கருக்காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோவில்.


திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோவில் நுழைவு வாயில்

தமிழ்நாட்டில் சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் தரிசிக்க வேண்டிய மகத்துவமிக்க பல கோவில்கள் உள்ளன. அந்த வகையில் தரிசிக்க வேண்டிய கோவிலான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த திருக்கருகாவூரில் மிகவும் தொன்மையான புகழ்பெற்ற அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாதர் திருக்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இக்கோவில். தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும்,கும்பகோணத்திற்கு தென் மேற்கில் 20 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து செல்வதானால் வடகிழக்காக அதே அளவு தூரத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

முல்லைக்கொடி சுற்றியபடி புற்றிலிருந்து தோன்றிய சுயம்பு மூர்த்தி.

சுயம்புலிங்கமாக தோன்றிய முல்லைவனநாதர்.

திருக்கருகாவூர் ஸ்தலத்தில் இறைவன் முல்லைக்கொடி சுற்றியபடி புற்றிலிருந்து தோன்றிய சுயம்புமூர்த்தி! இக்கோயிலில் தாமரைப் பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகின்றார் கர்ப்பரட்சாம்பிகை. 4 கரங்களுடன் காட்சி தரும் அம்பாள் வலது கரத்தில் அட்சமாலையையும்,இடது கரத்தில் தாமரை மலரையும் ஏந்தி, கீழ் வலது கரம் அபயமுத்திரை காட்ட, இடது கரத்தை இடுப்பை அணைத்தபடி வைத்து கர்ப்பப்பைக்கு அபயம் அளிப்பவள் என கருதும் வகையில் காட்சி தருகிறார்.கர்ப்பராட்சம்பிகையை வழிபட்டால் குழந்தை பேறு உண்டாகும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த அம்பாளை வழிபடும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும் என்றும் கருப்பை பலம் பெறும் என்றும் எப்படிப்பட்ட சிக்கலான பிரசவம் கூட சுகப்பிரசவம் ஆகும் எனக் கூறப்படுகிறது. மேலும் குழந்தை இல்லா தம்பதியருக்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது ஐதீகமாக உள்ளது.

கர்ப்பரட்சாம்பிகை

கோவில் தல வரலாறு.

முல்லைவனநாதர் கோவில்

முன்பொரு காலத்தில் இந்த கோவில் உள்ள பகுதி முல்லைக் காடாக இருந்துள்ளது. ஊர் மக்கள் ஒரு முறை முல்லைக்கொடிகளை வெட்டிக் கொண்டிருந்தபோது ஒரு புற்றிலிருந்து முல்லையின் ஒரு வகையான கொடி சுற்றிய நிலையில் சுயம்புலிங்கமாக வெளிப்பட்டுள்ளார் ஈஸ்வரன். முல்லைவனத்தில் முல்லைக்கொடி சுற்றத் தோன்றியவர் என்பதால் முல்லைவனநாதர் என்றே அழைக்கப்படுகிறார். அருள்மிகு முல்லைவனநாதர் எழுந்தருளிய முல்லைவனத்தில், கௌதமர், கார்கேயர் உள்ளிட்ட முனிவர்கள் பலரும் தவமிருந்து வந்துள்ளனர்.சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முனிவர்களுக்கு பணிவிடை செய்து வந்தனர். தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத துக்கத்தில் இருந்த அவர்களை கௌதம முனிவரும், கார்கேய முனிவரும் முல்லைவனநாதரையும், பார்வதி தேவியையும் 48 நாட்கள் பூஜை செய்து வழிபட சொல்கிறார்கள்.

நித்திருவர்-வேதிகை தம்பதியர் சிவன் மற்றும் பார்வதியை 48 நாட்கள் பூஜை செய்து வழிபடுகிறார்கள். அவர்களுடைய பக்தியை மெச்சிய சிவபெருமானும், பார்வதிதேவியும் அவர்களின் முன்பாக தோன்றி கரு உண்டாக வரம் தருகிறார்கள். வேதிகையையும் கருவுற்றதாக கூறப்படுகிறது. வேதிகை தினமும் காலை, மாலை இரு வேளையும் சிவபெருமானையும்,பார்வதி தேவியையும் வழிபட்டும்,வீட்டு வேலைகளை செய்வதும், தோட்டத்தை பராமரித்தும், அவ்வபோது ஓய்வெடுப்பதுமாக இருந்து வந்தார். இந்நிலையில் ஒரு நாள் ஊர்த்துவ மகரிஷி என்ற முனிவர் கடும் பசியுடன் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்துள்ளார். வேதிகையோ அப்போது சயனத்தில் இருந்து உள்ளார்.கர்ப்ப காலத்தில் அவள் படுத்திருப்பது அறியாத அந்த முனிவர் வேதிகை தன்னை அவமதிப்பதாக நினைத்து கடும்கோபம் கொண்டு “எதன் பொருட்டு என்னை கவனிக்காது உதாசீனப்படுத்தினாயோ அது உனக்கு இல்லாமல் போகட்டும்” என்று சபித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதிகைக்குக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும்,கருவைக் உரிய நேரத்தில் அம்பிகை காத்ததால் கருகாவூர் என்றும் இங்குள்ள அம்பாளுக்கு கர்ப்பரட்சாம்பிகை என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோருக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை என்றும் கர்ப்ப வேதனையும் மிகுதியாகாது என்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் மிகுந்த நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள கர்ப்ராட்சம்பிகையை வேண்டி அம்பாளின் திருவடியில் தூய்மையான நெய்யால் அபிஷேகம் செய்து அதனை உண்டால் குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

கர்ப்பரட்சாம்பிகை சன்னதி

படிமெழுகுதல் பிரார்த்தனை.

இக்கோவிலின் பிரதான பிரார்த்தனை படிமெழுகுதல் ஆகும்.தள்ளிப் போகும் திருமணம், குழந்தைப்பேறு,பூப்படைவதில் உள்ள பிரச்சனை, கர்ப்பக்கால பிரச்சனைகள் உள்ளவர்கள் இங்கு வந்து அம்பிகையின் சன்னதியின் நுழைவாயில் பகுதியில் சிறிது கையால் மெழுகி கோலமிட்டு அம்பிகையை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் பிரச்சனை தீர்ந்து நல்வழி பிறக்கும் எனக் கூறப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாத தம்பதியருக்கு அம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை வீட்டிற்கு எடுத்துச் சென்று 48 நாட்கள் கணவன்-மனைவி சாப்பிட்டு வர எந்த பிரச்சினையும் இல்லாமல் கரு உருவாகும் என நம்பப்படுகிறது.(தூய்மையான பசு நெய் நாம் வாங்கி செல்லலாம்).

தங்கத் தொட்டில் வழிபாடு.

இங்குள்ள அம்பிகையை வேண்டிக்கொண்டு குழந்தை பிறந்ததும் குழந்தையை எடுத்து வந்து தங்கத் தொட்டிலில் போட்டு பக்தர்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். தமிழ்நாட்டுலேயே தங்கத் தொட்டில் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது இந்த கோயிலில் தான் எனக் கூறப்படுகிறது. மேலும் துலாபாரம் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகள் பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றது

கோவில் தல விருட்சம் முல்லை.

கோவில் தல விருட்சம் முல்லை.

இத்தலம் முழுவதும் முல்லைக் காடாக இருந்ததால் இதன் தல விருட்சமாக முல்லை உள்ளது. கோவிலை சுற்றி உள்ள நந்தவனத்தில் ஏராளமான முல்லைக்கொடி பரந்து காணப்படுகிறது. இக்கோவிலில் கற்பக விநாயகர், முருகப்பெருமான் ஆகியோர் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ‌இக்கோவிலின் வெளியே ஷீரகுண்டம் என்ற அழகிய தீர்த்தக்குளம் உள்ளது.

கோவில் தீர்த்தக்குளம்.

வளர்பிறை பிரதோஷ பூஜை சிறப்பு.

இக்கோவிலில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இக்கோவில் கொடிமரம் அருகே இரு நந்திகள் உள்ளன. அதில் வலது புறம் உள்ள நந்தி சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது.அருள்மிகு முல்லைவனநாதருக்கு பிரதி மாதம் வளர்பிறை பிரதோஷத்தன்று புனுகு சாற்றப்படுகிறது. அப்போது சாமி தரிசனம் செய்தால் பக்தர்களின் தோல் நோய் மற்றும் தீராத பிணிகள் நீங்கும் என நம்பப்படுகிறது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில் தினமும் காலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டு உஷாக்கால பூஜை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து காலை 8:30 மணிக்கு காலசந்தி பூஜையும், மதியம் 12.30 மணி அளவில் உச்சிக்கால பூஜையும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 5.30 மணியளவில் சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜைக்கு பின் நடை அடைக்கப்படுகிறது.