இந்தியாவில் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது கலை நயமிக்க கங்கைகொண்ட சோழபுரம். கங்கை ஆறு வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்று நகரத்தை முதலாம் ராஜேந்திரன் சோழன் அமைத்ததாக கூறப்படுகிறது. மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழனின் மகன் ஆவான். ராஜராஜ சோழனுக்கும், திரிபுவன தேவிக்கும் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன். இவனின் இயற்பெயர் மதுராந்தகன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு புகழ் பெற்ற மன்னனாக விளங்கியவன். ராஜேந்திர சோழனுடைய காலத்தில் சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கை கரை வரை பறந்து விரிந்து கிடந்தது. சோழ சாம்ராஜ்யம் கடல் கடந்தும் பர்மா அதாவது இப்போதைய மியான்மர் கடற்கரை வரையிலும் பரவியிருந்தது. தனது தந்தை ராஜராஜன் கி.பி 1014ல் காலமான பிறகு சோழ அரசராக முடிசூட்டிக் கொண்டவன் ராஜேந்திரன்.தனது தந்தையை போல் மிகச் சிறப்புடன் ஆட்சி புரிந்தான் முதலாம் ராஜேந்திர சோழன். சோழர் தலைநகரான தஞ்சை பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தவிர காலம் தவறாமல் பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. முதலாம் ராஜேந்திர சோழன் தில்லை நடராஜ பெருமானை வணங்கி வந்தான். கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதெல்லாம் தில்லைக்கு செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது.இதனால் சோழ நாட்டின் மையப் பகுதியில் புதிய தலைநகர் ஒன்றை அமைக்க எண்ணி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.கி.பி.1919ம் ஆண்டு தனது கங்கை வெற்றியை கொண்டாடும் நினைவாக கி.பி.1923ம் ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கினான். கங்கைகொண்ட சோழபுரம் ஆறு மைல் சுற்றளவு கொண்ட நிலப்பகுதியில் அமைந்திருந்தது.நகரை சுற்றி நான்கு புறங்களிலும் ‘லேட்டரைட்’எனப்படும் செம்புராங் கற்களால் கட்டப்பட்ட பாதுகாப்பு மதில் சுவர் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் அருகே 16 மைல் நீளத்தில் 3 மைல் அகலம் கொண்ட ‘சோழகங்கம்’ என்ற ஏரி(பொன்னேரி) ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டது.
தந்தையை மிஞ்சிய தனையன்:
தான் நிர்மாணித்த தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தனது தந்தை தஞ்சையில் கட்டியதை விட பெரிதாக சிவன் கோயிலை கட்டினான் ராஜேந்திர சோழன். அந்த கோவில் கங்கைகொண்ட சோழீஸ்வரர் என்றும் பிரகதீஸ்வரர் கோவில் என்றும், பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்பட்டது. தஞ்சையில் கட்டப்பட்டிருந்த பெரிய கோவிலின் மறு பதிப்பாக கோவில் கட்டப்பட்டிருந்தாலும் இது பலவகையிலும் மாறுபட்டதாக இருந்தது. தஞ்சை பெரிய கோவில் விமானம் 4 பக்கங்களை கொண்டது. இக்கோவிலோ 8 பக்கங்களோடு நல்லிணத்தோடு அமைக்கப்பட்ட விமானம் கொண்டது.கிழக்கு நுழைவாயிலில் பெரிய நந்தி பகவான் பிரம்மாண்டமான மூலமூர்த்திகள் ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வான சாஸ்திர முறைப்படி வெகு அழகாக செதுக்கப்பட்ட நவகிரகங்கள். 60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட லிங்கம் இது தமிழகத்தில் மிகப்பெரிய சிவலிங்கம் என கூறப்படுகிறது லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும்,குளிர்காலத்தில் வெப்பத்தையும் தருகிறது. கோவிலின் கற்பக கிரகத்திற்குள் சென்று பார்த்தால் அதன் உட்புறச் சுவர்கள் எல்லாவற்றிலும் இருந்து தண்ணீர் வியர்வை வருவது போல் முத்து முத்தாக வடிவதை காணலாம். கர்ப்பக்கிரகம் ஏசி போட்டது போன்று குளுமையாக இருக்கும் கடும் கோடையில் கூட அந்த குளிர்ச்சி மாறாது.
சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்ட நந்தி:
இக்கோவிலில் உள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டுள்ளது.இந்த நந்தி மிகப் பெரியதாக காணப்படுகிறது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள லிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காண முடியாத அற்புத காட்சியாகும். 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோவிலில் உள்ளது போல் இங்கேயும் பூமியில் விழாது. மாமன்னன் ராஜேந்திர சோழன் இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு கங்கையிலிருந்து புனித நீரை தன்னிடம் தோற்றுப் போன மன்னர்களின் தலையில் ஏற்றி இங்கு கொண்டு வர செய்ததாக வரலாறு கூறுகிறது.மேலும் கும்பாபிஷேகம் செய்யும் புனித நீரை கோவிலுக்கு உள்ளே கிணறு வெட்ட செய்து அந்த புனித நீர் அங்கு வந்து சேரும்படி நேர்த்தியாக மன்னன் ராஜேந்திர சோழன் ஏற்பாடு செய்திருந்தான்.கிணற்றுக்கு அருகில் சிங்கமுக வடிவம் அமைத்து கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் போதெல்லாம் மன்னன் அதன் வாய் வழியாக உள்ளே சென்று அந்த புனித நீரை எடுத்து தலையில் தெளித்து கொண்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மூலவர் பிரகதீஸ்வரர்:
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் மூலவர் பெயர் பிரகதீஸ்வரர். அம்பிகையின் பெயர் பெரிய நாயகி என்கிற பிரகன் நாயகி.பெயருக்கு ஏற்றாற்போல் பெரிய உருவத்தில் அம்மன் சிலை உள்ளது.கோவிலின் வலது பக்கத்தில் 20 கைகளில் ஆயுதங்கள் தாங்கி புண்சிறிப்புடன் காணப்படும் துர்க்கை அம்மன் சிலை உள்ளது. கோவிலின் தலவிருட்சம் வன்னி மரமாகும்.இக்கோவிலின் தீர்த்தம் கோவிலின் உள்ளே உள்ள சிம்மக்கிணறு. இக்கோவில் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோவில் என்றும் பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலின் முதன்மை கருவறை சுவற்றின் வெளிப்புறங்களில் அர்த்தநாரீஸ்வரர் நடராஜர் போன்ற சிவனின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் முழுவதும் பிரம்மன், திருமால், துர்க்கை,சரஸ்வதி போன்ற கடவுள்கள் 50க்கும் மேற்பட்ட சிற்பங்களாக உள்ளன.அதில் ஒரு சிற்பம் சிவன் ஒரு அடியாருக்கு மாலை அணிவிப்பது போல் அமைந்திருக்கிறது. கோவிலில் ஒரு மீட்டர் தொலைவில் கையில் எழுத்தாணியுடன் விநாயகர் சிலை உள்ளது.இந்த கோவிலில் ஒரே பதும பீடத்தில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளது சிறப்புக்குரியது.அதோடு மட்டுமில்லாமல் சோழர் கலைகளுக்கு சான்றாக விளங்கும் வெண்கல சிலைகளும் இக்கோவிலில் காணப்படுகின்றன. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்டே கோவில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ:
சோழர் கால கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து பராமரித்து வருகிறது. இதனால் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலைக் சுற்றி பார்த்து அதன் கலைநயத்தை கண்டு அதிசயிகின்றனர்.
கங்கைகொண்ட சோழபுரம் எங்கு உள்ளது.
தமிழ்நாட்டில் கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வருவதாக இருந்தால் சேத்தியாதோப்பு வழியாக கும்பகோணம் சாலையில் மீன் சுருட்டியை கடந்து ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு வழியாக கங்கைகொண்ட சோழபுரத்தை அடையலாம். சென்னையில் இருந்து 290 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். திருச்சியில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்திலும் கும்பகோணத்தில் இருந்து 33 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு உயிர்ப்பான சான்று.
கங்கைகொண்ட சோழபுரம் வெறும் வழிப்பாட்டு தலம் மட்டுமல்ல.அதைவிட மேலான காவியம். தமிழர்களின் அற்புதமான கட்டிடக்கலை மரபுக்கு ஒரு உயிர்ப்பாண சான்று. தென்னிந்தியாவில் உள்ள சோழர் காலத்து சிற்பங்களின் களஞ்சியமாகும்.
கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகை மேடு என்ற பகுதியில் சோழ மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை.
மன்னர் ராஜேந்திரன் நிர்மாணித்த தலைநகரான கங்கைகொண்ட சோழபுரம் பாண்டியர்களின் படையெடுப்பால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே முற்றாக அழிந்துவிட்ட நிலையில் அங்கே இருந்த அரண்மனை உள்ளிட்ட கட்டிட அமைப்புகள் வீதிகளின் பெயர்கள் போன்றவை கல்வெட்டு செப்பேடுகள் மூலமும் தொல்பொருள் ஆய்வுகளிலும் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகை மேடு என்ற பகுதியில் மன்னர் ராஜேந்திரனின் அரண்மனை இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து நடந்து வரும் அகழாய்வுகள் மூலம் மன்னர் ராஜேந்திரனின் கனவு நகரமான கங்கைகொண்ட சோழபுரம் பற்றி ஓரளவு நாம் அறிய முடிகிறது.
தொடரும் தொல்லியல் அகழாய்வு பணிகள்:
கங்கைகொண்ட சோழபுரத்தில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள உட்கோட்டை ஊராட்சியில் மாளிகை மேடு என்ற கிராமம் உள்ளது. மாளிகை மேடு பகுதியில் சோழர் கால அரண்மனை இருந்துள்ளது அகழாய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த அரண்மனை கங்கைகொண்ட சோழன் மாளிகை, முடிகொண்ட சோழன் மாளிகை, சோழ கேரள மாளிகை ஆகியவற்றை பெயர்களாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. முதலாம் ராஜேந்திரன்,முதலாம் ராஜாஜிராஜன், இரண்டாம் ராஜேந்திரன்,வீரராஜன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோர் அரண்மனையில் இருந்து அரசாணைகள் பிறப்பித்தாக கூறப்படுகிறது.பிற்கால பாண்டியர்களின் படையெடுப்பால் அரண்மனை அழிவுக்கான காரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சீனாவுடன் கொண்ட வணிகத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் 1980,1984, 1991, 1996, 2009, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.அகழாய்வில் சோழர் காலத்து செங்கல் கட்டுமானம், இரும்பு ஆணிகள், வண்ண வளையல்கள், சீன மண்பாண்டங்கள், தங்க தகடு, தங்க காப்பு, செப்புக்காசுகள் கிடைக்கப்பெற்றுள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த அரண்மனை கருதப்படுகிறது.மாமன்னன் ராஜேந்திரன் வாழ்ந்த அரண்மனையில் செப்பேடுகள், பயன்படுத்த பொருட்கள் போன்ற வரலாற்று பொக்கிஷங்களை கண்டறியும் வகையில் அகழாய்வு பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை ஊராட்சியில் உள்ள மளிகைமேடு பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது செங்கல் கட்டுமானங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் இரும்பு ஆணிகள், செம்பினால் ஆன பொருட்கள், செப்பு காசுகள், தங்க காப்பு, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல் உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்துள்ளன. இவை 11 மற்றும் 12 ம் நூற்றாண்டுகளில் தமிழகம் சீனாவுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பபை வெளிப்படுத்துகின்றன.
கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் எதிரே தொல்லியல் துறை சார்பில் ராஜேந்திர சோழன் வரலாற்று அகழ்வைப்பகம் உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வுகளின் போது சோழர் அரண்மனையின் அடிதளத்தில் செங்கல், செப்பு காசுகள், மண்பானைகள், தங்க காப்பு, பழமை வாய்ந்த கருங்கல் சிலைகள் உள்ளிட்ட வரலாற்று பொக்கிஷங்களாக கருதப்படும் பல பொருட்கள் கிடைத்துள்ளன. அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட பொருட்களை கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு எதிரே தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் ராஜேந்திர சோழன் அகழ்வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சோழர் கால பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர். அதனைப் பார்க்க நபர் ஒருவருக்கு ரூபாய் ஐந்து வசூலிக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த அகழ்வைப்பகத்திற்கு சென்று சோழர் காலத்து பழமை வாய்ந்த பொருட்களை கண்டு அதிசயித்து வருகின்றனர்.
ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம்:
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாசி மகா சிவராத்திரி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 100 மூட்டை பச்சரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தை சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் எடுத்துச் சென்று லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை அடுத்து மாலையில் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமான மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவது என்றும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த அன்னாபிஷேகத்தை வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.பின்னர் இரவில் சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டு மீதமுள்ள சாதம் அருகில் உள்ள ஏரிகள், குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுவது வழக்கம். மேலும் கோவிலில் பங்குனி திருவிழா மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பிரதோஷ வழிபாடு ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் விவேகானந்தர் பேரவையின் சார்பில் மகா அபிஷேகம்.
கங்கைகொண்டபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் சிதம்பரம் விவேகானந்தர் பேரவை சார்பில் அருள்மிகு பெரியநாயகி சமேத பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10.00 மணி அளவில் தொடங்கி மதியம் 1.00 மணி வரையில் நடைபெறும் மகா அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். மகா தீபாராதனைக்கு பிறகு அன்னதானம் நடைபெறுவது வழக்கம்.
85 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்:
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 85 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கடந்த 1932ம் ஆண்டு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 85 ஆண்டுகளுக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2017 ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்துள்ளது கும்பாபிஷேகத்திற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கை நதியில் இருந்து 108 குடங்களில் புனித நீர் எடுத்துவரப்பட்டு இக்கோவிலின் குறிப்புகள் கொண்ட, தஞ்சை மாவட்டம் திருலோகி எனும் இடத்தில் வைக்கப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மிகச்சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் திறக்கப்படும் நேரம்:
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் தினமும் காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.00மணி வரை திறந்திருக்கும். மாலையில் 4.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டுள்ளது. சேக்கிழார் பெரியபுராணம் பாடுவதற்கு தூண்டுகோலாக இருந்த இடம். இக்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள மூலவரான பிரகதீஸ்வரருக்கு 25 மீட்டர் நீளம் உள்ள வேட்டியும், 14 அடி உயர மாலையும் பெரியநாயகி அம்மனுக்கு ஒன்பது கஜ புடவையும் சாத்துவது வேண்டுதலில் சிறப்பானதாக கூறப்படுகிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் மௌன சாட்சியாக காட்சியளிக்கும் கோவில் மற்றும் ஏரி.
வரலாற்று சிறப்புமிக்க உன்னதமான தலைநகர் கங்கைகொண்ட சோழபுரம் அங்கே இருந்தது என்பதற்கு அடையாளமாக மாமன்னர் ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் மற்றும் சோழங்கம் ஏரி ஆகிய இரண்டு மட்டுமே ஆயிரம் ஆண்டு அற்புத சாதனைகளுக்கு மவுன சாட்சியாகக் காட்சியளித்து கொண்டிருக்கின்றன.