27 படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி. மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ள அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம்.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககம் தனியாக செயல்பட்டு வருகின்றது.1979ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு(UGC) அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி பாடத்திட்டங்கள் ஏற்புடையது அல்ல என அறிவித்தது.இதனால் கடந்த 2015ம் ஆண்டு முதல் தொலைதூரக் கல்வியில் தடை ஏற்பட்டது. இதனையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகம் நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்திக் கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2022-23ம் கல்வியாண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் மிக உறுதியான ஒரு அறிக்கையில் இனி படிப்புகள் தொடரக்கூடாது என அறிவுறுத்தியது. இதனால் 2022-23ம்(கடந்தாண்டு) மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த (2023) மார்ச் மாதம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் நடத்த அனுமதி பெறுவதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. அதனடிப்படையில் கடந்த மாதம் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு குழுவினர் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2023-24 ம் கல்வியாண்டில் 27 படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

விண்ணப்பங்கள் விற்பனை துவக்கம்.

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக 2023-24ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகள் பருவ முறையில் தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானிய குழு மற்றும் தொலைநிலை கல்வி குழு ஆகியவை அனுமதி வழங்கி உள்ளது. இவற்றில் 22 பாடப் பிரிவுகள் முதுகலை வகுப்புகள், 5 பாடப்பிரிவுகள் இளங்கலை வகுப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் தொடங்கி வைத்தார். அப்போது பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரி பிரகாஷ், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குனர் பேராசிரியர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இந்த கல்வியாண்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம். துணைவேந்தர் பேட்டி.

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன்.

விண்ணப்பங்கள் விற்பனையை தொடங்கி வைத்து விட்டு செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் நடத்த அனுமதி பெறுவதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவில் விண்ணப்பித்திருந்தோம். அதனடிப்படையில் சென்ற மாதம் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் குழு ஒன்று இங்கு வந்து ஆய்வு செய்தது. அப்போது உள்கட்டமைப்பு பணி சிறப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து இப்போது எங்களுக்கு 2023-24 ம் கல்வியாண்டில் 27 பட்டப்படிப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவை இல்லை என்ற வகையில் இப்பொழுது 98 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.ஆக இந்த கல்வியாண்டிற்கு 125 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.அடுத்த வாரம் முதல் இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் நடத்த அனுமதி பெறப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் எப்படி இருக்கின்றதோ, தமிழக அரசின் வழிகாட்டுதல் எப்படி இருக்கின்றதோ அதன்படி தொலைதூரக் கல்வி மையத்தில் பாடப்பிரிவுகள் நடத்தப்படும். கடந்த 2021ம் கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 86 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தார்கள்.இந்த கல்வியாண்டில் குறைந்தபட்சம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

துணைவேந்தரின் சீரிய முயற்சியால் மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளது தொலைதூரக் கல்வி இயக்ககம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் கடந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் தொலைதூரக் கல்வி இயக்ககம் பொலிவிழந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசனின் சீரிய முயற்சியால் இந்த கல்வியாண்டிற்கு 27 படிப்புகளை நடத்த பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடக்கம் மேளதாளம் முழங்க,பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மீண்டும் புத்துணர்வுடன் செயல்படத் துவங்கியுள்ளது.