தனிச்சிறப்பு பெற்று விளங்கும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி.


மகா சிவராத்திரியை முன்னிட்டு  சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் தாங்கள் கற்ற பரத நாட்டியத்தை நடராஜருக்கு நாட்டிய அஞ்சலி செலுத்தும் பெண்கள்.

சிவ வழிபாட்டு தலங்களில் மிகப் பழமையானதும் உன்னதமானதுமான ஒரு தலமாக சிதம்பரம் விளங்குகிறது. சைவ தத்துவ அடிப்படையிலும், சமய பாரம்பரியத்திலும், பஞ்ச பூதங்களும் சிவனின் அம்சங்களாக கருதப்படுகின்றன. உலக புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆகாச வடிவமாக இறைவன் வணங்கப்படுகிறார். ஆகாசம் என்பது தூய்மையான உணர் அறிவையும், உண்மை அறிவையும் குறிப்பதாகும். இங்கே உள்ள திருக்கோயில் பல்வேறு ஆன்மீக உண்மைகளை சுட்டிக்காட்டும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் நின்றாடும் நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவக் திருக்கோலம் ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல்,அழித்தல்,மறைத்தல், அருளல் என்பதை குறிக்கும் வகையில் அமைந்து உலகின் எல்லா பகுதியினரும் அதன் அழகினையும்,மறைபொருளையும் பாராட்டி வியக்கும் வகையில் உள்ளது. இந்த ஆனந்தத் தாண்டவ திருக்கோலம் நாட்டியக் கலை பயிலுவோருக்கு மன நிறைவையும், உற்சாகத்தையும் ஒருங்கே தரவல்ல ஊற்றுக் கண்ணாகும்.இந்த அடிப்படையில் நாட்டியக் கலைஞர்கள் தாங்கள் கற்ற நாட்டியத்தின் வாயிலாக அஞ்சலி செலுத்தும் உன்னத நிகழ்ச்சியே நாட்டியாஞ்சலி.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை தேஜஸ் நாட்டிய பள்ளி மாணவிகளின் குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம் நடைபெற்றது.

பாரம்பரியமாக கோயில்களில் இருந்த இந்த வழிபாட்டு முறை இடையில் மறைந்து போனது. இந்த பாரம்பரிய வழிபாட்டு முறையை மீண்டும் உயிர்ப்பித்து நிலைப்படுத்தும் நோக்கத்துடன் 1981ம் ஆண்டு நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினரால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடங்கப்பட்டது. இந்த நாட்டியாஞ்சலி. தில்லை நடராஜர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று தொடங்கி  தொடர்ந்து 5 தினங்கள் நடைபெறும்.கடந்த சில ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி விழா  கோயிலில் நடைபெறாமல் கோயிலுக்கு வெளியே நடத்தப்படுகிறது. இவ்விழா தற்போது 42 வது ஆண்டினை எட்டியுள்ளதோடு, தேசிய நாட்டிய விழாவாக இந்த விழா மலர்ந்துள்ளது‌. கடந்த சில ஆண்டுகளாக இந்த நாட்டியாஞ்சலி விழா கோயிலுக்கு வெளியே சிதம்பரம் தெற்கு வீதியில்  உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.பாரத நாட்டின் அனைத்து வகை நாட்டியக் கலைஞர்களும் பங்கு பெறும் விழாவாக மலர்ந்துள்ளதோடு வெளிநாட்டுக் கலைஞர்களும், ஆர்வலர்களும் விரும்பி வருகின்ற விழாவாகவும் உயர்ந்துள்ளது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஊட்டி பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.

300க்கும் மேற்பட்ட ஆடல் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி.

ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில் ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட ஆடல் கலைஞர்களும், 200க்கும் மேற்பட்ட பக்கவாத்திய கலைஞர்களும் பங்கு பெறும் இந்த விழாவினை மன்னார்வத் தொண்டாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தொடர்ந்து நடத்தி வருகிறது‌. இந்த நாட்டியாஞ்சலி விழாவில் பாரதத்தின் பாரம்பரியமிக்க பரதநாட்டியம், கூச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், ஒடிசி மற்றும் இதர வகை நடன கலைஞர்கள் இந்த ஐந்து நாட்களிலும் சிதம்பரத்தில் கூடி தங்கள் நாட்டிய அஞ்சலியை செலுத்துகின்றனர். பக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் அடிப்படையில் நடத்தப் பெறுவதாலேயே இந்த விழா தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.