சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரி கோலாகலம்.


சிதம்பரம் நடராஜர் கோயிலில் வானளாவி காட்சியளிக்கும் ராஜ கோபுரம்.

இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும் மகா சிவராத்திரி. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம். சிவராத்திரி என்ற பெயர் வரக்காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவு பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார்.நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் விதிப்படி அர்ச்சனை செய்தார். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களை பூசித்த இந்த இரவை தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே அதனை சிவராத்திரி என்று கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரியன் உதயமாகும் வரை,தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவித பாக்கியங்களும் தந்து முடிவில் மோட்சத்தை அளிக்க வேண்டும்,அருள் புரியுங்கள் என்று அன்னையானவர் வேண்டிக்கொண்டார். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே மகா சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற பூஜைகளில் பங்கேற்ற ரஷ்ய பக்தர்கள்.

மகா சிவராத்திரி அன்று கிடைக்கும் அபரிதமான சக்தி.

ஒரு பிரம்மாண்டமான சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமிக்கு நேரடியாக வருவதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அமர்ந்து முதுகை நேராக வைத்து  கொண்டு தூங்காமல் இருந்தால் அபரிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் நமக்கு கட்டும். இந்த சக்தி வேறு எந்த நாளிலும் கிடைக்காது என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.  எனவேதான் மகா சிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் தான் பக்தர்கள் மகா சிவராத்திரியன்று கண் விழித்து இரவு முழுவதும் முதுகை நேராக வைத்து கொண்டு தியானத்தில் ஈடுபட்டும், ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்தும் வருகின்றனர். அறிவியல் ரீதியாக மகா சிவராத்திரி தான் மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நாளில் கோள்களின் அமைப்பானது மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்தவாறு ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது.விஞ்ஞான பூர்வமாக எல்லா கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் நாளை தான் மகா சிவராத்திரி ஆக வழிபடுவதோடு இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள். அப்போது நமது முதுகு தண்டு நேர்க்கோட்டில் இருக்கும் போது குண்டலினி சக்தி மேல் நோக்கி எழும் என கூறப்படுகிறது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தியானத்தில் ஈடுபட்ட ரஷ்ய பக்தர்கள்.

கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜர் கோயிலை தான் குறிக்கிறது.

கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜர் கோயிலை தான் குறிக்கிறது இங்கு இறைவன் ஆகாய வடிவமாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலத்தை ஞான ஆகாசம் என்று கூறப்படுகிறது. இங்கு இறைவன் உருவமாகவும், அருவமாகவும் அருள்பாலித்து வருகின்றார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக நடைபெறும் ஆறு கால பூஜையடன் இரவில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உலக நலன் வேண்டி மகா ருத்ர யாகம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். உள்நாடு மட்டுமல்லாமல் ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் குவிந்தனர். வெளிநாட்டு பக்தர்கள் நமது தமிழக கலாச்சாரப்படி வேட்டி, சேலையை அணிந்து யாகங்கள் மற்றும் பூஜைகளில் பங்கேற்றனர். பின்னர் கோயில் மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டு பக்தர்களின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்தது.