“திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” எனக் கூறப்படுவதுண்டு.திருவாசகம் என்னும் தேன் அமுதை மாணிக்கவாசகர் பாட அதனை வேதியர் உருவில் வந்த சிவபெருமான் எழுதிய இடம் தில்லை திருப்பெருந்துறை. பாண்டிய நாட்டின் வைகறை ஆற்றின் கரையில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவரது இயற்பெயர் வாதவூரார் என்பதாகும். சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக போற்றப்படுபடுபவர் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் இந்த சிறப்புக்குரிய பெரும் படைப்பாகும்.
பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சர் பதவி வகித்த வாதவூரார்!
சிறுவயதிலேயே கல்வியிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கினார் வாதவூரார். அவரது அறிவாற்றலை அறிந்த பாண்டிய மன்னனான அரிமர்த்தன பாண்டியன் வாதவூராருக்கு தனது அரசவையில் அமைச்சர் பதவியை வழங்கி கவுரவித்தான். உயர்பதவி நிறைந்து செல்வம் போன்றவை இருந்தும் எதையோ இழந்தது போன்ற உணர்வையே வாதவூரார் உணர்ந்து கொண்டிருந்தார். அது பற்றி அவர் ஆராய்ந்த போது சைவ சித்தாந்தங்களை கற்றறியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு இறைவனின் அடிசேர்வதே தன்னுடைய வாழ்வின் இறுதி நோக்கம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.அதனால் அவர் சிவ வழிபாட்டை மேற்கொள்ள தொடங்கினார். ஒரு சமயம், சோழ நாட்டில் தரமான வளமான குதிரைகள் கிடைப்பதாக பாண்டிய மன்னன் அறிந்தான். உடனடியாக தனது அமைச்சரான வாதவூராரை அனுப்பி குதிரைகளை வாங்கி வரும்படி பணித்தான். குதிரை வாங்குவதற்கு தேவையான பொன், பொருட்களையும் கொடுத்து அனுப்பினான். அதே நேரத்தில் தான் ஈசன் தன்னுடைய திருவிளையாடலை தொடங்கினார். திருப்பெருந்துறை திருத்தலத்தில் தன்னை ஒரு குருவைப் போல மாற்றிக் கொண்டு அங்கிருந்த குருந்த மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது அந்த வழியாக வந்த வாதவூரார் குருந்த மரத்தின் அடியில் இருந்த குருவை ஈசனே வந்திருப்பதாக எண்ணி மகிழ்ந்தார். அவர் அருகில் சென்று பணிந்து வணங்கினார். அப்போது சிவபெருமானின் பாதம் வாதவூராரின் தலை மீது பட்டது. அடுத்த நொடியே அவர் இறைவனை நினைத்து உருகி பாடல்களைப் பாடத் தொடங்கினார். அவரது பாடலைக் கேட்டு அந்த பரமனே உள்ளம் உருகிப் போனார். நீ பாடிய ஒவ்வொரு வார்த்தையும் மாணிக்கம் போன்றது அதனால் நீ மாணிக்கவாசகர் என்ற ஆசீர்வதித்து மறைந்தார் இறைவன்.
தன்னையே மறந்த மாணிக்கவாசகர் அங்கேயே திருப்பணிகளை தொடங்கி விட்டார்.
இறையருள் கிட்டிய மகிழ்ச்சியில் தன்னையே மறந்தார் மாணிக்கவாசகர் இதனால் தான் வந்த பணியை முற்றிலும் மறந்து போனார்.மன்னன் கொடுத்து அனுப்பிய பொன்னையெல்லாம் கொண்டு அங்கேயே தங்கி சிவபெருமானுக்கு கோயில் கட்டும் திருப்பணிகளை செய்ய தொடங்கி விட்டார். பல நாட்கள் கடந்த நிலையிலும் மாணிக்கவாசகர் வராததால் அவருக்கு மன்னன் ஓலை அனுப்பினான். அதனை பார்த்த மாணிக்கவாசகர் ஈசனை தேடி ஓடினார். ஐயனே மன்னன் கொடுத்த பொண்ணையெல்லாம் திருப்பணிக்காக செலவிட்டு விட்டேன்.இப்போது நான் என்ன செய்வது? என்று கண்ணீர் வடித்தார். ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று மறு ஓலை அனுப்பு என்ற அசரீரி கேட்டது. மாணிக்கவாசகரும் அவ்வாறே செய்தார். சிறிது நாள் கழித்து மாணிக்கவாசகரை மதுரைக்கு திரும்பும் படி ஈசன் கூறினார். அதன்படி மதுரை திரும்பியவரிடம் குதிரைகள் எங்கே என்று கேட்டான் பாண்டிய மன்னன். நீங்கள் இதுவரை பார்த்திராத அழகிய திடமான குதிரைகள் வந்து கொண்டிருக்கின்றன என்றார் மாணிக்கவாசகர்.ஆனால் ஆடி மாதம் கடைசி நாள் வரை குதிரைகள் வராததால் மன்னனுக்கு கோபம் வந்து மாணிக்கவாசகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதற்கிடையில் ஈசன் காட்டில் இருந்த நரிகளை குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பி வைத்தார். அதனை கண்டு மகிழ்ச்சியடைந்தார் மன்னன். ஆனால் அன்று இரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி ஓடிவிட்டன. மன்னனின் கோபம் எல்லை கடந்தது. மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடுமண்ணில் நிறுத்தினார். அவர் ஈசனைத் நினைத்து வேண்டினார். அப்போது ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு மதுரையை சூழ்ந்தது. ஆனால் மாணிக்கவாசகரை சுற்றி தண்ணீர் கால் அளவுக்கே ஓடியது. ஆற்றின் கரையை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று மன்னன் உத்தரவிட்டான். அவ்வூரில் வந்தி என்ற மூதாட்டி புட்டு விற்று பிழைத்து வந்தார். தினமும் ஒரு புட்டை ஈசனுக்கு படைத்து, அடியவர்களுக்கு அளிப்பார். வயோதிகம் காரணமாக தன்னால் செல்ல முடியாததால் கூலி ஆள் தேடினாள் வந்தி. அப்போது ஈசன் பணியாள் வேடம் கொண்டு தனக்கு புட்டு தந்தால், பணிக்கு செல்வதாக கூறவே பாட்டியும் புட்டு கொடுத்தாள். பின்னர் பணிக்கு சென்ற ஈசன் பணியை செய்யாமல் ஒரு இடத்தில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மன்னன் அவரை பெரம்பால் அடித்துள்ளார்.அந்த அடி உலக உயிர்கள் அனைத்தும் மீதும் விழுந்துள்ளது. இதனால் மன்னன் திகைத்து போனான்.பணியாள் உருவில் வந்த ஈசன் ஒரு கூடை மண்ணை ஆற்றின் கரையில் கொட்டியதும் வெள்ளம் வடிந்தது. இது ஈசனின் திருவிளையாடலே என தெரிந்த மன்னன் அதிசியத்து வாயடைத்து போய் நின்றான். பின்னர் மாணிக்கவாசகரை மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க மன்னன் கூறியும் மறுத்து அவர் சிதம்பரம்(தில்லை)சென்றார்.
திருப்பாற்கடல் பகுதியில் பர்ணசாலை அமைத்து இறைவனை வழிபட்ட மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட பின் பல தலங்களை தரிசித்துக் கொண்டு தில்லையை அடைந்தார்.சிதம்பரத்தில் வேங்கான் தெரு பகுதியில் உள்ள திருப்பாற்கடல் அருகே பதஞ்சலி, வியாக்கிரபாதர் போன்ற முனிவர்கள் தங்கி இருந்து தவம் செய்த இடத்திற்கு மாணிக்கவாசகர் சென்று அங்கேயே பர்ணசாலை ஒன்றை அமைத்து இறைவனை வழிபட்டு வந்தார். மேலும் ஆவுடையார் கோயில் திருப்பெருந்துறையில் அமைந்துள்ள ஆத்மநாதர் கோயில் போல் இப்பகுதியிலும் ஆத்மநாதர் கோயில் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்துள்ளார். ஒரு நாள் பர்ணசாலையில் மாணிக்கவாசகர் இருந்த போது வேதியர் உருவில் வந்த சிவபெருமான் “உனது பாடல்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறுவாயாக” என உணர்த்த அவரும் அங்ஙனமே கூற அதனை சுவடியில் தனது திருக்கரங்களால் எழுதி அதன் அடியில் “திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது” என்று கையெழுத்திட்டு மறைந்தார். அடுத்த நாள் நடராஜர் கோயிலில் உள்ள பஞ்சாட்சரப்படியில் அந்த சுவடி இருந்துள்ளது. இதனைக் கண்ட கோயில் தீட்சிதர்கள் திகைப்புற்று திருவாதவூரார் இருந்த பர்ணசாலைக்கு சென்று மாணிக்கவாசகரிடம் அம்பலத்தில் தாங்கள் கண்ட காட்சியை கூறி அந்த சுவடியில் எழுதப்பட்டுள்ள பொருளை விளக்குமாறு கூறினார்கள்.அவர்களுடன் கோயிலுக்கு சென்ற மாணிக்கவாசகர் கூத்த பெருமாளை வணங்கி இதன் பொருள் “நடராஜப்பெருமானே” என்று கூறி அனைவரும் காண சோதியிற் கலந்தருளினார்.
இறைவனிடம் இரண்டர கலந்த மாணிக்கவாசகர்!
இந்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் மாணிக்கவாசகர் பர்ணசாலை அமைத்து பூஜித்து வந்த தில்லை(சிதம்பரம்)திருப்பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர் கோயில் முகப்பில் சிவன் அடியார் வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கைகாட்டியுள்ள சிற்பம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும், 8ம் திருமுறையாக விளங்குகின்றன. சோதனைகளைக் கடந்த இறைவழி நின்ற மாணிக்கவாசகர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் இறைவனடி சேர்ந்தார். தில்லை திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் மாணிக்கவாசகரின் குருபூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மாணிக்கவாசகர் குருபூஜையில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆத்மநாதர் கோவில்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் அமைந்துள்ள ஆத்மநாதர் கோயில் போலவே தில்லை திருப்பெருந்துறையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.சிவயோகாம்பிகை அம்பிகை சமேத ஸ்ரீ ஆத்மநாதர் அருள் பாலிக்கும் இக்கோயிலில் மூலவர் வெறும் பலிபீடமாக தான் உள்ளார். அம்பிகையும் திருவடிவுடைய பீடமாகவே உள்ளார். இங்கு திருவடி தான் பூஜிக்கப்படுகிறது. இங்குள்ள மாணிக்கவாசகர் வடிவங்கள் குறிப்பிடத்தக்க சிறப்புடையன.
மாணிக்கவாசகர் அமர்ந்த திருக்கோலத்தில் வலக்கையில் ருத்திராட்ச மாலையுடன், இடக்கை மடிமீதும் வைத்துள்ளார். திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்ல அம்பலவன் வேதியராக இங்கு வந்து ஏட்டில் எழுதிக் கொண்ட வடிவமைப்பாக இதனைக் கொள்ளலாம். மற்றொரு மாணிக்கவாசகர் வடிவம் இடக்கை சுவடியுடனும் வலக்கை உயரத்தூக்கிக் காட்டுவது போலவும் உள்ளது. இது திருவாசகத்தின் பொருள் யாது எனக் கேட்டபோது “இவரே” எனக் கூத்தப்பெருமாளை குறித்து காட்டும் கோலமாக இதனைக் கொள்ளலாம். மேலும் இக்கோயிலில் அம்பிகை சன்னதிக்கு எதிரே மாணிக்கவாசகர் தனி சன்னதியிலும் அருள் பாலித்து வருகின்றார். ஆத்மநாதர் கோயிலில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. அவ்வபோது ஏராளமான சிவனடியார்கள் வந்து திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.