணல் தட்டுப்பட்டால் மண்பாண்டம் செய்யும் தொழில் பாதிப்பு.

இவர்கள் உபயோகப்படுத்தும் களிமண் மற்றும் மணல் தட்டுப்பட்டால் இத்தொழில் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் நாங்கள் பாரம்பரியமாக பலத்தலைமுறைகளாக இந்த மண்பாண்ட தொழிலை பல்வேறு குடும்பத்தினர் செய்து வருகின்றோம். களிமண் மற்றும் மணல் தட்டுப்பட்டால் இத்தொழில் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நவம்பர்,டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் மண்பாண்ட தொழில் மிகவும் பாதிக்கப்படுகின்றது. நாங்கள் உற்பத்தி செய்யும் அகல்விளக்குகள், குழம்பு சட்டிகள், பொங்கல் பானைகள், பூந்தொட்டிகள், அடுப்புகள் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள், வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த தொழில் வளர வேண்டும் என்றால் மண்பாண்ட தொழில் செய்வதற்கான இட வசதியும் மற்றும் மூலதன வசதியும் அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றனர். இந்த நவநாகரிக யுகத்தில் மண் கலங்களின் பயன்பாடு மக்களிடத்தில் வெகுவாக குறைந்து விட்டது. நம் அன்றாட வாழ்வில் மண்பானைகளை பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமாக வாழலாம். நமது பாரம்பரிய மிக்க மண்பாண்ட தொழிலை அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பாகும்.