சிவத்திருத்தலங்களுள் சிறந்தது சிதம்பரம் ஸ்தலம்.சிதம்பரம் நடராஜர் கோயிலை சுற்றி பல பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிதம்பரம் மையப்பகுதியில் அமைந்துள்ள திருப்புலீச்சுரம் கோயில். சிதம்பரம் ஸ்தலத்திற்குரிய தீர்த்தங்கள் பத்து. இதில் நான்காவது தீர்த்தமாகிய வியாக்ரபாத தீர்த்தம் இத்திருக்கோயிலின் முன்பு உள்ள திருக்குளம்.திருஞானசம்பந்தரால் திருப்புலீச்சுரம் என்று பாடப்பட்ட திருக்கோயில் 7ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும். வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் ஆன்மார்த்தமாக பூஜை செய்த தலம் திருப்புலீச்சுரம் கோயில். இக்கோயில் மூர்த்தி,தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்படையுது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மேற்கு பகுதியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோயில் உள்ளது. சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும், பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது இக்கோயில். சிவனடியார்கள் பலர் போற்றி வழிபட்ட கோயிலாகும். 63 நாயன்மார்களில் இரண்டாவது நாயன்மாரான திருநீலகண்ட நாயனாரையும், அவர் மனைவியையும் இளமை பெறச் செய்ததால் இத் திருக்கோயில் இளமையாக்கினார் கோயில் என சிறப்பு பெயர் பெற்றது. மேலும் 63 நாயன்மார்களில் 48வது நாயன்மாரான கனம்புல்ல நாயனாரும் இத்திருக்கோயிலில் விளக்கு எரிக்கும் பணி செய்து அப்போது தனது தலை முடியையே விளக்கில் எரித்து முக்தியடைந்துள்ளார்.
வியாக்ரபாத முனிவர் பூஜித்த கோயில்.
சிதம்பரம் தில்லை வனமாக இருந்தபோது மத்தியந்தன முனிவரின் மகனாகிய பால முனிவர் தந்தை உபதேசப்படி தில்லைவனத்தை வந்து சேர்ந்தார். அங்குள்ள சிவகங்கை என்னும் சிவதீர்த்தத்தை கண்டு ஸ்தானம் செய்தார். அதற்குத் தெற்கே ஒரு ஆலமரத்தின் நிழலிலே திருமூலட்டானேசுரர் என்னும் சிவலிங்கத்தை கண்டு தரிசித்து வணங்கி வந்தார். அந்த சிவலிங்கம் தான் நடராஜர் கோயிலின் மூலவரான ஆதிமூலநாதர். அப்போது தில்லைக்கு மேற்கே ஒரு திருக்குளத்தைக் கண்டு அருகில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி அதற்குச் சமீபத்திலே ஒரு பர்ணசாலை அமைத்து ஆன்மார்த்தமாக பூஜை செய்து வழிபட்டு வந்தார். விடியும் முன் பூப்பறித்து இரு சிவலிங்கங்களையும் பூஜித்து வந்தார். அப்போது இருளிலே பூ பறிக்க வழி தெரியாமல் துன்பப்பட்டார். பூக்களை விடிந்தபின் எடுக்கலாமெனில் அதனை வண்டுகள் மொய்த்து எச்சில் செய்வதால் அதனை சாமிக்கு எப்படி வைப்பது என மனம் வருந்தினார். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியவாறு அவருக்கு காட்சி கொடுத்துள்ளார். மெய்சிலிர்த்து நின்ற பாலமுனிவரிடம் சிவபெருமான் நீ விரும்பிய வரம் யாது?என கேட்ட போது பாலமுனிவர் “எம்பெருமானே அடியேன் மரங்களிலே வழுக்காமல் பற்றி ஏறுவதற்கு அடியேனுடைய கால்களும்,கைகளும் புலிக்கால்களையும், புலிக்கைகளையும் போல வலிய நகப்பற்றுடையவைகளாய் இருக்கும் பொருட்டும், வழி பார்த்து நடப்பதற்கும்,பூக்களைப் பழுதுபார்த்து எடுப்பதற்கும் அக்கால்களிலும், கைகளிலும் கண்கள் பொருந்தும் பொருட்டும் அருள் செய்யும்” என்று பிரார்த்தித்தார். சிவபெருமான் அவர் வேண்டுதலுக்கு அருள் செய்து மறைந்தருளினார்.மலர் தொண்டு செய்ய மரத்தில் ஏறி மலர் பறிக்க வசதியாக புலிக்கால், புலிக்கை, கை, கால்களில் ஒளி தரும் கண்கள் ஆகியவற்றை இறைவனிடத்தில் வேண்டிப் பெற்றமையால் வியாக்ரபாதர் என பெயர் பெற்றார். இவர் நாள் தோறும் விடியும் முன் நால்வகை பூக்களை பறித்து சிவகாம விதிப்படி சிவ பூஜை செய்து முறைப்படி இறைவனை வழிபட்டு வந்தார். இவரது நிலைமையை நேரில் வந்து கண்ட தந்தையார் இவர் செயலை கண்டு மகிழ்ந்தார். வியாக்ரபாத முனிவராகிய தன் புதல்வருக்கு வசிஷ்ட முனிவரின் தங்கையைத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். அவரும் அவ்வாறே திருமணம் செய்து உபமன்யு என்ற மகனையும் பெற்றார். ஒருநாள் வியாக்ரபாதர் பூஜித்து கொண்டிருந்த போது இக்குழந்தை பாலுக்கழ திருப்பாற்கடலையே அம்பலவன் அருளினான். இதனைச் சேந்தனார் “பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்”எனப் பாடியுள்ளார்.
திருநீலகண்ட நாயனார்
திருநீலகண்ட நாயனார் வேத நெறியினர் வாழும் தில்லையில் குயவர் குலத்தில் தோன்றியவர். திருநீலகண்ட நாயனார் நடராஜப்பெருமானை தினந்தோறும் வழிபட்டு கொண்டு சிவனடியார்களுக்கு செய்ய வேண்டிய திருத்தொண்டுகளையும் முறையாக செய்து வந்தார். தம் வாழ்விற்காக தம் குலத்தொழிலாகிய மண்பாண்டகளை செய்து விற்று வந்தாலும் சிவனடியார்களுக்கெல்லாம் பிச்சை பாத்திரமாகிய திருவோடுகளைக் செய்து இலவசமாக கொடுத்து வந்தார். இவர் மனைவி ரத்தின சலை அம்மையார் கற்பிலும், அழகிலும், சிவத்தொண்டிலும் சிறந்து விளங்கினார். திருநீலகண்ட நாயனாரோ மிகுந்த இளமைப் பருவம் காரணமாகச் சிற்றின்ப துறையில் தம்மை எளியராக ஆக்கிக்கொண்டதோடு வேறொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டுள்ளார். இதனை அறிந்த மனைவி ரத்தினசலை மிகவும் வருத்தம் அடைந்தார். இதனை தொடர்ந்து திருநீலகண்ட நாயனாரிடம் ஐயனே இனி எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டு தம்மை தீண்டக் கூடாது என்று கூறிவிட்டார். அதனைக் கேட்ட திருநீலகண்ட நாயனார் தன் மனைவியாரை அயலவர் போல நோக்கி “எம்மை எனப் பன்மைச் சொல்லாற் கூறினமையால் மற்ற மாதர்களை என் மனத்தாலும் தீண்டேன்” என உறுதி கூறினார். கற்பிற் சிறந்த அவர்தம் மனைவியார் தன் கணவனுக்கு இயைந்த பணிகளையெல்லாம் நாள்தோறும் விருப்பத்துடன் செய்து வர, திருநீலகண்டத்தின்பால் அன்புடைய இருவரும் உடனுறைவின்றி மெய்யிரு புணர்ச்சி மட்டுமன்றி ஒரே வீட்டில் இருவரும் வெவ்வேறாக துயின்று, இச்செய்தி பிறவரும் அறிந்து கொள்வதற்கு இயலாத வகையில் வாழ்ந்து வந்தனர்.ஆண்டுகள் பல செல்ல தமது இளமை நீங்கி முதுமை நிலை எய்தி உடல் தளர்ச்சியுற்ற பின்னரும் இறைவன் பால் வைத்த அன்பு குறையாமல் அவருக்கு தொண்டு செய்து வந்தனர்.
சிவபெருமான் அளித்த திருவோடு
சிவபெருமான் இவர்களது இல்வாழ்க்கைச் சிறப்பினை உலகத்தார் அறிந்து உய்யும் வண்ணம் புலப்படுத்தத் திருவுள்ளங் கொண்டார். ஒரு நாள் சிவபெருமான் சிவயோகியார் வேடமுண்டு திருநீலகண்டர் வீட்டினை அடைந்தார். அப்பொழுது வீட்டிலிருந்த திருநீலகண்ட நாயனாரிடம் தம்பால் உள்ள திருவோடு ஒன்றினை அவரிடம் தந்து ‘தம்பி! நீ இதனை பாதுகாத்து வைத்திருந்து நாம் வேண்டும் போது திருப்பி தருக’ என்று கூறிச் சென்றார். சென்ற சிவயோகியார் நாட்கள் பல கழிந்த பிறகு தாம் கொடுத்திருந்த திருவோட்டை வைத்த இடத்தில் இல்லாமல் மறையச் செய்து திருநீலகண்டரை அணுகி ‘யான் முன்பு உன்னிடம் தந்த திருவோட்டை தருக’ எனக் கேட்டார். தாம் பாதுகாத்து வைத்திருந்த இடத்தில் திருவோட்டினை காணப்பெறாமையால் அதனை பல இடங்களிலும் தேடித்திகைப்புற்ற திருநீலகண்ட நாயனார் சிவயோகியாரை வணங்கி நீ தந்து சென்று திருவோட்டினை யான் பாதுகாத்து வைத்திருந்த இடத்திலும் வேறு இடங்களிலும் பல முறை தேடியும் காணவில்லை. அதனினும் சிறப்புடைய நல்லதொரு பாத்திரம் தருகின்றேன். அதனை ஏற்றுக்கொண்டு எனது பிழையை பொறுத்தருள வேண்டுமென வேண்டினார். அதை கேட்ட சிவயோகியார் “யான் தந்த மண் ஓட்டினையன்றி, நீ கொடுப்பது பொன்னினாற் செய்யப்பட்டது என்றாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் முன்பு நான் கொடுத்த ஓட்டினை கொண்டு வா”என்றார்.
மனைவியுடன் இளமை பெற்ற திருநீலகண்ட நாயனார்
தான் கொடுத்த ஓட்டினை தொலைத்து விட்டது உண்மையாயின் உன் மகனைக் கைப்பற்றி குளத்தில் மூழ்கி சத்தியம் செய்க என்றார்.தமக்கு மகன் இல்லை என்று கூற அப்படியானால் உன் மனைவியின் கைப்பற்றி நீரில் மூழ்கி சத்தியம் செய் எனக் சிவயோகியார் கூறினார்.”நானும் என் மனைவியும் எங்களிடையே உள்ளதொரு சபதத்தால் உடன் மூழ்க இசைவில்லை. யானே புனலில் மூழ்கிச் சத்தியம் செய்கிறேன். என்னுடன் வாரும்” என்றார் திருநீலகண்ட நாயனார். சினம் கொண்ட சிவயோகியார் தில்லைவாழ் அந்தணர்கள் கூடியிருக்கும் பேரவையில் இவ்வழக்கினைக் கூறுவேன் என்று சொல்ல, திருநீலகண்டரும் அதற்கிசைந்து அவருடன் சென்றார். சிவயோகியாரும், நாயனாரும் தத்தம் வழக்கை எடுத்துக்கூற, கேட்ட தில்லைவாழ் அந்தணர்கள் திருநீலகண்டரைப் பார்த்து இவர் கொடுத்த ஓட்டினை தொலைத்து விட்டீர்கள் என்றால் மனைவியுடன் குளத்தில் மூழ்கி உறுதி கூறுதலே முறையாகும் என்று முடிவு கூறினர். அதனை கேட்ட திருநீலகண்ட நாயனார் தன் மனைவியாரைத் தீண்ட இயலாமைக்குரிய சபதத்தை வெளிப்படுத்த இயலாதவராய்ப் ‘பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன் எனக்கூறி சிவயோகியாருடன் தன் இல்லத்தை அடைந்தார். பிறகு தன் மனைவியாரைக் அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சுரத் திருக்கோயிலின் முன்னுள்ள குளத்தினை அடைந்தார். திருநீலகண்டரின் ஆணையினை வழுவாது காக்கும் நிலையில் மூங்கில் கோல் ஒன்றினை ஒரு முனையைத் தாமும், மற்றொரு முனையைத் தன் மனைவியாரும் பற்றிக் கொண்டு குளத்தில் மூழ்க ஆயத்தமானபோது சிவயோகியார் மனைவியின் கைப்பற்றி உடல் மூழ்குக என்று வற்புறுத்த அவ்வாறு செய்ததற்குத் தடையாக தங்களிடையே உள்ள சபதத்தை அங்கு உள்ளவர்கள் கேட்ப திருநீலகண்ட நாயனார் எடுத்துக் கூறினார். பின்னர் அவர் தன் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கி கரையேறிய கணவரும், மனைவியாரும் மேவிய முதுமை நீங்கி இளமை பெற்று தோன்றினார்கள். அப்பொழுது சிவயோகியாரும் அங்கிருந்து மறைந்து அம்மையப்பராக காட்சியளித்து நாயனாரையும் அவர் தன் மனைவியாரையும் நோக்கி “ஐம்புலன்களையும் வென்றவர்களே! என்றும் இவ்விளமை நீங்காது நம்பால் விருப்போடு இருப்பீராக என்று அருள் புரிந்தார்.
திருப்புலீச்சுரம் கோயில் இளமையாக்கினார் கோயிலாக மாறியது.
புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் நாள்தோறும் ஆன்மார்ந்தமாக பூஜை செய்து வந்தமையால் திருப்புலீச்சுரம் என்னும் திருப்பெயருடைய இத்திருக்கோயில் திருநீலகண்ட நாயனாருக்கும், அவர் தம் மனைவியாருக்கும் இளமை தன்மையை வழங்கியதால் இளமையாக்கினார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. முன்பு இங்குள்ள மூலவரின் பெயர் திருபுலீச்சுரர் என்றும் அம்பாள் பெயர் திரிபுரசுந்தரி என இருந்தது. இக்கோயில் எதிரே உள்ள வியாக்ரபாத தீர்த்தத்தில் திருநீலகண்ட நாயனாரை இளமை பெறச் செய்ததால் இங்குள்ள இறைவனை யவனேஸ்வரர்(இளமையாக்கினார்) எனவும், அம்பிகையை யவனாம்பிகை(இளமை நாயகி) என அழைக்கப்பட்டனர். இக்கோயிலின் எதிரில் உள்ள வியாக்ரபாத தீர்த்தம் “யவனத்தீர்த்தம்”என்ற சிறப்புப் பெயர்களுடன் திகழ்கின்றன.
கனம்புல்ல நாயனார்
63 நாயன்மார்களில் மற்றொருவர் கனம்புல்ல நாயனார். இவர் வடவெள்ளாற்றுத் தென்கரையில் உள்ள இருக்கு வேலூரில் அவதரித்தார். இவரை ஊர் குடி மக்களுக்கு தலைவராக விளங்கினார். பெரும் செல்வந்தனராகிய இவர் “செல்வத்துப் பயன் சிவத்தொண்டு செய்ததலே”என்னும் சிறந்த கொள்கையை மேற்கொண்டார். நாள்தோறும் சிவபெருமானின் திருக்கோயிலில் திருவிளக்கெரிக்கும் நற்பணியினை மிக்க ஆர்வத்துடன் செய்து வந்தார். நெடுங்காலம் சென்று வறுமை எய்திய நிலையில் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்ற பொருளைக் கொண்டு திருப்புலீச்சுரத் திருக்கோயிலில் விளக்கேற்றும் பணியினை செய்து வந்தார். தன் செல்வங்களை எல்லாம் இழந்த நிலையிலும் பிறர் பாலிடமிருந்து பொருள் பெறுவது இழிவெனக்கருதி’ கனம் புல்’ என்ற ஒரு வகைப் புல்லை அறிந்து விற்று அதனால் கிடைத்த பொருளைக் கொண்டு நெய் வாங்கி திருவிளக்கேற்றி வந்தார். இக்கோயிலில் இரவு முழுவதும் திருவிளக்கெரிக்கும் திருத்தொண்டினை தொடர்ந்தார். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று இறைவன் சோதனையால் தான் அறிந்து வந்த கனம் புல் விலைக்கு விற்காததால் அப்புல்லை கொண்டே திருக்கோயிலில் திருவிளக்கெரித்தார்.வழக்கமாக விளக்கெரிக்கும் நேரம் வரையிலும் விளக்கு எரிக்க புல் போதாமையால் அதனுடன் தமது சடை முடியினையும் சேர்த்து எரித்து இறைவனடி சேர்ந்தார். திருநீலகண்டர்,கனம் புல்லர் ஆகிய இரண்டு நாயன்மார்கள் வரலாற்றுத் தொடர்புடைய சிறந்த தலம் திருப்புலீச்சுரம் என்று பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் இக்கோயிலில் திருநீலகண்ட நாயனாருக்கும், கனம்புல்ல நாயனாருக்கும் தனி சந்நதிகள் உள்ளன. திருத்தொண்டர் புராணத்தில் திருநீலகண்ட நாயனார், கனம்புல்ல நாயனார் ஆகிய புராணங்கள் பொழிப்புரையுடன் தனித்தனியாக கூறப்பட்டுள்ளன.
நாள் தோறும் நான்கு கால பூஜை
பழமை வாய்ந்த இந்த கோயிலில் நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இக்கோயிலை பரம்பரையாக மிகவும் சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் கனம்புல்ல நாயனார் குருபூஜை விழாவும், தை மாதம் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்ட நாயனார் விழாவும் இன்றியமையாத வரலாற்று விழாவாக இங்கு நடைபெற்று வருகின்றன. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாள் விழா திருநீலகண்ட நாயனாரிடம் இறைவன் சிவயோகியாக வந்து திருவோடு தந்து பாதுகாக்கும் படி கூறுவது வரையில் உள்ள திருத்தொண்ட புராணத்தில் திருநீலகண்ட நாயனார் வரலாற்று புராணம் ஓதப்பெற்று வரலாற்று விழாவாக ஆண்டு தோறும் நடைபெறுகின்றது. இரண்டாம் நாள் விழாவில் சிவயோகியார் முன் தந்த அந்த திருவோட்டை மறையும்படி செய்து நாயனாரிடம் வந்து ஓட்டினைத் திரும்பக் கேட்பது முதல் திருநீலகண்ட நாயனாரும், மனைவியாரும் குளத்தில் மூழ்கி இளமை பெற்று முக்தி அடைந்தது வரையில் உள்ள வரலாற்று நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெறுகின்றது.இவ்விரண்டு நாள் விழா கோயிலில் மிகச் சிறந்த விழாவாக நடைபெற்று வருகின்றது.
சிறப்பாக நடைபெறும் பிரதோஷ பூஜை.
இக்கோயிலில் மாதம்தோறும் பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்ட கண்ட நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.அதேபோன்று ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் கனம்புல்ல நாயனாருக்கும், முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. பௌர்ணமி தினத்தன்று யவனாம்பாள் சமேத யவனேஸ்வரர் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. மகா சிவராத்திரியன்று மிகச் சிறப்பாக நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது.மேலும் நவராத்திரி உற்சவம் 9 நாட்களும் இக்கோயிலில் களை கட்டுகிறது. பத்தாவது நாளாக விஜயதசமியன்று குதிரை வாகனத்தில் சாமி வீதியுலா மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியும், செட்டிநாட்டில் நடைபெறுவது போல் இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றது. பெரிய கார்த்திகையன்று கனம்புல்ல நாயனார் உற்சவமும் மற்றும் சொர்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகின்றது.
கணவன்,மனைவி இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் கோயில்.
இறைவன் சிவயோகியார் வேடம் பூண்டு திருநீலகண்ட நாயனாரையும் அவர் மனைவி ரத்தின சலையையும் ஒன்று சேர்த்து அவர்களை நீரில் மூழ்க வைத்து இளமை பெற செய்ததால் இக்கோயில் இளமையாக்கினார் கோயில் என பெயர் பெற்றது. மேலும் இக்கோயிலுக்கு சென்று தொடர்ந்து வழிபட்டால் கணவன், மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும் என்றும், கணவன், மனைவி பிரிந்து இருந்தால் அவர்களை ஒன்று சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. பழமை வாய்ந்த இந்த கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் பிரம்மாண்டமாக கிழக்கு நோக்கி கற்கோயிலாக அமைந்துள்ளது. கருவறையில் லிங்க வடிவில் யவனேஸ்வரர் காட்சியளிக்கிறார். கருவறையில் சாமிக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் வியாக்ரபாதர் சாமியை வணங்கியபடி காணப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் யவனாம்பிகை அம்பாள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.தெற்கு நோக்கி தனி சன்னதியில் ஆக்ஞா கணபதியும், சுயசாம்பிகை தேவி சமேத அதிகார நந்தியும் அருள் புரிகின்றனர். கோயிலின் தென் கிழக்கில் சூரிய பகவானும், வியாக்ரபாதரும்,தெற்கு பிரகாரத்தில் கனம்புல்ல நாயனாரும், இளமை பெற்ற திருநீலகண்ட நாயனாரும்,அவருடைய மனைவி ரத்தின சலை ஆகியோரும் தரிசனம் தருகின்றனர். மேலும் இக்கோயிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதி, மகாலட்சுமி, சரஸ்வதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசாலாட்சி, காசி விசுவநாதர், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், விஷ்ணு, துர்க்கை அம்மன்,சந்திரன்,சூரியன் ஆகிய சந்நதிகள் உள்ளன. முதன்முதலாக 1899 ம் வருடம் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் இக் கோயில் எதிரில் உள்ள யவனத் தீர்த்தக் குளம் 1940க்கு மேல் 1955க்குள் கல் கட்டுமான பணிகள் மேற்கொண்டு அழகிய நீராழி மண்டபத்துடன் அமைத்து இரண்டாவது முறையாக இக்கோயில் 1955ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் காலை 8.00 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.00 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.15மணிக்கு நடை அடைக்கப்படும். சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இளமையாக்கினார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து யவனாம்பாள் சமேத யவனேஸ்வரரின் அருள் பெறுங்கள்.