துர்வாசருக்காக நடனமாடியவர் கற்பக விநாயகர்.


பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய(Aether) ஸ்தலமாக விளங்குவது புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில். இக்கோயிலில் நடுநாயகமாக ஆடல்வல்லான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை. சிதம்பரம் கோயிலில் நான்கு கோபுர வாயில்கள் வழியேயும் சென்று நடராஜரை தரிசனம் செய்ய முடியும். நான்கு கோபுரங்களின் வழியேயும் வருகை தரும் போது முதற்கண் முழு முதற்கடவுளாகிய விநாயகரை வழிபடும் வகையில் அமைந்த ஒரு அற்புத தலம் சிதம்பரம். இதில் மேற்கு கோபுரம் வழியே நடராஜரை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் ஸ்ரீ கற்பக விநாயகரை வழிபட வேண்டும். மேற்கு கோபுரத்தில் கல்ஹாரம் எனும் அமைப்பில் கருங்கல் புடைப்பு சிற்பமாக அமைந்திருப்பவர் ஸ்ரீ கற்பக விநாயகர். அந்த புடைப்புச் சிற்பத்தை மையமாகக் கொண்டு கோயில் அமைந்திருப்பது வெகு சிறப்பானது.பொதுவாக விநாயகர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் ஸ்ரீ கற்பக விநாயகர் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

மேற்கு கோபுர வாயில் வழியாக வந்த துர்வாசர் முனிவர்.

பொதுவாக விநாயகர் கோயில்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் கற்பக விநாயகர் மட்டும் மேற்கு முகமாக அமைந்துள்ளது குறித்து புராண வரலாறு உள்ளது. அத்ரி முனிவரின் புத்திரரும், பெரும் தவ வலிமை கொண்டவருமான அதேசமயம் அதீத முன் கோபம் கொண்டவரும், கோபம் வந்தால் உடனே சாபம் அளிப்பவருமாகிய துர்வாச முனிவர் ஒரு சமயம் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானின் திருநடனத்தைக் காண தன் சீடர்கள் சூழ பரிவாரங்களோடு மேற்கு கோபுர வாயில் வழியாக வந்தார். அவர் வரும் சமயம் நள்ளிரவு பொழுதாகி கோயிலில் பூஜைகள் அனைத்தும் முடிந்து நடை சாத்தப்பட்டுவிட்டது. ஆயினும் துர்வாசர் நடராஜப்பெருமானின் திருநடனக் கோலத்தை ஆர்வமுடன் காண வருகின்றார். நெடுந்தூரத்திலிருந்து நடந்து வந்த காரணத்தினால் அனைவரும் பசியில் இருந்தனர். பசியோடும்,ஆவலோடும் வரும் துர்வாசரை காண அனைவரும் அஞ்சுகின்றார்கள். நடராஜருக்கு பூஜை முடிந்து சன்னதி மூடப்பட்டதால் நடராஜரை காண முடியாத கோபத்தில் துர்வாசர் சாபம் ஏதும் கொடுத்துவிடுவாரோ? என்று பயம் கொள்கிறார்கள். இந்நிலையில் அனைவருக்கும் அன்னமளிக்கும் அம்பிகையின் அம்சமாகிய அன்னப்பூரணி தேவி இந்த நிலைமையை சமாளிக்க உடனே தோன்றி முதலில் துர்வாசர் முதற்கொண்டு சீடர்கள் வரை அனைவருக்கும் அன்னமிட்டு வயிற்றைக் குளிர்விக்கின்றார்.

தந்தைக்காக தாண்டவம் ஆடிய தனயன்.

பசி தீர்ந்து வயிறு குளிர்ந்த அனைவரும் மனம் குளிர நடராஜரை தரிசனம் செய்ய வருகின்றார்கள். ஆயினும் நடராஜருக்கு பூஜைகள் முடிந்து கதவுகள் சாற்றப்பட்ட நிலையில் எப்படி நடராஜரை தரிசனம் செய்ய முடியும். இங்குதான் விநாயகர் அருள் பாலிக்கின்றார். தரிசனம் செய்ய வரும் அனைவரையும் மேற்கு கோபுரத்தின் வாயிலில் கற்பக விநாயகர் தோன்றி வரவேற்கின்றார். துர்வாசரும் அவருடைய சீடர்களும் விநாயகரை வணங்கி வழிபடுகின்றார்கள். விநாயகர் துர்வாசரின் நடராஜர் தரிசன விருப்பத்தை மனதில் கொண்டு தன் தந்தையாகிய நடராஜப்பெருமான் எப்படி ஆனந்த நடனக்காட்சியை நல்கினார் என்பதை,தனது பெருத்த உடலோடு, விடைத்த பெரிய காதுகளோடு, சலங்கை ஒலிக்க, அங்கங்கள் குலுங்க நடனமாடிக் காட்டுகின்றார். இதனைக் கண்டு அனைவரும் விநாயகர் ஆட்டத்தில் மனம் குலுங்கி சிரித்து மகிழ்கின்றனர்.இந்த தாண்டவத்தை கண்ட அனைவரும் நடராஜப் பெருமானின் திருக்கோலத்தை நினைத்து மனம் குளிர்கின்றனர். துர்வாசரும் கண்ணால் கற்பக விநாயகர் தந்த காட்சியைக் கண்டு உள்ளம் குளிர்ந்து உவகை கொண்டு நடராஜர் நடனத்தை தரிசித்த திருப்தியுடன் நடராஜரை தரிசிக்காமலேயே தனது ஆசிரமம் திரும்புகிறார். இதுவே கற்பக விநாயகர் மேற்கு கோபுர கல்ஹாரத்தில் குடி கொண்ட புராணமாகும்‌.ஸ்ரீ கற்பக விநாயகரே சிதம்பரம் கோயிலின் தல விநாயகராக கொண்டாடப்படுகின்றார். பொதுவாக விநாயகர் கோயிலில் மூஞ்சுறு எனும் எலி வாகனம் தான் விநாயகர் சிலை எதிரில் அமைந்திருக்கும். ஆனால் கற்பக விநாயகர் கோயிலில் நடேச அம்சமாக நாட்டியம் ஆடியவருக்கு எதிரில் நந்தி அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.

14ஆம் நூற்றாண்டில் வைக்கப்பட்ட வில்வமரம்.

நடராஜர் அம்சமாக விளங்கிய விநாயகர் கோயிலுக்கு நேர் எதிரே சிவ விருக்ஷமாகிய வில்வ மரத்தினை(Aegle marmelos) உமாபதி சிவம் ஸ்தாபித்ததாக கூறப்படுகிறது. 14ம் நூற்றாண்டில் வைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வில்வ மரம் இன்றும் இங்கு காணப்படுகிறது. இந்த மரத்தின் அருகே நாகம் இருந்ததால் கற்பக விநாயகர் கோயிலில் ராகுவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நடராஜர் கோயிலுக்கு மேற்கு கோபுரம் வழியாக வரும் பக்தர்கள் கற்பக விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.விநாயகரை தரிசித்த உடன் முருகனையும் வழிபட வேண்டும் அல்லவா? கற்பக விநாயகரை தரிசித்து விட்டு மேற்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று இடதுபுறம் திரும்பினால் மேற்கு கோபுரத்தில் கல்ஹாரத்தில் புடைப்புச் சிற்பமாக விளங்கும் குமரக் கோட்டத்தில் அமைந்திருக்க கூடிய முருகப் பெருமானை வழிபட வேண்டும். தாண்டவம் ஆடிய விநாயகர் மற்றும் முருகனின் தரிசனத்திற்கு பிறகு ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

இதே விநாயகர் கூத்தாடும் விநாயகராக அருள்பாலிக்கின்றார்.

இதே விநாயகர் சிதம்பரம் பெரியார் தெருவில் கூத்தாடும் விநாயகர்(என்கிற) நர்த்தன விநாயகராக அருள்பாலித்து வருகின்றார். சிதம்பரத்தில் 75 ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்த இந்த விநாயகர் கோவிலில் மட்டும் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.கடந்த 2020ம் ஆண்டில் இந்த கோவில் கற்கோவில் ஆக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.