ஆகாய தலத்தில் ஆனந்த திருநடனம் புரியும் நடராஜர்.


சிதம்பரம் ரயில் நிலையம்

பொதுவாக கோயில் என்று சொன்னாலே திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை தான் குறிக்கும். ‘சைவர்கள் கோயில்’ என்றாலே இத்தலத்தையே குறிக்கப் பெறும் அளவிற்குத் தனிப்பெருஞ் சிறப்புடையதாகும்.பஞ்சபூத தலங்களில் இது ஆகாய தலமாக விளங்குகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலும் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது. சென்னைக்கு தெற்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. மதுரையில் இருந்து வடகிழக்கே 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.கடலூர்-மயிலாடுதுறை இடையே சிதம்பரம் உள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் இறைவன் மூன்று நிலைகளில் காணப்படுகின்றார்.அருவம் (மந்திர ரூபமாக சிதம்பர ரகசியத்தில்)அரு உருவம் (ஸ்படிக லிங்கம்) உருவம் (ஆனந்த திருநடனத்துடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ நடராஜர்). இக்கோயிலில் பொற்கூறையின் கீழ் இறைவன் ஆனந்த தாண்டவக்கோலத்தில் அருள் பாலிப்பதால் பொன்னம்பலம் எனவும் பெயர் பெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி அம்பாளுடன்,ஆனந்த தாண்டவக் கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீ நடராஜர்.வலது பக்கத்தில் சிதம்பரம் ரகசியம் உள்ளது.

தரிசித்தால் முக்தி தரும் தலம்.

இக்கோயிலில் இறைவன் ஆதிமூலநாதர், அம்பாள் உமையப் பார்வதி, நடராஜர், அம்பாள் சிவகாமசுந்தரி ஆகியோர் அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலின் தலவிருட்சம் தில்லை மரம். ஆதிகாலத்தில் இப்பகுதி முழுவதும் தில்லை மரங்கள் அடர்ந்து வனமாக இருந்ததால் இந்த ஊர் தில்லை என்று அழைக்கப்பட்டது. பின்னர் சிற்றம்பலம் என்பது மருவி சிதம்பரம் என அழைக்கப்பட்டு வருகிறது. இத்தலம் தரிசிக்க முக்தி தரும் தலம் என போற்றப்படுகிறது. திருவாரூரில் பிறக்கவும், காசியில் இறக்கவும், திருவண்ணாமலையை நினைக்கவும் முக்தி தரும் தலங்களாக எண்ணப்படுகிறது. சிவபெருமான் திருக்கோயில் கொண்டுள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் 274 ஆகும்.அவற்றுள் 12 திருமுறைகளாலும் போற்றப்படும் திருத்தலம் சிதம்பரமாகும். எனவே இத்திருத்தலம் கோயில் என்றே போற்றப்படுகின்றது. ஈசன் இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்த போது, முதலில் ஆகாயம் தான் தோன்றியது. அதன்பிறகே காற்று, நீர், நிலம்,நெருப்பு தோன்றின.எனவே சிதம்பரம் முதல் தலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. சிவ வழி பாட்டை தொடங்குபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பார்கள். சிதம்பரம் என்றாலே நமக்கு நடராஜர் தான் நினைவிற்கு வருவார். ஒரு காலை தூக்கி நாட்டியமாடும் நடராஜரின் உருவமேனி வித்தியாசமானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராது

சிதம்பரத்தில் கானாமல் போன தில்லை மரங்கள்.

சிதம்பரம் அருகே பிச்சாவரம் பகுதியில் அடர்ந்து வளர்ந்து காணப்படும் தில்லை மரங்கள்.

சிதம்பரத்தில் ஆதி காலத்தில் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இந்த ஊரின் பெயரே தில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நாளடைவில் இந்தத் தில்லை மரங்கள் சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. நடராஜர் கோயிலின் தலவிருட்சமே தில்லை மரம் தான். ஆனால் நடராஜர் கோயிலில் பெயரளவில் கூட இந்த தல விருட்சம் இல்லை. ஆனால் சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே உள்ள சுரப்பண்ணை காடுகளில் தில்லை மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகிறது. இந்த தில்லை மரங்கள் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.

வானலாவிய நான்கு ராஜ கோபுரங்களுடன் காட்சியளிக்கும் நடராஜர் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கிழக்கு ராஜகோபுரம்

சிதம்பரம் நகரின் மையப் பகுதியில் சுமார் 51 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோயிலின் நான்கு கோபுரங்களும் நான்கு ராஜகோபுரங்களாக அமைந்துள்ளன. வானலாவி திகழும் நான்கு ராஜகோபுரங்களோடும், அகன்று உயர்ந்த 4 கோபுர வாயில்களையும் கொண்டு விளங்கும் இக்கோயிலுக்குச் அப்பர்,சம்பந்தர், சுந்தரர்,மாணிக்கவாசகர், ஆகிய நால்வரும் வருகை தந்து எம்பெருமான் நடராஜரை கண்டு வணங்கி போற்றி பதிகங்களை பாடியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோபுர வாயில் வழியாக சென்றுள்ளனர். கிழக்கு கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும்,தெற்கு கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், மேற்கு கோபுர வாயில் வழியாக அப்பரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும் சென்று சித்சபையில் நடனம் புரியும் நடராஜரை கண்டு வணங்கி வழிபட்டுள்ளனர். இக்கோயிலின் நான்கு ராஜ கோபுரங்களில் கிழக்கு, தெற்கு, மேற்கு கோபுரங்கள் 135 அடி உயரம் கொண்டவை. வடக்கு கோபுரம் மட்டும் 140 அடி உயரம் கொண்டது. இக்கோபுரங்களில் ஆடல் கலை சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. சிவபெருமான் ஆடிய 108 கரணங்களும், ஸ்லோகங்களும் மேல கோபுரத்தில் உள் வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளன. இது போன்று தெற்கு, வடக்கு, கிழக்கு கோபுரங்களிலும் இக்கரணங்கள் குறித்து சிற்ப அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ ஆதி மூலநாதர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஸ்ரீ ஆதிமூல நாதர் சந்நதி.

சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே பலர் நடராஜர் தான் என நினைத்துக் கொண்டு இருப்பார்கள் ஆனால் இத்தலத்து மூலவர் சுயம்புலிங்கமாக உருவான ஆதிமூலநாதர் தான். பதஞ்சலி, வியாக்ரபாத, ஜைமினி முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே சிதம்பரம் தில்லைவனமாக இருந்த போது சுயம்புலிங்கமாக உருவான ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன் பதஞ்சலி வியாக்ரபாத, ஜைமினி முனிவர்கள், தில்லைவாழ் அந்தணர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் அனைவரும் தரிசிக்கும் வகையில் உமையவளுடன் நடனம் ஆடினார் சிவபெருமான். அதுவே ஆனந்த தாண்டவம் நடனமாகும்.இந்த அற்புதமான நிகழ்வு சிதம்பரத்தில் தை மாதத்தில் பவுர்ணமியுடன் கூடிய பூசத் திருநாளில் நடந்ததாக புராண வரலாறு சொல்லுகிறது.இந்த ஆனந்த நடனக் கோலத்தில் தான் நடராஜர் சிதம்பரம் கோயில் சித்சபையில் காட்சியளிக்கிறார். சிவபெருமான் தைப்பூசத் திருநாளில் ஆனந்த நடனத்தை அருளியதால் இன்றும் சிதம்பரத்தில் தைப்பூச திருவிழா பத்து நாட்கள் பிரமாதப்படுகிறது.

ஊர்த்துவத் தாண்டவம் ஆடி காளியை வென்ற நடராஜர்

சிதம்பரம் நடராஜர் கோயில் கீழ கோபுரம் பக்கவாட்டில் ஊர்த்துவத் தாண்டவ கோலத்தில் சிவபெருமான்.

ஒரு முறை காளி சிவனை போட்டி நடனத்திற்கு அழைக்க நடராஜர் ஊர்த்துவத் தாண்டவம் ஆடி காளியின் செருக்கை அடக்கித் தில்லையின் வடபால் அமர்க என கட்டளையிட அதுவே தற்போது தில்லையின் எல்லையில் அருள் பாலித்து வரும் தில்லைக் காளி கோயிலாகும். சிவபெருமான் புரிந்தருளும் ஆடலைத் தான் தாண்டவம் என்பார்கள். ஆனந்த கூத்தனின் தாண்டவம் ஏழாம்.அவை காளிகா தாண்டவம், கௌரி தாண்டவம், சந்தியா தாண்டவம், சங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவத் தாண்டவம் மற்றும் ஆனந்த தாண்டவம் ஆகும். இவற்றில் சிதம்பரம் கோயிலில் புரிவது ஆனந்த தாண்டவமாகும். இங்கு சிவபெருமான் பொற்கூரையின் கீழ் ஆனந்த தாண்டவக் கோலத்தில் அருள் பாலித்து வருகிறார்.

பொற்கூரையின் கீழ் அருள் பாலித்து வரும் நடராஜர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்கூரையின் கீழ் நடராஜர் அருள் பாலித்து வருகிறார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்கூரையின் கீழ் சிற்றம்பலத்தில் ஆனந்த தாண்டவக் கோலத்தில் நடராஜர் அருள் பாலித்து வருகிறார். நடராஜபெருமானது குனித்த புருவத்தையும், கோவைப்பழம் போல சிவந்த வாயினையும், குமிழ்ச்சிரிப்பையும், பரந்து விரிந்த சடையையும், பால் போன்ற திருநீற்றையும், அருள் செய்ய மகிழ்ச்சியுடன் தூக்கிய திருவடியையும் காணும் பேறு வாய்க்கப்பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டத்தக்கதே என்கிறார் அப்பர் பெருமான். நடராஜப்பெருமானின் உடுக்கை படைத்தலையும், அபயக்கரம் காத்தலையும், அக்னி அழித்தலையும், ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி அருளுதலையும் குறிப்பால் உணர்த்துகின்றன. இந்த ஐந்தையும் பஞ்ச கிருத்தியம் என்று கூறுவார்கள்.தில்லை நடராஜர் கருவறைக்கு 5 படிகள் ஏற வேண்டும். அவை சிவபெருமானின் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை உணர்த்தும் பஞ்சாட்சர படிகள் எனப்படும். நடராஜரின் திருஉருவத்தை சுற்றி அமைந்திருக்கும் திருவாசி பிரணவத்தின் வடிவமாகும். திருவாசியில் தீச்சுடர் போல் தென்படும் அமைப்புகள் மந்திர மாத்ருகா அட்சரங்கள் என்னும் மூலமந்திர எழுத்துக்களைக் குறிக்கும். நடராஜரின் இடப்பக்கத்தில் அம்பிகை சிவகாமசுந்தரி அருள் பாலித்து வருகிறார்.பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாய வடிவில் அங்கு சிவபெருமான் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் நடராஜருக்கு வலப்பக்கம் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. ரத்தினசபாபதி என்ற சிறிய நடராஜர் விக்ரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும் இன்றும் பூஜித்து வரப்படுகிறது. நடராஜர் சந்நதி பெரும்பாலும் தெற்கு நோக்கியே அமைந்திருக்கும். சிதம்பரம் நடராஜப் பெருமான் தெற்கு நோக்கி அருள் பாலித்து வருகிறார்.

மனித உடலமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள சித்சபை.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மனித உடலமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள சித்சபை

மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப்பகுதியாக சிதம்பரம் கோயில் உள்ளது. நடராஜர் கோயிலில் 5 சபைகள் உள்ளன. நடராஜர் ஆனந்த நடனமாடும் இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இது நாளடைவில் மருவி சிற்சபை, சித்சபை என அழைக்கப்படுகிறது. இந்த சித்சபையானது நமது உடல் அமைப்பை அப்படியே ஒத்துள்ளது. சித்சபை மேல் வேயப்பட்டுள்ள பொற்கூரையில் 21,600 பொன் ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசக் காற்றின் எண்ணிக்கை 21,600 ஆகும். இதே போன்று பொற்கூரையில் 72,000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கை 72,000 ஆகும். ஒன்பது வெளி வாசல்கள் உள்ளன. இவை மனிதனின் ஒன்பது துவாரங்களை குறிக்கும். நமசிவாய ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் வகையில் 5 வெள்ளிப் படிகள் உள்ளன. தில்லையம்பலம் உலகத்தின் உயிர்நாடியாக, விஞ்ஞானத்தின் மையமாக, மனித வாழ்க்கையின் ஆதாரமாக, மெய்ஞானம் பிரகாசமாக உள்ளது.

கோயிலில் உள்ள 5 சபைகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜசபை என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐந்து சபைகள் உள்ளன. நாட்டிய நாயகன் நடராஜர் நடனமிடும் சபைக்கு பெயர் சித்சபை. சித்சபைக்கு முன் உள்ள மண்டபம் கனகசபை எனப்படும். கோயில் கொடிமரத்திற்கு எதிரே உள்ள மண்டபத்தில் நடராஜர்,காளியுடன் போட்டி நடனம் ஆடிய போது சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் ஆடி வென்ற இடத்திற்கு பெயர் நிருத்த சபை எனப்படுகிறது. நிருத்த சபையில் வெள்ளிக் கவசம் அணியப் பெற்றுள்ள ஊர்த்துவத் தாண்டவரின் தரிசனம் கண்கொள்ளாக் காட்சியாகும். உற்சவ மூர்த்திகள் உள்ள இடம் தேவசபை எனப்படுகிறது. ஆண்டுக்கு இரு முறை திருவிழாவின் போது நடராஜருக்கு மகாபிஷகம் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு ராஜசபை என கூறப்படுகிறது.

சிவபெருமான் காளியுடன் போட்டி நடனமாடிய நிருத்த சபை.

சிதம்பர ரகசியம்

ஏதேனும் நாம் ரகசியமாக வைத்திருந்தால் அது என்ன சிதம்பர ரகசியமா?என்பார்கள் ஆடல் வள்ளல் வீற்றிருக்கும் சிதம்பர நடராஜர் கோவிலுக்கு சென்றால் சிதம்பர ரகசியம் பார்த்தீர்களா என்பார்கள் அது என்ன சிதம்பர ரகசியம். திருவாரூரில் மண்ணாக திருவண்ணாமலை யில் நெருப்பாக திருவானைக்காவல் நீராக திருக்காலத்தில் காற்றாக வழிபடப்படும் இறைவனை சிதம்பரத்தில் ஆகாய உருவில் வழிபடுவது தான் அந்த ரகசியம் நடராஜர் கோயில் சித்சபையில் ஸ்ரீ நடராஜ பெருமான் நடன கோலத்தில் காட்சி தருகின்றார். அவருடைய வலது பக்கத்தில் திரை போடப்பட்ட நிலையில் சிறு வாயில் உள்ளது. அங்கு இறைவனை மந்திர வடிவமாக யந்திரமாக நிறுவியுள்ளனர். அந்த இடத்தில் திருவுருவம் எதுவும் தெரியாமல் தங்கத்திலான வில்வ மாலை ஒன்று தொங்கவிடப்பட்ட நிலையில் தெரியும்.இதன் மீது திரை உள்ளது.இதற்கு அர்த்தம் அங்கு இறைவன் அருவ வடிவில் (ஆகாய உருவில்) உள்ளார் என்பதுதான். இதுதான் சிதம்பர ரகசியம் என கூறப்படுகிறது. இதற்கு தினமும் இரவில் எட்டு மணிக்கு நடக்கும் இரண்டாம் காலத்திற்கு முன் சந்நதி கதவுகள் அடைக்கப்பட்டு ரகசிய பூஜை என்று கூறப்படும் பூஜை நடைபெறும்‌.தினமும் நடக்கும் ஆறு கால பூஜை என்பது ஒவ்வொரு கால பூஜை நிறைவிலும் பக்தர்களுக்கு மும்முறை திரை நீக்கி சிதம்பர ரகசியம் காட்ட பெறும் சிதம்பர ரகசியத்தை கண்டு வழிபடுபவர்களுக்கு துன்பங்கள் நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதால் பக்தர்கள் காத்திருந்து சிதம்பர ரகசியத்தை கண்டு தரிசித்து வருவது வழக்கம்.

தினமும் ஸ்படிக லிங்கத்திற்கு தான் அபிஷேகம்.

தினமும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும் கனகசபை.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறுவதில்லை. அவருக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகாபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்திலும்,அடுத்து ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் போதும் அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசியில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். புரட்டாசியிலும் வளர்பிறை சதுர்த்தசியிலும் மார்கழியில் திருவாதிரை நட்சத்திர நாளில் அபிஷேகம் நடைபெறும். ஆறாவதாக மாசி வளர்பிறை சதுர்த்தசியில் அபிஷேகம் நடைபெறும். நடராஜர் கோயிலில் தினமும் ஆறு கால பூஜையின் போது ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

தினமும் காலையில் பால் நைவேத்தியம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் அருள்பாலித்து வரும் சித்சபை.

சிதம்பரம் நடராஜப்பெருமானுக்கு நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அதில் காலை மூன்றும், மாலையில் மூன்று பூஜைகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தினமும் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியறையில் பால், பழங்கள் நைவேத்தியம் செய்து தீபாராதனை காட்டப்பட்டு சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்க பல்லக்கில் எழுந்தருள செய்து அதனை கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைப்பார்கள். பின்னர் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் பால், பழம் முதலியன நைவேத்தியம் செய்து தீபாராதனை காட்டுவார்கள். இது ‘திருவனந்தல்’ என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆறு கால பூஜைகளில் சேர்ந்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் ஆறு கால பூஜைகள்

நடராஜர் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை சந்தி என்னும் காலசந்தி முதல் கால பூஜை காலை 7.30 மணியளவில் நடைபெறும். காலை 10.00 மணியளவில் இரண்டாம் கால பூஜை நடைபெறும். இரண்டாம் கால பூஜையின் போது ரத்தின சபாபதி என்ற மாணிக்க நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும். வேறு எந்த கால பூஜையிலும் இந்த தரிசனம் காண முடியாது. பகல் 12.00 மணியளவில் உச்சி கால பூஜை நடைபெறும். இதனை தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டு மாலையில் 5.00 மணி அளவில் திறக்கப்படும்.மாலை 6.00 மணி அளவில் சாயரட்சை பூஜையும் இரவு 8.00மணியளவில் இரண்டாம் கால பூஜையும்,இரவு 10.00 மணியளவில் அர்த்த ஜாம பூஜையும் நடைபெறும். அர்த்த ஜாம பூஜையின் போது நடராஜரின் பாதுகையை தங்க பல்லக்கில் எழுந்தருளச் செய்து பள்ளியறைக்கு மேள தாளம் முழங்க கொண்டு சென்று தீபாராதனை நடைபெறும். அர்த்த ஜாம பூஜையின் போது அனைத்து கோயில்களில் உள்ள தெய்வங்களும் நடராஜர் கோயிலுக்கு வந்து ஒடுங்கி விடும் என கூறப்படுகிறது. இதனால் அர்த்த ஜாம பூஜையை தரிசித்தால் எல்லா கோயில்களின் தெய்வங்களின் அருளாசி மையும் பெற்றுத் தருகிறது.

கோயில் மணி ஓசை

சிதம்பரம் கோயிலில் உள்ள பிரமாண்டமான மணிகள்.

மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து என்ற பாடல் வரிகள் மிகவும் இனிமையானவை. ஆமாம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கால பூஜைகளின் போது எழுப்பப்படும் மணியோசை மிகவும் இனிமையானவை. வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூரணம் என்ற ஆலய மணியாகும். உலகிலேயே சிறந்த ஆலயமணி. இதற்கு இணையான மணி உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூரணமாகும். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அதுபோல எந்த அளவிற்கு சிதம்பரம் திருத்தத்தில் எழுந்தருளியிருக்கும் சிகண்டி பூர்ண மணியோசையை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கேட்டு உணர்ந்து பக்தி கொள்கிறானோ அந்த அளவிற்கு அவன் என்றும் மாறா இளமையுடன் திகழ்வான் என்பது உறுதி. இந்த மணியோசை எழுப்பப்படும்போது கண்ணை மூடி இந்த ஓசையை கேளுங்கள் பரமானந்த அனுபவத்தில் மூழ்குங்கள்.

நாயன்மார்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அழகுற காட்சியளிக்கும் நாயன்மார்கள் சிலைகள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆதிமூலநாதர் சந்நதி சுற்று பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு சிலைகள் உள்ளன. இந்த சிலைகளோடு தேவாரம் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பியின் சிலையும், பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் சிலையும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லை கோவிந்தராஜர் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ளே உள்ள கோவிந்தராஜர் பெருமாள் கோயில்

சிவன் கோவில் உள்ளே பெருமாள் கோயிலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரே இடத்தில் நின்று நடராஜரையும், கோவிந்தராஜப் பெருமாளையும் தரிசனம் செய்யலாம். இது போன்று நீங்கள் வேறு எந்த கோயிலிலும் காண இயலாது. தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் நடராஜர் கோயில் கனகசபையின் முன்பு கிழக்கு நோக்கிய ராஜகோபரத்துடன் கூடிய தனி கோயிலாக ஒரு சுற்றுடன் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவராகிய கோவிந்தராஜர் சயன கோலத்திலும், உற்சவரான தேவாதி தேவன் அமர்ந்த நிலையிலும், திருச்சித்திரக்கூடத்தான் நின்ற நிலையிலும் எழுந்தருளி அருள்பாளிக்கின்றனர். மூலவர் சாத்வீக விமானத்தின் கீழ் யோகசயனத்தில் உள்ளார். இவ்வாலய சுற்றுப்பிராகரத்தில் சக்கரத்தாழ்வார்,நரசிம்மர், வேணுகோபாலர்,ஆழ்வார்கள் ஆஞ்சநேயர் முதலான மூர்த்திகளுக்கு சந்நதிகள் உள்ளன. நடராஜர் கோயில் நிருத்த சபை அருகில் தாயாருக்கு தனியே ஒரு சுற்றுடன் கூடிய கோயில் உள்ளது. அருகில் கண்ணாடி மாளிகையும் உள்ளது. திவ்ய தேசங்களில் இது தில்லை திருச்சித்திரக்கூடம் என்ற பெயரில் உள்ளது. இது திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகிய இருவராலும் 32 பாசுரங்களால் மங்களாசாசனம் பெற்ற திருக்கோயிலாகும்.

சிவகாமியம்மன் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் சந்நதி.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வெளி பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபத்தை அடுத்து தனிப்பெருங்கோயிலாக அமைந்துள்ளது சிவகாமியம்மன் கோயில். இக்கோயில் இரு சுற்றுகளை உடையது. இக்கோயிலை அனபாய சோழன் ஆகிய இரண்டாம் குலோத்துங்கன் கட்டியதாக கூறப்படுகிறது. இங்குள்ள சிவகாமசுந்தரி அம்மனின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. இக்கோயில் வெளிப்பிரகாரத்தில் சித்திரகுப்தன் அருள் பாலித்து வருகிறார். மேலும் நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆதிசங்கரர், ஸ்ரீ சக்கரம் ஆகிய சந்நதிகள் உள்ளன. இந்த ஆலயத்தின் உள் சுற்றுப் பிரகாரத்தில் சப்த மாதாக்கள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் சந்நதிகள் உள்ளன. கோயிலில் ஐப்பசி பூர விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

புண்ணிய தீர்த்தம் சிவகங்கை குளம்

சிதம்பரம் கோயிலுக்குள்ளும், நகரை சுற்றியும் தெய்வத்தன்மை வாய்ந்த புண்ணிய தீர்த்தங்கள் 10 உள்ளன. இவற்றுள் நடராஜர் கோயில் உள்ளே சிவ வடிவில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தம் முதன்மை பெறுகிறது. தீராத நோயால் பீடிக்கப்பட்டிருந்த சிம்மவர்மன் என்ற அரசன் இந்த சிவகங்கை குளத்தில் நீராடியதால் நோய் நீங்கி பொன்னிறம் பெற்று இரண்யவர்மன் என்று அழைக்கப்பட்டான் என்று வரலாறு கூறுகிறது. சிவகங்கை குளம் 160 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டதாகும். இதன் நான்கு புறமும் திருச்சுற்று மாளிகையும், அழகிய படிகளும் அமைந்துள்ளன. இக்குளத்தில் மூன்று பக்கங்களில் சிவபெருமானின் முக்கண்களைப் போல 3 மண்டபங்களுடன் கூடிய துறைகள் உள்ளது. இக்குளத்தின் மேற்கில் நீரில் பெரிய சிவலிங்கம் ஒன்று உள்ளது. அந்த லிங்கத்திற்கு கூத்தபிரானுடைய ஆறு அபிஷேக நாட்களிலும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.என்றும் வற்றாத நிலையில் உபயோகத்தில் உள்ள செம்மையான திருக்குளமாக விளங்குகிறது சிவகங்கை குளம். இத்தீர்த்தத்தில் அமாவாசை நாட்கள், கிரகண நாட்கள், தைப்பூசம் முதலிய நாட்களில் தீர்த்தவாரி விழா நடப்பது வழக்கம். இக்குளம் வெளிப்பிரகாரத்தில் சிவகாமியம்மன் கோயிலுக்கும்,ஆயிரம் கால் மண்டபத்திற்கும் இடையே உள்ளது.

பாண்டியநாயகர் கோயில்

அழகான தேர்போன்று அமைந்த வள்ளி, தெய்வானை உடனாகிய மயில்மீதமர்ந்த முருகன் கோயிலாகும். இக்கோயிலின் முகப்பில் தேர் உருளைகள், யானைகள் வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் தேர் அமைப்பில் அமைந்திருந்ததால் இங்கு எழுந்தருளிய முருகன் பாண்டியநாயகம் என போற்றப்படுகிறார். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என்ற கருத்தில் பாண்டிய நாயகன் என பெயர் பெற்றது என கருதுவதற்கும் இடம் உண்டு. கட்டிட அமைப்பினை நோக்கினால் இது சோழர் காலத்தின் பணியே என்பது நன்கு புலனாகும்.இக்கோயில் மண்டபத்தில் மேற்கில் கந்தபுராண வரலாறுகளை ஓவியக் காட்சியாக வரையப்பட்டுள்ளது. இதனை யாவரும் கண்டு மகிழும் முறையில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இரு பெரும் திருவிழாக்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆணி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் என ஆண்டுக்கு இரு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். திருவாதிரை விழா இக்கோயிலில் மிக விசேஷமானது. திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி பத்து நாள் விழா நடைபெறும் இத் திருவிழாவில் ஒரு தனி விசேஷம் உண்டு. விசேஷம் மாணிக்கவாசகருக்கு அமைவது.பத்து நாட்களிலும் சாயரட்சை பூஜையின் போது மாணிக்கவாசகர் சுவாமியின் சந்நதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாடல்கள் பாடி,சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் பத்தாம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாராதனை நடைபெறும். ஆனித் திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு மிக்கது. என்றும் ஒளி குன்றாமல் வடக்கில் தோன்றி வழிகாட்டும் துருவ நட்சத்திரத்திற்கு உரிய சிறப்பு உத்திர நட்சத்திரத்துக்கு உண்டு என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனி மாத உத்திர நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் துருவ நட்சத்திரமானது தனது துணை நட்சத்திரங்களுடன் சிதம்பரம் ராஜ்யசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு மேலாக காட்சியளிக்கும் என பழமையான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வெளிவரும் காஸ்மிக் ரேய்ஸ் எனப்படும் வானியல் கதிர்கள் நம் உடலில் பட்டால் மனதுக்கு உறுதியும், நினைத்ததை முடிக்கும் ஆற்றலும் கூடும்.அதோடு அதிகாலையில் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் சிறப்பும் சேரும்போது அதனால் உண்டாகும் நற்பலன்களை அளவிட இயலாது. ஆனித்திருமஞ்சனத்தன்று மிகவும் விசேஷமான பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இறைவனுக்கு மகா அபிஷேகத்தின் போது தங்க காசுகளால் சுவர்ண அபிஷேகமும் நடத்தப்படுகிறது. இவற்றை கண்டு தரிசித்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மூலவரே தேரில் எழுந்தருளல்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சித் சபையில் ஆனந்த தாண்டவக் கோலத்தில் அம்பாளுடன் அருள் பாலிக்கும் ஸ்ரீ நடராஜர்,மார்கழி ஆருத்ரா தரிசன விழா மற்றும் ஆனித் திருமஞ்சன திருவிழா ஆகிய விழாக்களின் போது கோயில் சித்தபையில் இருந்து மூலவர் தேரில் எழுந்தருளி வலம் வருவதால் தேர் திருவிழா மிகவும் சிறப்பு மிக்கதாக உள்ளது. தேர் திருவிழாவின் போது அதிகாலையில் சித்சபையில் இருந்து சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஸ்ரீ நடராஜர் நடனம் ஆடியபடியே தேருக்கு எழுந்தருள்வதை காண கண் கோடி வேண்டும். பின்னர் தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து மீண்டும் இரவில் நிலையை அடையும். பின்னர் தேரில் இருந்து கோயிலில் உள்ள ராஜ்யசபை என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளச் செய்யப்பட்டு அங்கு அதிகாலையில் மகாபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து மதியம் மூன்று மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடன பந்தல் வழியாக சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப்பெருமான் நடனமாடியவாறு சித்தசபைக்கு செல்வதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசிப்பார்கள்.

இரவு 10.00 மணி வரையிலும் திறந்திருக்கும் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சந்நதிக்கு செல்லும் முகப்பு வாயில்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தில்லைவாழ் அந்தணர்கள் என்று அழைக்கப்படும் பொது தீட்சிதர்கள் இக்கோயிலை நிர்வகித்து வருகின்றனர். தினமும் காலந்தவறாது ஆறு கால பூஜைகளை இவர்கள் நடத்தி வருகின்றனர். பொதுவாக தமிழ்நாட்டில் பல கோயில்களில் இரவு 8.00 மணிக்கு மேல் தரிசிக்க முடியாது. ஆனால் சிதம்பரம் கோயிலில் இரவு பத்து மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். இக்கோயில் காலை 6:00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.