கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா கலைக்கட்டியுள்ளது. கோயிலில் முக்கிய இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கிறது. அம்பிகையை வழிபடும் விரதமே நவராத்திரி விரதம். இந்த விரதம் 9 நாட்கள் கடைபிடிக்கப்படுவதால் நவராத்திரி என்றும் சில இடங்களில் 10 நாட்கள் கொண்டாடப்படுவதால் தசரா என்றும் அழைக்கப்படுகிறது. அம்பிகையை முதல் மூன்று நாட்களில் துர்க்கையாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியாகவும் பூஜை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்டமான கொலு வைப்பது வழக்கம். நடராஜர் கோயிலில் 21 படி அருகே உள்ள சாமி அலங்கார மண்டபத்தில் சுமார் 4000 பொம்மைகளுடன் மெகா கொலு வைக்கப்படுவது வழக்கம். நவராத்திரியை முன்னிட்டு கோயில் அலங்கார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமாக கொலு வைக்கப்பட்டிருந்தது. 22 அடி உயரமும் 18 அடி அகலத்திலும், கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது.
வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள்.
12 ராசிகள், 9 நவக்கிரகங்கள் இவற்றின் கூட்டுத்தொகை வருகின்ற மாதிரி மொத்தம் 21 படிகளில் பிரம்மாண்டமாக கொலு வைக்கப்பட்டிருந்தது. தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்த கொலுவில் நடராஜர் பிரதானமாக இருந்தார். மேலே உள்ள முதல் படியில் விநாயகர்,முருகன் உள்ளிட்ட அனைத்து கடவுள்களும் கொலுவில் வைத்திருந்தார்கள். அதற்கடுத்தாற் போல் அனைத்து ஜீவராசிகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. கொலு பொம்மைகளை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கொலுவிற்கு முன் பக்கத்தில் வெள்ளி ஊஞ்சல் அமைக்கப்பட்டிருந்தது. நவராத்திரியை முன்னிட்டு தினமும் மாலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அம்பாளை சர்வ அலங்காரத்துடன், மேளதாளத்துடன் அலங்கார மண்டபத்தில் உள்ள வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து பின்னர் தீபாராதனை நடைபெற்றது. வேறெங்கும் இல்லாத விசேஷமாக இந்த கொலு மற்றும் பூஜைகளை காண சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தினந்தோறும் நவராத்திரி தினங்களில் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர். நடராஜர் கோயிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கொலுவை கண்டு தரிசித்தனர்.