கேட்ட வரம் தரும் கீழத்தெரு மாரியம்மன்.


சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில்.

பூலோக கைலாயம் என வர்ணிக்கப்படும் சிதம்பரம் முன்னொரு காலத்தில் தில்லை வனமாக காட்சியளித்தது. அசுரர்கள் தில்லை நகருக்குள் நுழையாமல் இருக்க தெற்கே வெள்ளந்தாங்கி அம்மனும், மேற்கே எல்லையம்மனும்,வடக்கே தில்லையம்மனும்,கிழக்கே மாரியம்மனும் இருந்து காத்தருள சிவபெருமான் கட்டளையிட்டதாக புராண வரலாறு கூறுகிறது. அன்று முதல் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே அருள்பாலித்து வரும் மாரியம்மனுக்கு கீழத்தெரு மாரியம்மன் என பெயர் பெற்றது. இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. கருணையின் உருவமே, கலைகளின் வடிவமே எனப் போற்றப்படும் கீழத்தெரு மாரியம்மன் தில்லைவாழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.

கீழத்தெரு மாரியம்மனை குலதெய்வமாக வணங்கி வரும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள்.

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலின் முகப்பு தோற்றம்.

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மனை கிள்ளை அருகில் உள்ள பிச்சாவரம் ஜமீன் வகையறாக்கள் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குலதெய்வமாக போற்றி வணங்கி வருகின்றனர். சிதம்பரம் பேருந்து நிலையம் எதிர்புறத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து கீழத்தெரு மாரியம்மன் அருளை பெற்று செல்கின்றனர். பொதுவாக மாரியம்மன் கோவிலில் சிங்கமும்,கழுமரமும் தான் இருக்கும். ஆனால் இந்த கீழத்தெரு மாரியம்மன் எதிர்புறத்தில் நந்தி இருந்து வருகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கேட்ட வரம் தரும் அம்பாள்.

கீழத்தெரு மாரியம்மனின் மகிமைகள் குறித்து பக்தர்கள் கூறுகையில், தமிழகத்தில் சமயபுரம், மாதானம், பெரியபாளையம், மேல்மலையனூர் ஆகிய பகுதிகளில் உள்ள சக்தி கோயில்களை அடுத்து பல ஊர்களில் இருந்து பக்தர்கள் கூடும் கோவிலாக சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்களின் வேண்டுதல்கள்,பிரார்த்தனைகள் நிறைவேறுவதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தில் பிரம்மோற்சவ விழா 10 தினங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம், தீமிதி விழா ஆகியவை நடைபெறும். தீமிதியன்று அலகு அணிதல், பாடை கட்டி இழுத்தல்,உடலில் மாவிளக்கு ஏற்றுதல், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். கேட்டவருக்கு கேட்ட வரம் அளிப்பவர் கீழத்தெரு மாரியம்மன்.இந்த அம்பாளை வழிபட்டால் அனுக்கிரகம் கண்டிப்பாக உண்டு என்பதை அனைவரும் உணர்ந்ததால் இக்கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தந்து வழிபடுகின்றனர். இங்கு மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. அனைத்து மதத்தினரும் கோவிலுக்கு வருகை தருவது சிறப்பு வாய்ந்தது என்றனர்.

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் தீ மிதிக்கின்றனர்.

சிதம்பரம் பேருந்து நிலையம் எதிரே உள்ளது கீழத்தெரு மாரியம்மன் கோவில்.

கீழத்தெரு மாரியம்மன் கோவிலின் பின்புற வாயில்.

கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தினமும் அபிஷேக,ஆராதனைகளும் ஒரு கால பூஜையும் நடைபெறும். ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.ஆடி மற்றும் தை கடை வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறும். அப்போது ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்வார்கள். கோவில் தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 1:30 மணிக்கு நடை சாத்தப்படும்.மீண்டும் மாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 9.00 மணிக்கு நடை சாத்தப்படும். சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு எதிரே கோவில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.