காலம் மாறினாலும் பாரம்பரிய வழக்கப்படி சில கிராமங்களில் தொன்றுதொட்டு திருவிழாக்கள் கைவிடப்படாமல் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணமாகாத இளைஞர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிராமத்தில் பல தலைமுறைகளாக கன்னி திருவிழா என்ற பெயரில் ஒரு விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் கன்னி திருவிழா உற்சாகமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயம் செழித்து மக்கள் வளமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகவும் கன்னிகளை தெய்வமாக வழிபடும் இந்த திருவிழா சிதம்பரம் அருகே மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் தை மாதத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி முடித்துவிட்டு காணும் பொங்கல் அன்று முதல் கன்னி திருவிழா ஏற்பாடுகளை தொடங்கி விடுவார்கள்.
கானும் பொங்கல் முதல் கன்னி சிலைகளை வைத்து வழிபாடு.
காணும் பொங்கலன்று களிமண்ணால் கன்னி சிலைகளை தெருக்களில் வைத்து வழிபாட்டை கிராம மக்கள் தொடங்குவார்கள். இந்த வழிபாடு 9 நாட்கள் முடிந்த பிறகு பத்தாம் நாள் கோலாகல திருவிழாவாக கொண்டாடப்படும். இதனையடுத்து வெளியூரில் உள்ள கிராமத்தினர் மற்றும் உறவினர்களின் வருகையால் கிராமமே களைகட்ட துவங்கிவிடும். அன்மையில் சி.முட்லூர் கிராமத்தில் கன்னி திருவிழாவின் 10ம் நாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. வண்ண விளக்குகளாலும், பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டு ஊரே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.தெருக்களில் வைக்கப்பட்டிருந்த கன்னி சிலைகளுக்கு மேளதாளம் முழங்க பூஜைகள் செய்யப்பட்டு படையல் நடந்தது. பின்னர் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் கன்னி சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு தெரு முனையிலும் வைக்கப்பட்டிருந்த கன்னி சிலைகளை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும், இளம்பெண்களும் தலையில் தூக்கி ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். ஆங்காங்கே பெண்களும், ஆண்களும் வயது வித்தியாசமி இன்றி கும்மியடித்து ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும், சிலம்பம் ஆடியும் உற்சாகமாக கன்னி சிலைகளுக்கு பின்னால் சென்றனர். பின்னர் ஊரின் எல்லையில் உள்ள வெள்ளாற்றில் கன்னி சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கன்னி சிலைகளை சுமந்து வந்த ஏராளமான இளைஞர்கள் கிராம மக்கள் முன்னிலையில் அந்த சிலைகளை வெள்ளாற்றில் கரைத்தனர். சி. முட்லூர் கிராமம் முழுவதும் உற்சாகம் கரைபுரண்ட இத்திருவிழாவில் ஏராளமான சுற்றுவட்டார கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
கன்னி சிலைகளை வைத்து வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
கன்னி திருவிழா குறித்து சி. முட்லூர் கிராம மக்கள் கூறியதாவது, எங்கள் கிராமத்தில் பல தலைமுறைகளாக தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த கன்னி திருவிழா நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறவில்லை. திருமணமாகாத இளைஞர்களும், பெண்களும் வேண்டி கொண்டு கன்னி சிலைகளை வைத்து வழிபாடு செய்து வெள்ளாற்றில் கரைத்தால் அடுத்த ஆண்டு கன்னி திருவிழாவிற்குள் அவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அதே போன்று இக்கிராமத்தில் நிறைய பேருக்கு திருமணம் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.